Pandavar Illam Malliga Aarthi Subash Interview Tamil News : பாண்டவர் இல்லம் தொடரில் அடாவடி மல்லிகாவாகக் கலக்கிக்கொண்டிருக்கும் ஆர்த்தி சுபாஷ், தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் அப்படிப்பட்டவர்தானாம். ஒரு நூலிழை இடைவெளி மட்டுமே ஆர்த்திக்கும் மல்லிகாவுக்கு இருக்கிறது என்று சமீபத்திய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டார். மேலும், இதுபோன்ற பல சுவாரசிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஆர்த்தி முகம் பரீட்சயமானது யூடியூப் சேனல் வாயிலாகத்தான். ஆனால், பள்ளி படிக்கும்போதே தான் மீடியாவில் நிச்சயம் தடம் பதிப்பேன் என்று தன் நண்பர்களிடம் பகிர்ந்துகொண்ட நிகழ்வை நினைவுகூர்ந்தார். “பத்தாம் வகுப்பு வரை நல்லாதான் படிச்சிட்டு இருந்தேன். ஆனால், அதற்குமேல் படிப்பு ஒழுங்கா வரல. படிக்கவே பிடிக்கலை. அம்மாவுக்கு நான் பொறியியல் படிக்கணும்னு ஆசை. ஆனால், நான் பிஎஸ்சி கம்பியூட்டர் படிக்கலாம்னு நினைச்சேன். ஆனால், கடைசியில் டூரிசம் படிச்சேன். பள்ளி படிக்கும்போதே தொகுப்பாளினி ஆகப்போறேன் என்று நண்பர்களிடம் சொல்லுவேன்.

ஆனால், அதற்கான முயற்சி எடுக்கவில்லை. கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் போது, மக்கள் தொலைக்காட்சியிலிருந்து ஒரு வாய்ப்பு வந்தது. எனக்கும்கூட நிகழ்ச்சியைத் தொகுக்கத் தெரியுதே என்று ஆச்சரியப்பட்டேன். பிறகு, ஆதித்யா, சன் டிவி உட்பட பல சேனல்களில் வேலை பார்த்தேன். பிறகு யூடியூப் பக்கம் சென்றேன். அதன்பிறகு என் முகம் மக்களுக்கு நல்லாவே பதிந்தது.

நடிப்பு பற்றி எதுவும் தெரியாமல்தான் போனேன். பிறகு ஏராளமான விஷயங்களை கற்றுக்கொண்டேன். மல்லிகா கதாபாத்திரத்திற்கு எனக்கும் பெரிய வித்தியாசமெல்லாம் இல்லை. என்னை பார்த்துத்தான் எழுதியிருக்கிறார் என்று நிறையப் பேர் கிண்டல் செய்வதுண்டு. இந்த துறைக்கு வந்த புதிதில் ஏராளமான சவால்களை எதிர்கொண்டேன். அதில் முதலில் காலையில் 5.30 மணிக்கு எழுவது.

எனக்குக் காலை எழுவது மிகவும் கடினமான விஷயம். உள்ளுக்குள்ளே அவ்வளவு அழுவேன். இப்போது பழகிடுச்சு. நேரத்தை செலவழிக்காமல், சரியான நேரத்திற்கு வேலைக்குச் சென்றுவிடுகிறேன். அதெல்லாம் எனக்கே ஆச்சரியம்தான்” என்பதோடு மீடியாவில் பெண்களைப் பற்றிப் பரவும் அவதூறு மற்றும் பாலியல் துன்புறுத்தல் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.
“பெண்களுக்கு எல்லா இடங்களிலும் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. பள்ளியில் இருந்து வேலை பார்க்கும் இடம் வரை பாலியல் சீண்டல்கள் இல்லாத இடம் எது? மீடியா என்பதால், இன்னும் வெட்டவெளிச்சமாக தெரிகிறது. அவ்வளவுதான். தைரியமாக இருக்கும் பெண்கள் எங்கு இருந்தாலும் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க முடியும். பயந்து இருப்பவர்கள் எங்கு இருந்தாலும் பயந்துகொண்டேதான் இருப்பார்கள்” என்று பகிர்ந்துகொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil