பங்குனி மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய மாதம். இந்த மாதத்தில் நாம் தெய்வ வழிபாடுகளை இடையறாது செய்து வந்தால், நம் வாழ்க்கையில் இதுவரையிலான தடைகளெல்லாம் நீங்கும். வெற்றி நம்மைத் தேடி வரும், நாம் செய்கிற சின்னச் சின்ன தானங்கள் கூட மிகுந்த பலன்களைத் தரும் என்பது ஐதீகம்!
அதிலும் பங்குனியில் வருகிற உத்திரம் மகத்துவம் வாய்ந்தது என்கின்றன புராணங்கள்.
பங்குனி உத்திரம் என்பது முக்கியமான தினம்.
கடவுளர்களின் திருமணங்கள் நடைபெற்ற புண்ணிய நாளான, பங்குனி உத்திர நாளில், விரதமிருந்து, மனதார வேண்டிக் கொண்டால், கல்யாணத் தடை அகலும். திருமண வரம் தந்து அருளுவார்கள் தெய்வங்கள்.
பங்குனி உத்திர நாளில் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மேலும் குலதெய்வ வழிபாட்டுக்கு உகந்த நாளாகவும் பங்குனி உத்திரம் தினம் இருக்கிறது. இத்தினத்தில் குலதெய்வக் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்தால், குலம் சிறக்கும். மூதாதையரின் ஆசியும் கிடைக்கும்.
இந்த ஆண்டு பங்குனி உத்திரம் எப்போது?
இந்த ஆண்டு பங்குனி உத்திரம் மார்ச் 25 ஆம் தேதி திங்கள் கிழமை வருகிறது. மார்ச் 24 ஆம் தேதி காலை 08.47 மணிக்கே உத்திரம் நட்சத்திரம் தொடங்கி விட்டாலும், காலை 11.17 மணிக்குதான் பெளர்ணமி திதி துவங்குகிறது.
மார்ச் 25 ஆம் தேதி தான், சூரிய உதய சமயத்தில் பெளர்ணமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் இணைந்து உள்ளன. இதனால் மார்ச் 25 ஆம் தேதியையே பங்குனி உத்திர நாளாக கணக்கில் எடுத்துக் கொண்டு விரதம் இருக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“