வைத்தீஸ்வரன்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுர ஆதீனத்திற்கு உட்பட்ட அருள்மிகு தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோயில் நவகிரகங்களில் செவ்வாய் தலமாகவும், முருக பெருமான் செல்வ முத்துக்குமார சுவாமியாக தனி சன்னிதியிலும் இங்கு அருள்பாளிக்கின்றனர்.
இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் பங்குனி மாத திருவிழா வெகு உற்சாகமாக கொண்டாடப்படுகின்றது. பங்குனி மாத பிரமோற்சவ திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 6-ம் தேதி திருவடைச்சான் சப்பரமும், 7-ம் திருநாளான தேரோட்டம் கடந்த 8-ம் தேதியும் நடைபெற்றது. பங்குனி உத்திரமான இன்று நரி ஓட்டத்துடன் தீர்த்தவாரி நடைபெற்றது. 13-ம் தேதி காட்சி திருநாளும், 14-ம் தேதி தெப்போற்சவமும் நடைபெறுகின்றது. விநாயகர், சுவாமி -அம்பாள், செல்வமுத்துகுமாரசுவாமி, அங்காரகன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடைபெற்றது.
மேலும், வைத்தீஸ்வரன்கோயில் வரும் பக்தர்களின் நோய்களைப் போக்கும் ஐதீகம் கொண்ட மூலவர் வைத்தியநாத சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு நோய் தீர்த்து வருகிறார். இந்த கோயிலில் அமைந்துள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டு கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்துருண்டையை உட்கொண்டால், 4448 வகையான வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம்.
முன்னதாக, இந்த திருவிழாவின்போது அருள்மிகு வைத்தியநாத சுவாமியும், தையல்நாயகி அம்மனும் தீர்த்தவாரிக்காக வீதியுலா செல்வார்கள், அதனை தொடர்ந்து நாய் ஓட்டம் நரி ஓட்டம் எனும் யானை ஓடும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்