இந்த முறை சந்திர கிரகணம் நிகழும் நாளில் பங்குனி உத்திர தினம் வருகிறது. இந்நிலையில் காலை முழுவதும் கிரகணம் உள்ளதால், எந்த நேரத்தில் விரதம் இருக்கலாம் மற்றும் எப்போது கோவிலுக்கு சென்று நேர்த்திகடன் நிறைவேற்ற வேண்டும் ? என்பது தொடர்பாக நாம் தெரிந்துகொள்ளலாம்.
பங்குனி மாத பெளர்ணமியை பங்குனி உத்திர பெருவிழாவாக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். தெய்வ திருமணங்கள் பலவும் நடந்த நாள் என்பதால் இது மிகவும் முக்கியம் வாய்ந்த நாளாக உள்ளது. இந்த நாளில் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், திருக்கல்யாண வைபவங்கள் போன்றவை நடைபெறும். மக்கள் விரதம் இருந்து, காவடி எடுத்து முருகனை வழிபடுவது உண்டு.
திருமண வரம் தரும் விரத நாள் என்பதால் ஏராளமான திருமணம் ஆகாத பெண்கள், இளைஞர்களும் இந்த நாளில் விரதம் இருப்பார்கள். வருகின்ற மார்ச் 25ம் தேதி பங்குனி உத்திரம் மற்றும் சந்திர கிரகணமும், கிட்டதட்ட 69 ஆண்டுகளுக்கு பிறகு சேர்ந்து நிகழ்கிறது.
அன்று காலை 10.23 முதல் பகல் 03.02 வரை கிரகணம் நிகழ உள்ளது. கிரகண நேரம் கெட்ட நேரமாக கருதப்படுகிறது, இதனால் இந்த நேரத்தில் எந்த நல்ல விஷயங்களும் செய்ய முடியாது.
ஜோதிடத்தில், சந்திரனை மனோகாரகன் என்பார்கள். இந்நிலையில் கிரகண நேரத்தில் எதுவும் உண்ணாமல் விரதம் இருந்து வழிபாட்டில் கவனம் செலுத்துவது,நம்முடைய ஆன்மீக வளர்ச்சிக்கு உதவும். முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபடுவதற்கும் கிரகண நேரம் மிக சிறப்பானதாகும்.
இந்த தினத்தில் காலை 7.30 முதல் 9 வரையிலான நேரம் ராகு காலம் ஆகும். 10.30 முதல் 12 மணிவரையிலான நேரம் எமகண்ட நேரமாகும். இதனால் பங்குனி உத்திர விரதம் இருப்பவர்கள் காலை 7.15 முன்பாக வழிபாடு முடித்துவிட வேண்டும். அப்போது வழிபாடு செய்ய முடியாதவர்கள், காலை 9.15 மணிக்கு பிறகு வழிபாட்டை தொடங்கி, 10 மணிக்கு வழிபாட்டை முடித்துவிட வேண்டும்.
மாலை 3.30 மணி வரை எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். மாலையில் கோவில்களில் பூஜை நடைபெறும். கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த பிறகு விரதத்தை முடித்து கொள்ளலாம். காலையில் வழிபட முடியாதவர்கள், இரவு 8 மணிக்கு வீட்டில் விளக்கேற்றி முருகனை வழிபடலாம்.
கிரகணம் முடிந்த பிறகே குளிக்க வேண்டும். விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது சிவனின் மகா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை கேட்கவோ, படிக்கவோ செய்யலாம். ஓம் நம சிவாயா அல்லது ஓம் நமோ நாராயணா மந்திரங்களை கிரகண நேரத்தில் உச்சரிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“