Advertisment

நெற் களத்தில் அவல் - பயறு வாங்கிச் சாப்பிட்ட அனுபவம் உங்களுக்கு உண்டா? மறக்க முடியாத வாழ்வியல் நினைவுகள்

அறுவடை எந்திரங்களின் வருகையால், கிராமங்களில் வழக்கொழிந்த அறுவடைத் திருவிழா குறித்து தன்னூத்து குமரன், தென்காசி மாவட்டம் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தைப் பெற்றுள்ளது.

author-image
WebDesk
New Update
paddy harvest 1.

அறுவடை எந்திரங்களின் வருகையால், கிராமங்களில் வழக்கொழிந்த அறுவடைத் திருவிழா; வாழ்வியல் பதிவு Picture Credit: BIGSTOCK

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அறுவடை எந்திரங்களின் வருகையால், கிராமங்களில் வழக்கொழிந்த அறுவடைத் திருவிழா குறித்து தன்னூத்து குமரன், தென்காசி மாவட்டம் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தைப் பெற்றுள்ளது.

Advertisment

அறுவடை எந்திரங்களின் வருகைக்கு முன்னால், கிராமங்களில் திருவிழா நிகழ்வைப் போல நடக்கும் நெல் அறுவடை, களத்தில் கதிரடிப்பது, மாடுகளைப் பூட்டி பினை ஓட்டி, வைக்கோல் எடுப்பது போன்ற நிகழ்வுகளின்போது, நெற் களத்தில் அவல்- பயறு வாங்கிச் சாப்பிட்ட அனுபவம் உங்களுக்கு உண்டா, உண்டு என்றால் அப்படியான வாழ்வியல் அனுபவங்களைப் பற்றி தன்னூத்து குமரன் முகநூலில் எழுதியுள்ளார்.

அறுவடை எந்திரங்களின் வரவால், அறுவடைக் காலங்களில் வழக்கொழிந்துபோன, கதிர் அறுப்பு, நெற்கதிர் கட்டுகளை சுமப்பது, நெற்களத்தில் கதிர் அடித்து தூற்றுதல், வைக்கோல் பிரிப்பது போன்ற நிகழ்வுகள் அடங்கிய அறுவடைக் காலத் திருவிழா வழக்கொழிந்து போன,  வாழ்வியல் அனுபவங்களை மீண்டும் நினைவு படுத்தும் விதமாக, தன்னூத்து குமரன் ஒரு நாஸ்டால்ஜியா நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். தன்னூத்து குமரன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: 

வழக்கொழிந்த அறுவடைத் திருவிழா:

இப்போது நெல் அறுவடை முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கும் காலம்.

ஆனால்... அறுவடைக்காலத்தில் ஊருக்குள் கேட்கும் அறுவடைத் தொழிலாளர்களின் கலகலப்பான சத்தங்கள் கேட்கவில்லை... வைக்கோலுடன் பச்சை நெல்லின் பசுமையான, சுகந்தமான வாசம் காற்றில் உணர முடியவில்லை.

ஊருக்குள் வைக்கோல் தூசி பறப்பதில்லை...

தெருக்களில் சிதறிக் கிடக்கும் நெல்மணிகளைக் காணவில்லை. 

ஆனால்...

வயல்வெளிகளில் இராட்சத அறுவடை இயந்திரங்கள் கர்ணகடூரமான சத்தத்துடன் நெற்பயிரை கபளீகரம் செய்து நெல் மணிகளைத் தன் வயிற்றுக்குள் (Tank)

விழுங்கிவிட்டு வைக்கோலை துப்பியபடி உலாவருகின்றன.

பின்னர், நெல்லை டிராக்டரில் துப்புகிறது எந்திரம்

டிராக்டர் சிந்தாமல் சிதறாமல் வீடு கொணர்ந்து சேர்த்து விடுகிறது..!

இந்த அறுவடை எந்திரம் வராத கடந்த காலத்தை

எண்ணிப் பார்க்கும்போது...

வேலை ஆள்களையும், பணிச் சுமையையும், மட்டுமே நவீன அறுவடை முறை குறைத்துள்ளதே தவிர, ஒரு மாபெரும் உணவுச் சங்கிலியையும் பாரம்பரியமான  விழுமியம், பண்பாட்டையும்  நாம் தொலைத்து விட்டோம் என்றே சொல்ல வேண்டும்.

