/indian-express-tamil/media/media_files/2025/08/09/3w1a1745-2025-08-09-10-22-22.jpg)
Palayamkottai St Xavier’s College Sports fest
திருநெல்வேலி, ஆகஸ்ட் 8: பாளையங்கோட்டை மாநகரில் அமைந்திருக்கும் தூய சவேரியார் கல்லூரியின் (தன்னாட்சி) 103-வது ஆண்டு விளையாட்டு விழா, இந்த ஆண்டு மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கல்லூரி வளாகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்க, 26 துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இந்த மாபெரும் நிகழ்வில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
விழாவின் தொடக்கமாக, கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள், கம்பீரமான அணிவகுப்பு நடத்தினர். இந்த அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
அதைத் தொடர்ந்து, இறுதிப் போட்டிகளான ஓட்டப்பந்தயம், ரிலே ஓட்டம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் தொடங்க ஆயத்தமாயின. இந்தப் போட்டிகளை, சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் மற்றும் நோவா கால்பந்து அகாடமியின் நிறுவனர் A. அந்தோணி தாமஸ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
விழாவில் சிறப்புரை ஆற்றிய மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார், மாணவர்கள் விளையாட்டு விழாவில் காட்டிய ஒழுக்கத்தையும், திறமையையும் வெகுவாகப் பாராட்டினார். "இந்தக் கல்லூரி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்த அதே கட்டுப்பாடும், பண்பாடும் இன்றும் மாணவர்களிடத்தில் காணப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், இன்றைய காலகட்டத்தில் இணையத்தைப் பயன்படுத்துவதில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி எடுத்துரைத்த அவர், "இணையத்தில் தவறுகள் அதிகரித்து வரும் நிலையில், மாணவர்கள் அதை தவறாகப் பயன்படுத்தாமல், ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் நடந்துகொண்டால் வாழ்வில் வெற்றி பெறலாம்" என்று வலியுறுத்தினார்.
இந்தச் சிறப்பான விழா, கல்லூரி நிர்வாகம், உடற்கல்வி துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் சாதனைகளும், அவர்களின் அர்ப்பணிப்பும் இந்த நிகழ்வுக்கு மேலும் சிறப்பு சேர்த்தன.
செய்தி உதவி: இன்பரசி தேவி,
காட்சித் தொடர்பியல் துறை (மூண்றாம் ஆண்டு),
தூய சவேரியார் கல்லூரி,
பாளையங்கோட்டை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.