நீங்கள் உணவிற்காக பயன்படுத்தும் நூடுல்ஸ், சாக்லேட் போன்ற பொருட்களில் உங்கள் இரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் பாமாயில் கலந்திருக்கிறது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Why palm oil in breads, cakes and noodles may be blocking your arteries: PGI study has the answers
"அவற்றில் சுமார் 50 சதவீதம் வரை அதிக அளவு கொழுப்பு உள்ளது. குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் (எல்டிஎல்) அல்லது கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளை அதிக அளவில் உட்கொள்ளும் போது இருதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்" என 'Roadmap for Replacing Trans-Fats with Healthy Edible Oil in India' திட்டத்தின் முதன்மை ஆய்வாளர் பேராசிரியர் ஜே.எஸ். தாகூர் கூறுகிறார். இந்த ஆய்வு பி.ஜி.ஐ.எம்.இ.ஆர், சண்டிகரில் மேற்கொள்ளப்பட்டது.
"நம் நாடு இறக்குமதியை பெரிதும் சார்ந்துள்ளது. குறிப்பாக குறைந்த விலை பாமாயில் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. இது அனைத்து இறக்குமதிகளில் 59 சதவீதத்தை கொண்டுள்ளது. இது இதய நோய்களுடன் தொடர்புடைய கொழுப்புகளை அதிகமாக கொண்டுள்ளது. இவை பேக்கரிகள், கல்லூரி விடுதிகள் மற்றும் கேன்டீன்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் தாவர எண்ணெய் போன்றவற்றில் கலக்கப்படுகிறது" என பேராசிரியர் தாகூர் கூறியுள்ளார்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பாமாயில் ஏன் முக்கியப் பொருளாக உள்ளது?
பல பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பாமாயில் உள்ளது. இவை சம்பந்தப்பட்ட பொருட்கள் கெட்டுப் போவதை தாமதப்படுத்துகின்றன. இது அறை வெப்பநிலையில் அரை-திடமாக உள்ளது. எனவே, பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. தெருவோர வியாபாரிகள் இதை மற்ற எண்ணெய்களுடன் கலந்து பொரிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
இந்திய உணவுகளில் அதிகப்படியான எண்ணெய் மற்றும் உப்பு பயன்பாடு ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என தொடர்ச்சியாக அறிவுறுத்தப்படுகிறது.
இது போன்ற எண்ணெய்கள் பயன்படுத்தப்பட்ட உணவுகள் எடுத்துக் கொள்வது இருதய நோயின் அபாயத்தை அதிகரிப்பதாக மருத்துவர் யுடாரோ செடோயா எச்சரிக்கை விடுத்துள்ளார். இவை இரத்தக் குழாய்களில் படிந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, இது போன்ற பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் எனக் கூறுகின்றனர். குறிப்பாக, 2,000 கலோரி உணவுக்கு ஒரு நாளைக்கு 2.2 கிராமுக்கு மேல் எடுக்கக் கூடாது என்று கூறப்படுகிறது.
உணவு எண்ணெய்கள், மனித உடலில் உற்பத்தி செய்ய முடியாத அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களை வழங்குகின்றன. முன்னர் இருந்த காலத்தில் உள்ளூர்களில் கிடைக்கும் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை உணவில் அதிகமாக பயன்படுத்தினோம். அதேபோல், ஆரோக்கியத்தை மேம்படுத்த உள்ளூர் எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும் என நிபுணர்கள் கூறி வருகின்றனர்.