தென் மாவட்டங்களில் 2004 - 2005 ஆம் ஆண்டுகளில்தான் அறுவடை எந்திரம் கொண்டு வரப்பட்டது.

அதற்கு முன்பு அறுவடை எப்படி நடந்தது தெரியுமா...?

சுமார் இரண்டு மாத காலம் ஊரே திருவிழா பூண்டு விடும்,

மக்கள் உற்சாகத்தில் மிதப்பார்கள்..!

நெற்களம்: 

 ஊரின் மையப் பகுதிகளில் காலியாகக் கிடக்கும் மனைகள் மூன்று நாள்களுக்கு முன்பே ஆள் விட்டு சமன் செய்யப்படும்.

பெரிய விவசாயிகள் தங்களுக்கென தனியாகவே களம் வைத்திருப்பர்.

அவர்களின் சொந்தக் களம் பிற விவசாயிகளுக்கும் பயன்படுத்த  அனுமதிக்கப்படும் .

சிலர் களத்து வாடகையாக குறிப்பிட்ட அளவு நெல் வாங்குவர்.

களத்தை தூற்று, சாணம் தெளிக்கும் பெண்களுக்கும் நெல் கூலியாகக் கிடைக்கும்.

(இந்தக் களங்களெல்லாம் இப்போது காணாமல் போய் விட்டன. அவற்றில் வீடுகள் முளைத்து விட்டன..)

அறுவடைக் குழுவினர்

எங்கள் தன்னூத்து ஊரில் மட்டும் நான்கு "கம்பெனி" இருந்தது..! (கம்பெனி என்றுதான் அழைப்பது வழக்கம்)

ஒரு குழுவிற்கு சுமார் 20 முதல் 30 பேர் வரை இருப்பார்கள்..!

அந்த வகையில் கிட்டத்தட்ட 100+ பேர் இருந்தனர்.

அணித் தலைவர் கொத்தர் என அழைக்கப் படுவார்.

குறுணி நிலத்துக்கு எத்தனை மரக்கால் நெல் என "கொத்து" (கூலி நெல்) பேசி முடிக்கப்படும்.

அறுவடைக் காலத்துக்கு முன்பே எங்கள் ஊர் கொல்லர்களான சுப்பையாஆசாரி சொர்ணம்ஆசாரி இருவரது உலைகளிலும் "பல் அரிவாள்" பழுது பார்க்கப்படும்.

20, 30 பேரின் அரிவாள்களையும் ஒன்றாகக் கட்டி பிள்ளையார், அம்மன், மாடன் கோவில்களில் வைத்து பூஜை செய்யப்படும்.

அறுவடைப்பணி

குழுவினர் அதிகாலை 06:00 - 06:30 மணிக்குள் வயலுக்குள் இறங்கி ஈசான மூலையில் நின்று சூரியனை வணங்கி, வயலைத் தொட்டு வணங்கி அரிவாளைக் கொண்டு கதிர்களை அறுக்கத் தொடங்குவர்.

சுமார் 10:00 மணிவாக்கில் காலை உணவருந்தியபின் 

(அவரவர் வீடுகளிலிருந்து அமிர்தம் போன்று சுவையுடைய பழைய சோறு கொண்டு வரப்படும்)

 

குழுவிலுள்ள அனுபவம் வாய்ந்த ஆண்கள் கதிர்களைப் பனையோலைக் கொடிகள் கொண்டு கட்டுப் போடுவார்கள். ஒவ்வொரு கட்டும் சுமார்3 முதல்  நான்கடி உயரத்தில் (எடை சுமார் 40 கிலோ இருக்கும்) பிரம்மாண்டமாக இருக்கும்.

கட்டுகளை இளவட்ட ஆண்களுக்குப் போட்டியாக இளம் பெண்களும் சளைக்காமல் சுமப்பார்கள்..!

எங்கள் குமாரநேரி நன்செய் பரப்பளவு 236 ஏக்கர்.

கடைசி வயலுக்கும் குளக்கரைக்குமிடையே அதிகபட்சத் தூரம் சுமார் 1முதல் ஒன்றரைக் கி.மீ. இருக்கும்..!

