சீரியல் நடிகை பவித்ரா ஜனனி சமீபத்தில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அமைந்துள்ள தட்சிணேஷ்வர் காளி, காளிகட் காளிகா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.
இங்கு என்ன சிறப்பு?
கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ள காளிகட் காளிகா கோயிலுக்கு அனைத்து மதத்தினரும் வந்து வழிபடுவது தனிச்சிறப்பு.
காளிகட் பகுதியில் கங்கையும் கடலும் கலப்பதால், இங்கு நீராடுவது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பக்தர்கள் தங்கள் முன்னோருக்கு திதி கொடுக்கும் வழக்கமும் இங்கு உள்ளது. ஸ்நானம், பூஜை, சங்கல்பம், தர்ப்பணம் கொடுப்பது ஆகியவற்றை முடித்த பிறகே பக்தர்கள் காளி தரிசனத்துக்குப் புறப்படுகின்றனர்.
200 ஆண்டு கால பழமையானதாக கோயிலமைப்பு இருந்தபோதிலும், இக்கோயில் பற்றிய தகவல்கள் 15 முதல் 17-ம் நூற்றாண்டு இலக்கிய பதிவுகளிலும் காணப்படுகின்றன.
முதலாம் குமாரகுப்தா காலத்திய நாணயங்கள் இத்தலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முன்பு சிறிய குடிசையாக இருந்த இந்தக் கோயில் மானசிங் மன்னரால் 16-ம் நூற்றாண்டில் விரிவாக்கம் செய்து கட்டப்பட்டது. பின்னர் சபர்ணா ராய் சௌத்ரி குடும்பத்தினர் தற்போதைய அமைப்புள்ள கோயிலை 1806-ல் கட்டினர்.
தட்சிணேஷ்வர் காளி
ஹூக்ளி ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள தட்சிணேஷ்வர் காளி கோயிலில் காளிதேவி பவதாரிணியாக இருந்து அருள் பாலிக்கிறார்.
காளி தேவிக்கு ராமகிருஷ்ண பரமஹம்சரின் தமையனார் பூஜைகள் செய்து வந்தார்.
அவரது காலத்துக்குப் பிறகு ராமகிருஷ்ணர் காளிதேவிக்கு பூஜைகள் செய்து அவரது தரிசனத்தைப் பெற்றார். இதே இடத்தில் சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சரை குருநாதராக ஏற்று அருள்பெற்றார்.
இங்கு நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும். எண்ணற்ற பக்தர்கள், வெளியூர் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் வந்திருந்து காளிதேவிக்கு வழிபாடுகள் செய்வது வழக்கம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“