/indian-express-tamil/media/media_files/2025/05/07/UVXyioiEZAGpK5keexcm.jpg)
'அசாடிராக்டா இண்டிகா' என்றழைக்கப்படும் வேப்ப மரம் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட மரமாகும். சமஸ்கிருதத்தில், வேம்பு என்பது அரிஸ்டா, அதாவது பூரணமானது, அழியாதது மற்றும் முழுமையானது எனப் பொருள்படும். வேப்ப மரத்தின் இலைகள் மட்டுமல்ல, இவற்றின் விதைகள், வேர்கள், பட்டைகள், மற்றும் பூக்கள் பல மருத்துவ மற்றும் அழகு குணங்களைக் கொண்ட முக்கியமான கலவைகளைக் கொண்டுள்ளன. நம்முடைய வீடுகளில் அல்லது தோட்டத்தில் நிச்சயம் ஒரு வேப்ப மரம் கண்டிப்பாக இருக்கும்.
வேப்பம் பூ பாரம்பரிய சக்திவாய்ந்த மருந்தாக உள்ளன. இவற்றின் ஆரோக்கிய நன்மைகள் பல நூற்றாண்டுகளாக இப்போதும் பேசப்படுகின்றன. இவை நம்முடைய சமையலிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.இவற்றில் ரசம், பச்சடி, குழம்பு என விதவிதமாக தயார் செய்து சாப்பிடலாம்.
வேப்பம் பூவின் அற்புத நன்மைகள்:
‘சிறுகசப்பு’ சுவையுடன் இருக்கும் வேப்பம் பூவிற்கு செரிமானத்தை அதிகப்படுத்தும் சக்தி அதிகமாக உள்ளது. இவற்றை எண்ணெய் (அ) நெய்யில் இட்டு பொரித்து சாப்பிட்டு வந்தால் வாயுத்தொல்லை, வயிற்று வலி போன்றவற்றை குணமாகும். வேப்பம் பூவில் புரதம், கார்போஹைட்ரேட்டுகள், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளன. இவை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அதிக உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
வேப்பம் பூவில் காணப்படும் நார்ச்சத்து குடலின் செரிமானத்தை சீராக்கும். குடல் இயக்கத்தை மேம்படுத்தும். இதன் மூலம் பசி கட்டுப்படுத்தப்பட்டு குறைவாக சாப்பிட உதவும். எனவே எடை குறைப்பு எளிதாகும். மேலும் வேப்பம் பூவில் உள்ள மூலக்கூறு அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. வேப்பம் பூ ரத்தத்தை சுத்திகரிக்க உதவுவதால், தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உடலில் இருந்து வெளியேறுகின்றன. உடலில் இருந்து நச்சுக்களை நீங்குவதால் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது. ரத்தத்தை சுத்திகரிக்கிறது வேப்பம் பூ.
வேப்பம் பூ, கொழுப்பு வளர்சிதை மாற்றத்திற்குக் காரணமான ஹார்மோனைத் தடுக்க உதவுகிறது. எனவே, வேப்பம் பூக்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, நீரில் ஊற வைத்து தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் பருமன் குறையும். வேப்பம் பூவை உலர்ந்த நிலையிலும், பொடியாகவும் பயன்படுத்தி வரலாம். எனினும், உடல் எடை குறைப்புக்கு பயன்படுத்தும்போது, புதிதாக பறித்த வேப்பம் பூக்களை பயன்படுத்து மிகவும் நல்லது. ஒரு டேபிள்ஸ்பூன் வேப்பம் பூவை, ஒரு டம்ளர் சுடுநீரில் போட்டு 5 நிமிடங்கள் கழித்து வடிகட்டி அதில் சிறிதளவு தேனுடன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால், சருமத்திற்கு அதிகம் பயன்தரும், உடல் சூடு குறையும் என்கிறார் மருத்துவர் பொற்கொடி.
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.