20அடி உயர குளக்கரையில் சரிவான ஒற்றையடித்டத்தில் "தம்" கட்டி ஏறி.... அங்கிருந்து ஊருக்குள் உள்ள நெற்களத்திற்கு சுமார் அரை முதல் 1 கி.மீ. தூரம் என சுமார் 2கி.மீ தூரம் கட்டுச் சுமையை அயராமல் சுமந்து கொண்டு ஓட்டமும் நடையுமாக விரைவார்கள்.

சிலருக்கு வீடுகளிலிருந்து நீர்த்தண்ணீர், மோர் என கொண்டு வருவார்கள் கட்டுச்சுமையை தலையில் வைத்துக் கொண்டே அதை ஆவலுடன் அருந்துவதைப் பார்க்கும்போது மெய்சிலிர்த்துப் போகும்.

4 கம்பெனி ஆட்களும் கதிர்க்கட்டுகளை ஊருக்குள் சுமந்து செல்லும் காட்சி திருவிழா ஊர்வலம் போன்று இருக்கும்.

கதிர்களின் சரசரப்பு ஓசை ஜல்... ஜல்... என்று தெருக்களில் எதிரொலிக்கும்.

வீதியெங்கும் நெல்மணிகள் சிந்தித் சிதறிக் கிடக்கும்.

கதிரடித்தல்

திருமணம் ஆகாத இளவட்ட ஆண்கள் களத்தின் மையப்பகுதியில் ராட்சத கருங்கற்களைப் போட்டு, அதன்மீது கதிரை ஓங்கி அடித்து நெல்மணிகளை உதிர்ப்பார்கள்.

(4, 5 மணி நேரம் இடைவிடாது நடக்கும் இப்பணி க்கு சோர்வின்றி பணியாற்ற இளவட்டங்களையே முன்னிறுத்துவார்கள்)

பெண்கள் கட்டுகளைப் பிரித்து கை கொள்ளும் அளவிற்குச் சிறிது சிறிதாக நெற்கதிர்களைத் தூக்கி வீசுவர். அதனை தன்கையில் வைக்கோலால் திரிக்கப்பட்ட கயிற்றால் இலாவகமாகப் பிடித்து இறுகப் பற்றிக் கொண்டு ஓங்கி கல்லின்மீது அடிப்பார்கள்.

நடுவே மதிய உணவு வேலை நடந்து கொண்டு இருக்கும்போதே ஆள் மாற்றி மாற்றி சாப்பிடுவார்கள். (பெரும்பாலும் சோளச்சோறும், பழைய அரிசிக் கஞ்சியுமே... இந்தக் கடின வேலைக்குத் தாங்கும்)

பொலி_தூற்றுதல்

அடித்துக் குவித்த நெல்மணிகளை மாலை நேரத்தில் காற்று வீசும் திசையில்  ஒருவர்  முறத்தால் அள்ளி வீச நான்கைந்து பேர் கோணிச் சாக்குகளை விசிறி வைக்கோல் தூசிகளைப் போக்குவர்.

கொத்து அளத்தல்

நெற்குவியல் பெரிதாக ஒன்றும் சிறிதாக ஒன்றுமாகப் பிரித்துக் குவிக்கப்படும்.

கைப்பிடி அளவு சாணத்தால் பிள்ளையார் பிடித்து அருகம் புல் செருகி களத்தின் கன்னி மூலையில் (தென்மேற்கு மூலை) வைத்து வணங்குவர்.

பெரிய குவியல் நிலத்தின் உரிமையாளருக்கு.

சிறிய குவியல் கொத்து (கூலி) கொடுப்பதற்கு.

நில உரிமையாளர் வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மரக்கால் கொண்டு கொத்து அளந்து போடப்படும்.

இந்த கொத்து நெல்லை வாங்கிச் செல்ல சாக்கு இல்லாதவர்கள் ஓலைப்பெட்டி, 

பனைநார் பெட்டி கொண்டு வருவர்.

தானம்

தான தர்மம் வேண்டி நெற்களங்களுக்கு வரும் வறியவர்களுக்கு நெல் உரிமையாளர்கள் இரக்க சிந்தனையுடன் ஒருசில படி நெல்லை வழங்கி புண்ணியம் தேடிக் கொள்வார்கள்.

