Pandavar Illam Malliga Aarthi Subash shares about her Pimples : பாண்டவர் இல்லம் தொடரில் படபடவென பேசும் பால்காரி மல்லிகாவாக எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பிடித்திருப்பவர் ஆர்த்தி சுபாஷ். சமீபத்தில் இவருடைய சில புகைப்படங்கள் மிகவும் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வந்தன. அதற்குக் காரணம், முகத்தில் வடு ஏதும் இல்லாமல் திரையில் பார்த்த ஆர்த்திக்கும் முகம் முழுக்க பருக்கள் கொண்டிருக்கும் ரியல் ஆர்த்திக்கு உள்ள வித்தியாசம்தான். இதைப் பற்றி அவரே ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார்.

அதில், இந்த பருக்கள் மூலம் தான் சந்தித்த பிரச்சனைகளை விரிவாகப் பகிர்ந்துகொண்டார். “எனக்குச் சின்ன வயதிலிருந்தே முகத்தில் பருக்கள் ஏதும் வந்ததே இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நெற்றியில் சின்னதாக ஒரு பரு வந்தது. அதனைத் தெரியாமல் கிள்ளிவிட்டேன். இதுதான் என் முகம் முழுக்க பரவியதற்கான காரணம்.

அந்த சின்ன பரு வந்த ஆறு மாதத்திலேயே கன்னம், நெற்றி என எல்லா இடங்களிலும் பெரிய பெரிய பருக்கள். இதற்காக நான் செய்த மிகப் பெரிய தவறு, சரும பாதுகாப்பு நிபுணரை அணுகாமல், கப்பிங் எனும் ஒருவித தெரபியை அணுகியதுதான். இதுபோன்று ஏராளமான தெரபிக்கள் உள்ளன. தெய்வ செய்து அவற்றை முயற்சி செய்து பார்க்காதீர்கள். 100-ல் ஒருவருக்கு அது செட் ஆகுமே தவிர, முகத்தில் பரு வந்தாலே சரும பராமரிப்பு நிபுணரை அணுகுவதுதான் சிறந்தது.

2019-ல் பருக்கள் வந்தபோது யூடியூப் வீடியோக்கள்தான் செய்துகொண்டிருந்தேன். அப்போதுதான் அதிகப்படியான மேக்-அப் போட ஆரம்பித்தேன். ‘என்ன திடீர்னு அதிகமா போடுறீங்க?’ என கமென்ட்டுகளில் ரசிகர்கள் ஏராளமான கேள்விகளைக் கேட்பார்கள். வீடியோவை எடிட் செய்பவர்களும் எனக்காகக் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்துதான் பாண்டவர் இல்லம் வாய்ப்பு வந்தது. அந்த சமயத்தில் எந்த வாய்ப்புகள் வந்தாலும் தவறவிடக்கூடாது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பருக்கள் என்னுள் தாழ்வு மனப்பான்மையையும் நம்பிக்கையின்மையையும் உருவாக்கியது.

முகத்தில் வடுக்கள் என்றாலே கஷ்டம்தான். அதிலும் பெண்களுக்குக் குறிப்பாக மீடியா துறையில் இருப்பவர்களுக்கு முகம் மிகவும் முக்கியம். ஏகப்பட்ட நெகட்டிவ் ஃபீட்பேக்குகளை எதிர்கொண்டேன். அதுவே இப்படி இருக்கிறதே என்ற வருத்தம் என்னுள் நிறைய இருந்தது. 2019 முழுக்க ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டேன். பிறகு, எவ்வளவு நாள்தான் மறைத்துக்கொண்டிருப்பது என என் உண்மை முகத்தை உலகிற்குக் காட்டினேன். பருக்கள் வருவது போவது இயற்கைதான். இயல்புதான். அதை நினைத்து மனஅழுத்தம் தேவையில்லை என்கிற நிதர்சனத்தைப் புரிந்துகொண்டேன். ஒரு பரு வந்தாலே, அதன் வேர் நீங்க 3 வருஷம் தேவைப்படுமாம். அதனால், யாருக்கும் பருக்கள் வந்தால் அதை நினைத்து ஃபீல் பண்ணவேண்டாம். அதுவே மறையும்”
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil