தமிழ் மாதத்தில், பங்குனி மாதத்தை மங்கல மாதம் என்றே சொல்கின்றன சாஸ்திரங்கள். புராணங்களில் குறிப்பிட்டிருக்கும் சகல மங்கல காரியங்களும் பங்குனி மாதத்தில்தான் அரங்கேறி இருக்கின்றன.
பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திர நாள் மிக மிக விசேஷமானது.
ஸ்ரீராமபிரான்- சீதாதேவி, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்- ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த நன்னாள் பங்குனி உத்திரம்.
முருகப் பெருமான்- தெய்வானை திருமணம் நடந்த நாள். ஸ்ரீவள்ளி அவதரித்த தினமும் இதுதான் என்கிறது புராணம்.
இந்த மாதத்தில் நாம் தெய்வ வழிபாடுகளை இடையறாது செய்து வந்தால், நம் வாழ்க்கையில் இதுவரையிலான தடைகளெல்லாம் நீங்கும். வெற்றி நம்மைத் தேடி வரும், நாம் செய்கிற சின்னச் சின்ன தானங்கள் கூட மிகுந்த பலன்களைத் தரும் என்பது ஐதீகம்!
இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திரம் மார்ச் 24-ம் தேதி வருகிறது.
குலதெய்வ வழிபாடு
குலதெய்வ வழிபாட்டுக்கு உகந்த நாளாகவும் பங்குனி உத்திரம் தினம் இருக்கிறது. இத்தினத்தில் குலதெய்வக் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்தால், குலம் சிறக்கும். மூதாதையரின் ஆசியும் கிடைக்கும்.
பங்குனி உத்திர விரதம்
பங்குனி உத்திர தினத்தில் அனுஷ்டிக்கும் விரதத்தைத் திருமண விரதம் என்று சொல்வார்கள்.
இத்தினத்தில் மேற்கொள்ளும் விரதம் மிகவும் விசேஷமானது. நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ விரும்பும் தம்பதியர் விரதம் இருந்து சிவனுக்கும் சிவபார்வதிக்கும் அபிஷேகம் செய்வார்கள். திருமணமாகாதவர்களும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். அப்படிச் செய்தால், நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த விரதத்தை முருகனை வேண்டியும் செய்யலாம். அதோடு அன்னதானம், வஸ்திர தானம் செய்வதும் சிறப்பானது. ஜாதக தோஷத்தால் திருமணம் தடைபட்டவர்கள் வழிபாடு மேற்கொள்ளவும் சிறந்த நாள் இது. செவ்வாய் தோஷம் காரணமாகத் திருமணத் தடங்கலைச் சந்திப்பவர்கள் பங்குனி உத்திரத்தன்று முருகனை மனமுருகி வணங்கினால் திருமணத் தடைகள் நீங்கி, திருமணம் சுபமாக முடியும் என்பது ஐதீகம்.
அன்னதானம்
பங்குனி உத்திர நன்னாளில், நம்மால் முடிந்த அன்னதானங்களைச் செய்வது மிகுந்த புண்ணியம் தரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். எலுமிச்சை சாதம் அல்லது தயிர்சாதம் அல்லது சர்க்கரைப் பொங்கல் என அன்னதானம் செய்யலாம்.
அதேபோல், நம்மால் முடிந்த அளவுக்கு மஞ்சள், சரடு, குங்குமம், கண்ணாடி என மங்கலப் பொருட்களை பெண்களுக்கு வழங்குவதும் விசேஷ பலன்களைக் கொடுக்கும். முருகப் பெருமான், நமக்கு இதுவரை இருந்த காரியத்தடைகள் அனைத்தையும் களைந்து நமக்கு நல்வழி காட்டி அருளுவார் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“