நவராத்திரியின் முக்கியமான நாள்கள் சரஸ்வதி பூஜையும் விஜய தசமியும்.
கல்வி அறிவைத் தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி. கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும், ஜீவனத்திற்கும் துணை புரியும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாள்தான் சரஸ்வதி பூஜை.
சரஸ்வதி பூஜை வீட்டில் கொண்டாடுவது எப்படி?
சரஸ்வதியை வழிபடுவதற்கு முன்னதாக, பூஜை செய்யும் இடத்தை கழுவி, துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து முதலில் விநாயகப் பெருமானுக்கு பூஜைகள் செய்ய வேண்டும்.
சரஸ்வதி படத்துக்கு மல்லி, சம்பங்கி, வெண் தாமரை போன்ற வெள்ளை நிற மலர்களால் அலங்காரம் செய்யலாம். சுண்டல், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் நைவேத்தியமாகப் படைப்பது சிறப்பு வாய்ந்தது. மேலும், பொரி, கடலை, அவல், நாட்டுச் சர்க்கரை மற்றும் பழங்களையும் படையலுக்கு வைக்கலாம்.
/indian-express-tamil/media/media_files/hMJxwPvvaxv0bc2Wgx64.jpg)
சரஸ்வதி தேவியின் படத்துக்கு முன்பாக, புத்தகங்கள், பேனா ஆகியவற்றை வைத்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து வழிபட வேண்டும். இல்லத்தில் ஒரு குழந்தைக்கு மேல் இருந்தால், ஒவ்வொருவருடைய பொருளையும் பூஜையில் வைக்க வேண்டும்.
கல்வியோடு கூட, நாம் செய்யும் தொழிலும் போற்றத்தக்கது என்பதால், இதே நாள் ஆயுத பூஜையாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தினசரி நம் வாழ்வில் பயன்படுத்தும் சிறிய கத்தி, கரண்டி, வாகனங்கள் உட்பட அனைத்து கருவிகளையும் கழுவி, சுத்தம் செய்து சந்தனம், குங்குமம், விபூதி இட்டு, மலர்களால் அலங்கரித்து வழிபட வேண்டும். அலுவலகங்களில் இயந்திரங்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது.
விஜயதசமி
விஜயதசமி அன்று, மாணவர்கள் முன்தினம் பூஜையில் வைத்த புத்தகத்தை எடுத்து, சரஸ்வதியின் அருள் பரிபூரணமாக அமையட்டும் என்று பிரார்த்தனை செய்துவிட்டு படிக்கவும். தொழில் கருவிகளைக் எடுத்து வைத்து, தொழில் சிறப்பான முறையில் மேன்மையடையப் பிரார்த்தனை செய்து அன்றைய தொழிலைத் துவக்க வேண்டும்.
மேலும் விஜயதசமி நாளில் படிப்பைத் தொடங்கினால் குழந்தைகள் வாழ்வில் வெற்றி பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இதனால் அன்று கோயில்களில், குழந்தைகளை தமிழின் முதல் எழுத்தான அ என்ற எழுத்தை விரலைப் பிடித்து எழுதச் செய்து அகரம் பழக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்பிறகு, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பார்கள்.
தமிழகத்தில் இந்த ஆண்டு திங்கள், செவ்வாய் கிழமைகளில் (அக்: 23, 24) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
நல்ல நேரம்
23ம் தேதி அன்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரையிலும் மதியம் 12க்கு மேல் 1.30 க்குள் பூஜை செய்ய நல்ல நேரம் என ஜோதிட நிபுணர்கள் சொல்கின்றனர்.
மாலையில் 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் பூஜை செய்யலாம். தொடர்ந்து இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை பூஜை செய்து இறைவனை வணங்க நல்ல நேரம் ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“