எங்கள் ஊருக்கு அருகேயுள்ள "வீரசிகாமணி" என்ற ஊரைச் சேர்ந்த கூத்து கட்டுபவர் ஒருவர் கையில் ஒரு பெண் பொம்மையை வைத்துக் கொண்டு வருவார். அழகாக இரட்டைச் சடை பின்னி ரிப்பன் கட்டி பொட்டு வைத்து பூவைத்து பாவாடை சட்டை போட்ட அந்தப் பொம்மையை அவர் லாவகமாக கைவிரல்களால் உயிருள்ள பொம்மை போல பாட்டுப்பாடி நடனமாடச் செய்து... "ஏளா... முதலாளிக்கு வணக்கம் சொல்லு... என்பார்.

அவரே அந்த பொம்மை மறுத்து தலை ஆட்டுவது போலச் செய்து, “அடப் பயபுள்ளை... முதலாளியைக் கும்பிடு... அப்பத்தான் நெல்லு கிடைக்கும்..!”

என்று கூறிவிட்டு அவரே விரல் வித்தை செய்து பொம்மையை வணங்கச் செய்வார்..!

அவரும் நாளொன்றுக்கு 50கிலோ முதல் 100கி. நெல் சேர்த்துவிடுவார்..!!

வியாபாரிகள்

அவல், பயறு, சவ்வுமிட்டாய்,  ஐஸ், போன்ற சிறு  வியாபாரம் செய்வோர் நெற்களங்களைச் சுற்றிச் சுற்றி வருவார்கள். நெல்லை வாங்கிக் கொண்டு பண்டமாற்று முறையில் பொருள்களை விற்பார்கள்..!

வைக்கோல் அடித்தல்

நெல்மணிகள் சரியாக உதிராமல் ஒன்றிரண்டு ஒட்டிக் கொண்டிருக்கும் என்பதால் குவிந்து கிடக்கும் வைக்கோலை மறுநாள் மாடுகளை பிணைத்து வைக்கோல் மீது சுற்றிவரச் செய்து அதில் கிடைக்கும் நெல்லை மாட்டுக்காரர்களுக்கு கூலியாகக் கொடுப்பார்கள். 

இதுபோக... வயலில் சிதறிக் கிடக்கும் நெல்லை வறிய பெண் கூலித் தொழிலாளிகள் பனை சில்லாட்டை விளக்குமாற்றால் ஒரு வாயகன்ற பிரம்புக் கூடையில் சேகரிப்பார்கள்.

பிரி விடுதல்

கதிரடித்து, களத்தில் குவிந்து கிடக்கும் வைக்கோலை கட்டுவதற்காக அந்த வைக்கோலை வைத்தே கயிறு போன்று திரிப்பார்கள்.

இதற்கு மிகுந்த அனுபவமும்,பொறுமையும் தேவை..!

இதற்கு பிரி விடுதல் என்று பெயர்.

70, 80 வயது பெருசுகள்தான் தங்களின் பங்களிப்பாக இப்பணியைச் செய்வார்கள்.

அவர்கள் நாலைந்துபேர் வெற்றிலை போட்டு மென்று துப்பியபடியே ஊர்க் கதைகளைப் பேசியபடி  பிரி கயிறு தயாரிப்பார்கள்.

இந்தப் பிரிகளைக் கொண்டு இளவட்டங்கள் வைக்கோல் கட்டுவார்கள்.

இப்பணிக்கு அந்த முதியவர்களுக்கு சம்பளம் எல்லாம் வெற்றிலையும் காப்பித் தண்ணியும் மட்டும்தான்...!

ஏனென்றால்... அவர்களெல்லாம் "கவுரவத் தோற்றம்" (Guest role)

உள்ளூரில் வாக்கப்பட்ட தன் மகளின் வீட்டுக்கும்

தன் சுகதுக்கக்காரனுக்கும் (சொக்காரன்) பிரி விடுவதெல்லாம் அளவற்ற அன்பின் வெளிப்பாடு அல்லவா..?

இப்படியாக நடைபெறும்அறுவடைக்காலத்தில் வயல் வெளிகளிலும் கட்டுச் சுமந்து செல்லும் வழி நெடுகிலும் சிந்தும் நெல்மணிகளைத் தின்பதற்கு காக்கை, குருவிகள் படையெடுக்கும்..!

