Pandavar Illam Kirthika Annamalai Fitness Secrets Tamil News : சன் டிவியில் பாண்டவர் இல்லம் தொடரில் முதலில் வில்லியாக நடித்து தற்போது மூத்த மருமகளாக அந்த குடும்பத்தையே வழிநடத்திச் சென்றுகொண்டிருக்கும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்திக்கொண்டிருக்கிறார் கிருத்திகா அண்ணாமலை. அதிகப்படியான உடல் பருமனிலிருந்து தற்போது இருக்கும் ஸ்லிம் கிருத்திகா வரை தன்னுடைய வெயிட் லாஸ் பயணத்தின் குறும்படத்தை இன்ஸ்டாவில் அப்லோட் செய்திருந்தார். இது லட்சக்கணக்கான வியூஸ்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து 86 கிலோவிலிருந்து 63 கிலோ வரை உடல் எடையைக் குறைதீர்க்கும் கிருத்திகா, தன்னுடைய வெயிட் லாஸ் சீக்ரெட் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

“குழந்தை பிறந்த பிறகுதான் என்னுடைய உடல் எடை அதிகமானது. அப்போது 86 கிலோவில் இருந்தேன். அந்த நேரத்தில் சீரியலில் என் வயதுக்கும் அதிகப்படியான கேரக்டர் ரோல் வழங்கப்பட்டது. அந்த அளவிற்கு எனக்கு வயதாகவில்லை என்றும் இதுபோன்ற கதாபாத்திரத்தை வேண்டாம் என்று சொல்கிற தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதால்தான் நான் உடல் எடையை குறைக்கவேண்டும் என்று முடிவு செய்தேன்.

அதன்பிறகு யார் என்ன சொன்னாலும் அதை காதில் வாங்கவில்லை. என் பேச்சை மட்டுமே நான் கேட்க ஆரம்பித்தேன். இதுதான் என்னுடைய டயட் என்று முடிவு செய்தால், அதை மட்டுமே பின்பற்றவேண்டும். வெளியே செல்லும்போது, ‘ஒருநாள்தானே, இதை சாப்பிடு’ என்று உங்கள் நண்பர்கள் ஏதாவது சாப்பிட சொல்லி ஃபோர்ஸ் செய்தாலும், அதையெல்லாம் காதில் வாங்கக்கூடாது. ஏனென்றால், ஒரு ஸ்பூனில் ஆரம்பிப்பது 10 ஸ்பூனில் முடியும். அதனால், மனதளவில் கட்டுப்பாடுகள் மிகவும் முக்கியம்.

உடல் எடையைக் குறைக்கவேண்டும் என்று நினைத்ததிலிருந்து, நான்கு விஷயங்களை நான் நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்று நினைத்தேன். முதலில், யோகா சரியாக செய்யவேண்டும். எப்பாடு பட்டாவது காலை 6.30 மணிக்குள் சூரியநமஸ்காரம் செய்துவிடுவேன். யோகா என்றால் பெரிதாக அப்படி செய்யவேண்டும் என்றெல்லாம் இல்லை. சாதாரண எளிய ஆசனங்களைச் செய்தாலே போதும்.

இரண்டாவது ஜிம். ஆரம்பத்தில் கார்டியோ போன்ற எளிமையான ஓர்க் அவுட்களைதான் செய்தேன். அதன்பிறகுதான் நம்மை ஊக்கப்படுத்த ஒருவர் வேண்டுமென முடிவு செய்து, பெர்சனல் ட்ரெயினர் ஒருவரை என்னுடன் இணைத்துக்கொண்டேன். எது செய்தாலும், முழு ஈடுபாட்டோடு செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால், சுமார் 6 மாதங்கள் கடுமையாக உழைத்தேன்.

மூன்றாவது டயட். மட்டன் போன்றவை கொழுப்பு என்பதால் அவற்றை முழுவதும் என் டயட்டிலிருந்து நீக்கிவிட்டு, முழு நேரமும் அதிக புரதச் சத்துள்ள சிக்கன் சாப்பிட ஆரம்பித்தேன். மேலும், சீஸ், பன்னீர் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன். ஒரு டயட்டை பின்பற்றினால், அதிலிருந்து பின்வாங்கக்கூடாது. Cheat Day என்பதெல்லாம் எனக்கில்லை. 70 கிலோவிற்கு கீழே செல்லும்போது 69 என்கிற எண்ணை பார்த்ததும் அன்று ஒருநாள் மட்டும் பிரியாணி வெளுத்து வாங்கினேன். அவ்வளவுதான்.

நான்காவதாக ஷட்டில் விளையாடுவேன். இதெல்லாவற்றையும்விட, நன்றாக தூங்குவேன். ஸ்ட்ரெஸ், மன அழுத்தம் என்றுகூறி தூக்கம் வரவில்லை என்று ஏராளமான நபர்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றனர். அப்படியெல்லாம் நினைக்கக்கூடாது. நல்லா தூங்கணும். அதேபோல அட்வைஸ் வாங்கிக்கலாம். ஆனால், எதை பின்பற்ற வேண்டும் என்பதை தீர்மானிப்பது நாமாகத்தான் இருக்கவேண்டும்.
இதெல்லாம் பின்பற்றி இப்போது 63 கிலோ இருக்கிறேன். இதற்கு முக்கிய காரணம், நம் மைண்ட் செட் ஸ்ட்ராங்கா இருக்கனும். வேப்பங்கொழுந்து, இஞ்சி, ஆம்லா ஆகியவற்றை அரைத்து, கொஞ்சம் உப்பு சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால், நிச்சயம் வயிற்றில் இருக்கும் கொழுப்பு, மலச்சிக்கல் பிரச்சனை ஆகியவை நீங்கும். ட்ரை செய்து பாருங்கள்” என்பதோடு நிறைவு செய்கிறார் கிருத்திகா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil