கர்ப்பமாகவோ அல்லது பாலூட்டும் தாயாகவோ இல்லாத நிலையில், உங்கள் மார்பக காம்புகளில் இருந்து திடீரென பால் போன்ற கசிவு ஏற்படுவதைக் கவனித்தால், அது சற்று குழப்பத்தை ஏற்படுத்தலாம். இந்த எதிர்பாராத அறிகுறி பலரையும் திடுக்கிட வைப்பதுடன், உடல்நலப் பிரச்சினைகள் பற்றிய அச்சத்தையும் எழுப்பலாம்.
முதலில் இது பயமுறுத்துவதாகத் தோன்றினாலும், இந்த வகை கசிவுக்குப் பல மருத்துவ விளக்கங்கள் உள்ளன. இது பலரும் உணருவதை விட பொதுவானது மற்றும் பெண்களுக்கு மட்டுமல்ல, அரிதான சந்தர்ப்பங்களில் ஆண்களுக்கும் கூட ஏற்படலாம்.
கர்ப்பமாகவோ அல்லது பாலூட்டும் தாயாகவோ இல்லாதவர்களுக்கு மார்பக காம்புகளில் பால் போன்ற கசிவு ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் யாவை?
பெங்களூரு, பன்னரகட்டா சாலையில் உள்ள எலும்பு மற்றும் பிறப்பு மருத்துவமனை மற்றும் ரெயின்போ மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் நல மருத்துவரான டாக்டர். காணா ஸ்ரீனிவாஸ் கூறுகையில், “பாலூட்டாத தனிநபர்களில் மார்பக காம்பு பால் கசிவு சில சமயங்களில் கர்ப்பத்துடன் தொடர்பு இல்லாத ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளுக்கு ஒரு பிரதிபலிப்பாக இருக்கலாம். சில சந்தர்ப்பங்களில், இது மாதவிடாய் சுழற்சியில் உள்ள ஒழுங்கற்ற தன்மைகள், கருப்பை நீர்க்கட்டிகள் அல்லது மன அழுத்தம் அல்லது எடை மாற்றங்களுடன் ஏற்படும் லேசான ஹார்மோன் மாற்றங்களுடன் கூட இணைக்கப்படலாம்.”
பொது சுகாதார நிபுணர் டாக்டர். ஜகதீஷ் ஹிரேமத் கூறுகையில், பால் கசிவுக்கான பொதுவான காரணங்களில் ஒன்று "கலக்டோரியா" (galactorrhea) எனப்படும் ஒரு நிலை. இது மார்பக பால் பொருத்தமற்ற முறையில் உற்பத்தி செய்வதைக் குறிக்கிறது. "இது ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக ஏற்படலாம், குறிப்பாக பால் உற்பத்திக்கு காரணமான புரோலாக்டின் (prolactin) ஹார்மோனின் அளவு அதிகரிப்பதால் இது நிகழலாம்."
கூடுதலாக, அடிக்கடி தொடுவது அல்லது இறுக்கமான ஆடைகளால் ஏற்படும் உராய்வு போன்ற தூண்டுதலும் உணர்வுள்ள தனிநபர்களுக்கு கசிவுக்கு பங்களிக்கலாம் என்று டாக்டர். ஸ்ரீனிவாஸ் கூறுகிறார். “இந்த வகையான கசிவு சில சமயங்களில் அவ்வப்போது ஏற்பட்டு தானாகவே சரியாகிவிடும். இருப்பினும், இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்ந்தால் அல்லது அடிக்கடி ஏற்பட்டால், குறிப்பாக எந்த உடல் தூண்டுதலும் இல்லாமல் ஏற்பட்டால், அதை புறக்கணிக்கக்கூடாது,” என்றும் அவர் எச்சரிக்கிறார்.
நோயறிதல்
டாக்டர். ஸ்ரீனிவாஸ் கூறுகையில், “நாங்கள் பொதுவாக விரிவான மருத்துவ மற்றும் மாதவிடாய் வரலாற்றைப் பதிவு செய்வதன் மூலமும், மார்பக பரிசோதனை செய்வதன் மூலமும் நோயறிதல் செயல்முறையைத் தொடங்குகிறோம். புரோலாக்டின் மற்றும் பிற இனப்பெருக்க ஹார்மோன்களை மதிப்பிடுவதற்கு ஹார்மோன் ஆய்வுகள் செய்யப்படுகின்றன, மேலும் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், இமேஜிங் ஆய்வுகள் பரிந்துரைக்கப்படலாம். பிட்யூட்டரி ஸ்கேன் பொதுவாக முதல் படி அல்ல, ஆனால் புரோலாக்டின் அளவு கணிசமாக அதிகமாக இருக்கும் போது மற்றும் பிற காரணங்கள் நிராகரிக்கப்பட்டால் இது அவசியமாகிறது.”
இதை கண்டறிய, மருத்துவர்கள் பொதுவாக புரோலாக்டின் அளவை அளவிட ஒரு எளிய இரத்த பரிசோதனையுடன் தொடங்குகிறார்கள். புரோலாக்டின் அளவு கணிசமாக உயர்ந்தால், மூளையின் எம்ஆர்ஐ போன்ற இமேஜிங் ஆய்வுகள் "பிட்யூட்டரி சுரப்பியில் உள்ள அசாதாரணங்களை சரிபார்க்க பரிந்துரைக்கப்படலாம்." கூடுதல் சோதனைகளில் தைராய்டு செயல்பாட்டை சரிபார்ப்பது மற்றும் எந்த மருந்து தொடர்பான காரணங்களையும் மதிப்பீடு செய்வது ஆகியவை அடங்கும். நோயறிதல் அறிகுறிகள், மருத்துவ வரலாறு மற்றும் ஆய்வக மற்றும் இமேஜிங் முடிவுகளின் கலவையால் வழிநடத்தப்படுகிறது, என்று டாக்டர். ஹிரேமத் கூறினார்.
எப்போது இந்த கசிவை உடனடி கவனம் தேவைப்படும் ஒரு மருத்துவ கவலையாக கருத வேண்டும்?
டாக்டர். ஸ்ரீனிவாஸ் கூறுகையில் எப்போதாவது ஏற்படும் கசிவு எப்போதும் கவலை அளிப்பதாக இருக்காது என்றாலும், எந்தவிதமான உடல் தூண்டுதலும் இல்லாமல் இது நிகழும்போது, குறிப்பாக வெளியேற்றம் கெட்டியாகவோ, தொடர்ச்சியாகவோ அல்லது மாதவிடாய் தவறுதல், பார்வை குறைபாடுகள் அல்லது புதிதாக ஏற்படும் தலைவலி போன்ற பிற அறிகுறிகளுடன் தொடர்புடையதாகவோ இருந்தால் இது ஒரு மருத்துவ கவலையாக மாறுகிறது. தோல் மாற்றங்கள், முலைக்காம்பு உள்ளிழுத்தல் அல்லது மார்பகத்தில் ஒரு கட்டி ஆகியவை வெளியேற்றத்துடன் ஏற்பட்டால் உடனடி பரிசோதனை தேவைப்படுகிறது.
ஒரு சுகாதார நிபுணர் பொதுவாக நிலைமை பொறுத்து, முன்னரே குறிப்பிட்டபடி, பல சோதனைகளை பரிந்துரைப்பார். ஆரம்பகால மதிப்பீடு மிகவும் தீவிரமான நிலைமைகளை நிராகரிக்க உதவுகிறது மற்றும் காரணம் தீங்கற்றதாக இருக்கும்போது நம்பிக்கையை அளிக்கிறது.”
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.