Onam 2024 Date and Timings| உலகெங்கும் வாழும் மலையாள மொழி பேசும் மக்களால் ஓணம் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
மலையாள வருடப் பிறப்பின் முதல் மாதமான `சிங்ஙம்' (ஆவணி) மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி, திருவோணம் நட்சத்திரம் வரையிலான 10 நாட்களுக்கு ஓணம் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
கேரளாவை ஆண்ட மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் மக்களைக் காண வரும்போது, அவரை வரவேற்கும் வகையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதாக ஐதீகம் உள்ளது.
இதை கேரளத்தின் `அறுவடைத் திருநாள்' என்றும் அழைப்பார்கள்.
ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தம், இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி என்று அழைக்கப்படும். அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வர். நான்காம் நாளான விசாகத்தில், அறுசுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. ஐந்தாம் நாள் அனுஷம் எனப்படும்.
அன்று, கேரளாவின் பாரம்பர்யமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. இதைக்காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வருகின்றனர். ஆறாம் நாள் திருக்கேட்டை, ஏழாம் நாள் மூலம், எட்டாம் நாள் பூராடம், ஒன்பதாம் நாள் உத்திராடம் என்று அழைக்கப்படும். திருவோண நாளான 10-ம் நாள் நடைபெறும் ஓணம் கொண்டாட்டத்துடன் இந்த விழா முடிவடைகிறது.
இப்படி ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி அனைத்து மதத்தினரும், சமுதாயத்தினரும் ஒன்றுகூடி மகிழும் தேசிய விழாவாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு ஓணம் பண்டிகை செப். 5 ஆம் தேதி அத்தம் கொண்டாட்டத்துடன் தொடங்கி செப். 15 ஆம் தேதி திருவோணத்துடன் நிறைவடைகிறது.
திரிக் பஞ்சாங்கத்தின் படி,
திருவோணம் நட்சத்திரம் ஆரம்பம் - செப் 14, 2024, இரவு 08:32
திருவோணம் நட்சத்திரம் முடிவு - செப் 15, 2024, மாலை 06:49
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“