2023 Navaraththiri Time and Date : நவராத்திரி பண்டிகை விழா இந்தாண்டு (2023) அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவின் முக்கிய விழாவான சரஸ்வதி பூஜை 23ஆம் தேதியும், விஜயதசமி 24ஆம் தேதியும் வருகின்றது.
மேலும், நவராத்திரி தொடக்க தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12 முதல் 1.30 மணி வரை எமகண்டம் ஆகும். தொடர்ந்து, பகல் 3 முதல் 4.30 வரை குளிகையும், மாலை 4.30 முதல் 6 வரை ராகு காலமும் வருகின்றது.
இதனால் கலசம் வைத்து வழிபடுபவர்களும், கொலு வைத்து வழிபடுபவர்களும் பகல் 12 மணிக்கு முன்பாக கொலு அமைத்துவிட வேண்டும்.
மேலும் முதல் நாள் வழிபாட்டினை மாலை 6.15 மணிக்கு மேல் தொடங்குவது சிறந்தது. மகாளய அமாவாசை அக்.14ஆம் தேதி வருவதால் வேலை பளு அதிகம் இருப்பினும் சிறிது சிறிதாக கூட கொலு வைக்கலாம்.
நவராத்திரி
நவராத்திரி நோன்பு புரட்டாசிமாதத்தில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தி தேவியை குறித்து நோற்கப்படும் நோன்பாகும்.
இது தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும்.
இந்த நோன்பு நாள்களில், தேவி மகாத்மியம், அபிராமி அந்தாதி, துர்க்கா அஷ்டகம், இலட்சுமி தோத்திரம், சகலகலாவல்லி மாலை, சரஸ்வதி அந்தாதி, மஹிஷாசுரமர்த்தினி தோத்திரம், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாடல்களை ஓதலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“