கோவையைச் சேர்ந்த கோயமுத்தூர் வடக்கு ரவுண்ட் டேபிள் 20, மற்றும் மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து 'ஃப்ளைட் ஆஃப் ஃபேண்டஸி' என்ற நிகழ்வின் மூலம், சென்னையில் உள்ள ஆதரவற்ற இல்லத்தில் இருந்து 15 குழந்தைகளை கோவைக்கு விமானத்தில் அழைத்து வந்து, கோவையில் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை தந்து இருக்கின்றனர்.
'ஃப்ளைட் ஆஃப் ஃபேண்டஸி' என்ற திட்டம் கடந்த 4 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், சென்னை அல்லது கோயம்புத்தூரில் இருந்து ஒரு ஆதரவற்ற இல்லத்தை தேர்ந்தெடுத்து அதில் மிகவும் ஒழுக்கமான, படிப்பில் சிறந்து விளங்கும், திறமையான குழந்தைகளை விமானத்தில் அழைத்து சென்று மற்ற நகரத்தின் முக்கியமான சுற்றுலா தளங்களுக்கு நேரில் அழைத்து சென்று மீண்டும் அவர்களை ஆதரவற்ற இல்லத்தில் சேர்ப்போம் என்று தொண்டு நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
/indian-express-tamil/media/post_attachments/afa77c07-ba0.jpg)
இது அந்த குழந்தைகளுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு, சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எஸ் சர்வோதயா இல்லத்தில் இருந்து 15 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அனைத்து குழந்தைகளும் தற்போது பள்ளிகளில் படித்து வருகின்றனர். அவர்கள் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு விமானத்தில் காலை 9:30 மணிக்கு வந்தனர். அவர்கள் ஸ்னோ ஃபேண்டஸி (புரூக்ஃபீல்ட்ஸ் மாலுக்குள் உள்ள பனி பூங்கா) ஆகியவற்றை கண்டு மகிழ்ந்தனர். இந்த மாலில் தங்களுக்கு தேவையான ஸ்டேஷனரி (நோட், எழுதுபொருட்கள்) பொருட்களை ஷாப்பிங் செய்தனர். மீண்டும் மாலை 6:30 மணிக்கு கோயம்புத்தூரில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்படுகின்றனர்.
இந்த பயண அனுபவம் குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாததாக இருக்கும். கடந்த நான்கு ஆண்டுகளாக ஆண்டுதோறும் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, ஆதரவற்ற குழந்தைகளுக்கு முதல் முறையாக விமானத்தில் பறக்கக் கூடிய அனுபவத்தை வழங்கி உள்ளது என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம். குழந்தைகள் அனைவரும் விமானத்தில் பறந்ததால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர் பயண துவக்கம் முதல் இறுதி வரை முழுமையாக அனுபவித்தனர். அடுத்த ஆண்டு ஒரு விமானம் முழுவதும் குழந்தைகளை அழைத்து வர முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம் என அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
பி.ரஹ்மான், கோவை