/indian-express-tamil/media/media_files/2025/03/08/SdOiAaVZSv7h6qs4Qyu0.jpg)
யானை தந்தம், பற்கள் பறிமுதல்
நெல்லை மாவட்டம் களக்காடு-நாங்குநேரி சாலையில் உள்ள கடம்போடு வாழ்வு பகுதியில் நேற்று முன் தினம் இரவில் வருவாய் புலனாய்வு துறையினர் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த களக்காடு அருகே உள்ள கடம்போடு வாழ்வு தெற்கு தெருவை சேர்ந்த சுப்பையா மகனும், ஒய்வு பெற்ற ராணுவ வீரருமான அழகியநம்பியை (வயது 44) சோதனை செய்தபோது, அவர் யானை தந்தங்களை கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது
இதையடுத்து அவரை களக்காடு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில் களக்காடு வனசரகர் பிரபாகரன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அவரது கூட்டாளிகளான ஜமீன் சிங்கம்பட்டி, பஜனை மட தெருவை சேர்ந்த ஆறுமுகம் (53). அம்பை அருகே உள்ள சிவந்திபுரம், ஆறுமுகம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த வீனஸ் ஆர்பர்ட் (45), அம்பை தெற்கு ரதவீதியை சேர்ந்த கார்த்திக் (32), வள்ளியூர் கீழத்தெருவை சேர்ந்த நம்பிநாராயணன் (32) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 4.7 கிலோ எடையுள்ள 3 யானை தந்தங்கள், யானையின் பற்கள் கைப்பற்றப் பட்டது. இவைகளின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 5 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து இவர்கள் யானை தந்தங்களையும், பற்களையும் விற்பனை செய்ய முயற்சி செய்ததும் தெரியவந்தது. பின்னர் 5 பேரையும் வனத்துறையினர் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
யானை தந்தங்கள், பற்கள் இவர்களுக்கு எப்படி கிடைத்தது? யானைகளை கொன்று தந்தம், பற்கள் எடுக்கப்பட்டதா? என்பவைகள் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக மேலும் சிலரையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.