நவராத்திரி பண்டிகை துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய 3 பெண் கடவுளை போற்றி வழிபடும் பண்டிகையாகும். பெண் தெய்வ வழிபாட்டில் நவராத்திரி முக்கியமானது. இந்தியா முழுவதும் நவராத்திரி பண்டிகை இந்துகளால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 9 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை, அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி, கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை வழிபடுவார்கள். பத்தாம் நாள் வழிபாடு ‘தசரா அல்லது விஜயதசமி’ என்று கொண்டாடப்படுகிறது.
ஒன்பது இரவுகள், பத்து பகல்களுக்கு நவராத்திரி கொண்டாடப்படுகிறது. துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்கள் போற்றி வழிபடப்படுகிறது. த்ரிக் பஞ்சாங்கத்தின் படி, நவராத்திரி அஸ்வின் சந்திர மாதத்தின் முதல் நாளில் கட்டஸ்தாபனத்துடன் தொடங்குகிறது. கட்டஸ்தாபனத்தின் போது நிறுவப்பட்ட கலசம், பத்தாம் நாளில் நீர்நிலையில் கரைக்கப்படுகிறது.
இந்தாண்டு நவராத்திரி பண்டிகை நாளை செப்டம்பர் 26ஆம் தேதி (ஷைல்புத்ரி பூஜையில்) தொடங்கி
அக்டோபர் 5ஆம் தேதி துர்கா விசார்ஜன் மற்றும் தசரா கொண்டாட்டங்களுடன் முடிவடைகிறது. அஷ்டமி திதி அக்டோபர் 2ஆம் தேதி மாலை 6:47 மணிக்கு தொடங்கி, அக்டோபர் 3ஆம் தேதி மாலை 4:37 மணிக்கு முடிவடைகிறது என்று த்ரிக் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சக்தி தேவியின் ஒன்பது அவதாரங்களுக்கும் பூஜை செய்யப்படுகிறது. நவதுர்காவின் ஒவ்வொரு அவதாரமும் துர்கா தேவியின் தனித்துவத்தை பிரதிபலிக்கிறது. நவராத்திரி 9 நாட்களும் வெவ்வேறு பிரசாதங்கள் கடவுளுக்கு படைக்கப்பட்டு வழிபடப்படுகிறது. தமிழகத்தில் வீடுகள், கோயில்களில் வண்ணமையமான, வித்தியாசமான கொலு வைத்து நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி 9 நாட்களும் விமரிசையாக கொண்டாடப்படும். பெண்கள் 9 நாட்களும் தங்களை அலங்கரித்து பூஜை செய்து வழிபடுவர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil