மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

மருத்துவத்திற்கான நோபல் பரிசு இந்த ஆண்டு இரண்டு பேருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில், 2018-ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது.

புற்றுநோய் சிகிச்சையில் ‘இம்யூன் செக் பாயிண்ட் தெரபி’ (நோய் எதிர்ப்புச் சக்தி தடை உடைப்பு சிகிச்சை) என்ற பாதைத்திறப்புக் கண்டுபிடிப்பைச் செய்ததற்காக அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி ஜேம்ஸ் பி.அலீசன், மற்றும் ஜப்பானின் தசுகோ ஹோன்ஜோ ஆகியோருக்கு 2018-ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு கிடைத்துள்ளது.

தசுகோ ஹோன்ஜோ ஜப்பான் கியோட்டோவில் 1942-ம் ஆண்டில் பிறந்தவர். 1984 முதல் இவர் கியோட்டோ பல்கலையில் பணியாற்றி வருகிறார். புற்றுநோயினால் ஆண்டுக்கு மில்லியன் கணக்கில் மக்கள் பலியாகி வருகின்றனர். புற்றுநோய் மனித உயிர் வாழ்க்கைக்கு பெரிய சவாலாக இருந்து வருகிறது.

இதனையடுத்து நம் உடலில் உள்ள இயல்பான நோய் எதிர்ப்பு ஆற்றலை இன்னும் அதிகப்படுத்தி, தூண்டி, புற்றுநோக்கட்டி செல்களை அது தீவிரமாகத் தாக்கும் கேன்சர் சிகிச்சையில் புதிய பாதைத் திறப்பை இவர்கள் இருவரும் மேற்கொண்டனர்.

நம் உடல் நோய் எதிர்ப்புச் சக்தி அமைப்பில் புரோட்டீன் ஒன்று தடையாகச் செயல்படுகிறது என்பதை ஜேம்ஸ் பி.அலீசன் ஆய்வு செய்தார். இந்தத் தடையை உடைத்து விட்டால் நம் நோய் எதிர்ப்புச் சக்தி செல்கள் புற்றுநோய்க்கட்டிகள் மீது எதிர்த்தாக்குதல் நடத்தும் என்பதைக் கண்டறிந்தார். இதனையடுத்து புற்றுநோய் சிகிச்சையில் இதுவரை இல்லாத புதிய அணுகுமுறைக்கான கருத்தாக்கத்தை அவர் வளர்த்தெடுத்தார்.

இதற்கு சமமாக ஜப்பானிய மருத்துவ விஞ்ஞானி தசுகோ ஹோன்ஜோவும் இதே உடல் எதிர்ப்புச் சக்தியில் புரோட்டீனின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். இதுவும் தடை ஏற்படுத்துவதாக அவர் முடிவுக்கு வந்தார்.

இவர்களுடைய இந்தக் கண்டுபிடிப்பு புற்றுநோய் சிகிச்சையில் புதிய மைல்கல் என்று கருதப்படுகிறது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு நாளை அறிவிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 3ம் தேதி வேதியியலுக்கான நோபல் பரிசும், 5ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 8-ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close