By: WebDesk
Updated: December 25, 2019, 01:08:38 AM
Shanthi Williams
Shanthi Williams : மெட்டி ஒலி, தென்றல் போன்ற சீரியல்களில் கொடூர வில்லியாகவும், அந்நியன், பார்த்திபன் கனவு போன்ற படங்களில் குணச்சித்திரமாகவும் நடித்தவர் நடிகை சாந்தி வில்லியம்ஸ். கோயம்புத்தூரில் மலையாள பெற்றோர்களுக்கு மகளாக பிறந்த இவர், தனது 12 வயதில் குழந்தை நட்சத்திரமாக திரை வாழ்க்கையை தொடங்கினார்.
உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??
குழந்தை நட்சத்திரமாக இவரது முதல் படம் என்ன தெரியுமா? 1970-ல் வெளியான ‘வியட்நாம் வீடு’. பின்னர் 1999-ல் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். மலையாள ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ஜே.வில்லியம்ஸ் தான் சாந்தியின் கணவர். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
குடும்பத்துடன் சாந்தி வில்லியம்ஸ்
ஒரு புறம் மெட்டி ஒலி சீரியலில் தனது வில்லத் தனங்களை காட்டிக் கொண்டிருந்தாலும், நிஜ வாழ்க்கையில் அதிக சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார் சாந்தி வில்லியம்ஸ். ஆம், அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது, தீவிர கேன்சரால் அவரது கணவர் வில்லியம்ஸ் இறந்து விட, நான்கு குழந்தைகளையும் வளர்க்க சாந்தி மிகவும் சிரமப்பட்டுள்ளார். படங்களுக்காக நிறைய போராடியிருக்கிறார், ஆனால் எதிர்பார்த்தபடி எதுவும் கிடைக்கவில்லை. வேறென்ன செய்வது தான் வைத்திருந்த 1000 புடவைகளை விற்று, குழந்தைகளை படிக்க வைத்தாராம். வறுமையில் இருந்த போது ராதிகா, இயக்குனர் திருமுருகன், சித்திக் ஆகியோர் உதவி செய்ததை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறார்.
இது குறித்து முன்னணி ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்த சாந்தி, “மிக மிக வசதி, வாட்டும் ஏழ்மை என இருவித சூழலையும் எதிர்கொண்டிருக்கிறேன். வசதியோடு நடிச்ச காலத்துக்கும், குடும்பத் தேவைக்காக நடிக்கும் காலத்துக்குமான இடைவெளியில் நான் கற்ற பாடங்கள் மிக அதிகம். அதெல்லாம் மனதின் அழியாச் சுவடுகள். என் கணவர் கோடிகளில் சம்பாதிக்கும் போதும், நான் 200 ரூபாய் புடவை தான் கட்டுவேன். அதனால் அந்த வறுமை எனக்கு பெரிதாக தெரியவில்லை. ஆனால் காரில் போய்க் கொண்டிருந்த அவர், 75 பைசா கொடுத்து பஸ்ஸில் போகும் போது உடைஞ்சு போயிட்டேன்.” என்றார்.
ஒரு இரண்டரை ஆண்டுகள் சீரியல்களில் நடிக்காமல் இருந்த சாந்தி, 1 வருடத்திற்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.