பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் மூன்று நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலில் கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி, பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த திருவிழா வழக்கமாக 10 நாட்களுக்கு நடத்தப்படும். இதன் ஒவ்வொரு நாளும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் மேற்கொள்வார்கள்.
இந்த விழாவின் முக்கிய அம்சங்களாக சில நிகழ்வுகள் அரங்கேறும். அதன்படி, வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி, முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை கல்யாண வைபவம் நடைபெறும். அன்றைய தினம் மாலை 4:30 மணிக்கு பங்குனி உத்திர தேரோட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 14-ஆம் தேதியுடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெறுகிறது.
இந்த திருவிழாவையொட்டி சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை பழனி கோயிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு அறிவுத்துள்ளார். இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை அமர்வில் அவர் வெளியிட்டார்.