No Bra Day October 13- பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் முதன்மையானது. உலக அளவில் இந்தியாவில் மட்டும் அதிகப்படியான பெண்கள் மார்பகப் புற்றுநோய்க்கு ஆளாவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.
தற்போது 30 வயதுள்ள பெண்களையும் மார்பகப் புற்றுநோய் பாதிக்கிறது. உடல் பருமன், இளம் வயதில் பூப்படைதல், 30 வயதுக்குப் பிறகு முதல் குழந்தை பிறப்பது, ரத்த உறவுகளில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் இருப்பது, உணவுப் பழக்கம், உடல் பருமன், கட்டுப்படுத்தப்படாத அதிகப்படியான நீரிழிவு, புகை, மதுப்பழக்கங்கள், 50 வயதுக்கும் மேல் மாதவிடாய்ச் சுழற்சி உள்ள பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம். ஆனால், இவர்களுக்குப் புற்றுநோய் வந்தே தீரும் என்பதில்லை. மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களாலும் புற்றுநோய் வரக்கூடும்.
மார்பகத்தில் இருக்கும் புற்றுநோய் கட்டியை ஆரம்பத்தில் கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்திவிடலாம். அறியாமல் விட்டால் இவை உடலின் பிற பாகங்களுக்கும் பரவி உயிருக்கு ஆபத்தை உண்டாக்கிவிடும்.
எனவே உலகம் முழுவதும் உள்ள பெண்களிடையே மார்பக புற்றுநோய் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, 1985 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் மாதம் முழுவதும், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
இம்மாதம் முழுவதும் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிதல், அதன் அறிகுறிகள், மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய செய்ய வேண்டிய பரிசோதனைகள், சிகிச்சைகள், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வருவதற்கு வழிமுறைகள் என்று அரசும், தன்னார்வ அமைப்புகளும் சேர்ந்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றன.
/indian-express-tamil/media/media_files/LgLzO3osW2Y63smhJ2hs.jpg)
No Bra Day
அந்தவகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி, No Bra Day அனுசரிக்கப்படுகிறது. ‘நோ பிரா டே’ தினத்தில் எதற்காக பிரா அணியாமல் இருக்க வேண்டும் என்று பலருக்கும் தோன்றலாம்.
மார்பகப் புற்றுநோய்க்கு ஆளானவர்களுக்கு, சில நேரங்களில் மார்பகம் நீக்கப்பட வேண்டியிருக்கலாம். அப்படி, மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் பிரா அணிய இயலாது என்பதால் அவர்களது உணர்வுகளை உள்வாங்க இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
மார்பகப் புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், அதிலிருந்து முழுமையாக மீண்டுவிடலாம். மார்பகப் புற்றுநோயைச் சுயபரிசோதனை மூலம் நாமே எளிதில் கண்டறியலாம்.
25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மாதம் ஒரு முறையாவது மார்பக சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பக சுயபரிசோதனையுடன், தேவை எற்படின் மருத்துவமனைக்குச் சென்று முறையான பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் மருத்துவரே உங்களை மேமோகிராம் பரிசோதனைக்கு உட்படுத்துவார். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறை மேமோகிராம் பரிசோதனை செய்ய வேண்டும்.
அறிகுறிகள் என்ன?
மார்பில் வலியில்லாத அல்லது வலியுடன் கூடிய கட்டி, மார்பகம் தடிப்பது, மார்புக் காம்பிலிருந்து ரத்தம் அல்லது திரவம் கசிதல், மார்புக் காம்பு உள்ளிழுத்துக் கொள்ளுதல், அக்குளில் வீக்கம் போன்றவை மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம். கையால் லேசாக அழுத்தினாலே மார்பில் கட்டியிருப்பதைக் கண்டறியலாம்.
சிலநேரம் மார்பகப் புற்றுக்கட்டி முற்றிய நிலையிலும் வலிக்காது. அது நெஞ்சுடன் ஒட்டிச் சுருங்கும் நிலையில்தான் வலிக்கும். இப்படி நோயை முற்றவிடுவது ஆபத்தானது. எனவே, மார்பின் வடிவம், நிறம் போன்றவற்றில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும் மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.
பெரும்பாலான பெண்கள் மார்பகத்தில் மாற்றம் வந்தாலும் அதை மருத்துவரிடம் காண்பிப்பது இல்லை. கட்டி பெரிதாகி வலி தீவிரமாகும் போதுதான் மருத்துவரை அணுகுகிறார்கள்.
எனவே சிறு கட்டிதானே என்று அலட்சியப்படுத்தாமல், கூச்சத்தைவிட்டு உரிய மருத்துவரை அணுகி தகுந்த பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“