ஊருக்குள் மளிகைக் கடை, டீக்கடை களுக்குச் செல்லும் அறுவடைப் பணியாளர்கள் நெல்லைக் கொடுத்துதான் பொருள் வாங்குவர்.

பிரபல டீக்கடை, மளிகைக் கடைகளில் அறுவடை காலத்தில் சுமார் 30 முதல் 40 மூட்டை நெல் சேர்வதெல்லாம் இப்போது சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.

எங்கள் தன்னூத்து கிராமத்தில் சாமியார்_கடை என்றழைக்கப்படும் டீக்கடை 1970 - 80 களில் அதிகபட்சமாக ஒரே நாளில் 10 மூட்டை நெல் வரை வசூலித்ததெல்லாம் பிரமிக்க வைத்த சாதனை..! 

(உற்சாகபான விரும்பியான ஆண்களில் சிலர்

கள்ளுக்கடைக்கு  நெல்லைக் கொண்டு சென்று கள் வாங்கி அருந்துவதெல்லாம் ரகசியக்கதை..!)

தைமாதம் நடுவில் தொடங்கும் அறுவடை  பங்குனி மாதம் நடுவில் முடியும்போது, தலைக்கு 7, 8 மூட்டை நெல் சேர்ந்து விடும்.

இடைவிடாது அறுவடைக்குச் சென்று, 15 மூட்டை வரை நெல் சேர்த்த அசகாய சூரர்களும் உண்டு..!

பெரும்பாலும், கூட்டுக் குடும்பமாகவே வாழும் அந்தக் காலத்தில் கணவன், மனைவி, மகன்கள் என குறைந்தது 2 பேர் முதல் ஒரேகுடும்பத்தில் 4பேர் வரை அறுவடைப் பணிக்குச் சென்று சுமார் 20 முதல் 50  மூட்டை நெல் சேர்த்த குடும்பங்கள் எல்லாம் உண்டு..!

இந்த நெல் மூட்டைகளை பெரும்பாலும் விற்கமாட்டார்கள். இந்த ஆண்டு விளைந்து விட்டது, அடுத்த ஆண்டு மழை பொய்த்து பஞ்சமாகி விட்டால் சாப்பிட என்ன செய்வது..? என்று முன்னெச்சரிக்கையுடன் இருப்பு வைப்பார்கள். தேவைக்கு விற்பவர்களும் உண்டு..!

நெல் மூட்டைகளை இருப்பு வைக்க வீட்டில் இடவசதி இல்லாதவர்கள் அக்கம் பக்கத்து பெரிய வீடுகளில் கொண்டு இருப்பு வைப்பார்கள்..!

பையன் நல்ல உழைப்பாளி வருசத்துக்கு 20.மூட்டை நெல் சேர்த்து விடுவான் என்றால் தயங்காமல் பெண் கொடுப்பார்கள்..!

ஒன்றாக வேலை செய்து காதல் பிறந்து திருமணம் முடித்தவர்களும் உண்டு..!

அறுவடை முடிந்ததும் அம்மன் கோவில் திருவிழாவில் நெல் அறுவடைக் குழுவினர் சார்பாக திரை கட்டி திரைப்படம் போட்டு ஊர் மக்களுடன் பார்த்து ரசிப்பார்கள்..!

எங்கள் தன்னூத்து ஊரின் அறுவடைக் குழுக்கள் நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், ஆழ்வார் திருநகரி, திருவைகுண்டம், அம்பை, முக்கூடல், ஆழ்வார்குறிச்சி, கடையம் போன்ற தாமிரபரணி பாசனத்தில் இருபோகம், முப்போகம் நெல் விளையும் செழிப்பான  பகுதிகளுக்கு எல்லாம் சென்று மாதக்கணக்கில் தங்கியிருந்து அறுவடை செய்து வருவார்கள்.

இப்படி எல்லாம் நடந்த நெல் அறுவடைப் பணி இன்று எந்திரமயமாகி விட்டது..!

விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காத இக்காலத்தில், இயந்திர அறுவடை வரப் பிரசாதம் என்றாலும். அந்த பழைய பாரம்பரிய அறுவடை நடந்த நாள்களை எண்ணிப் பார்க்கும்போது சிலிர்ப்பாக இருக்கிறது..!” என்று தன்னூத்து குமரன் சுவாரசியமாகப் பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Agriculture
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment