பீர்க்கங்காயில் அதிக சத்து நிறைந்துள்ளது. நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் தாது உப்புகள் உள்ளதால் இதனை சாப்பிட உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். அதோடு பீர்க்கங்காய் தோல் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. பீர்க்கங்காய் தோல் வைத்து சுவையான துவையல் செய்வது குறித்துப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பீர்க்கங்காய் தோல் – 1 கப்
புதினா – 1/2 கப்
கொத்தமல்லி – 1/2 கப்
தேங்காய் – 1/2 கப்
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்
புளி – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2
உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – 3/4 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் பீர்க்கங்காயை தோல் சீவி தனியாக எடுத்துக் கொள்ளவும். புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் நறுக்கி வைக்கவும். தேங்காயை துருவி வைக்வும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு போட்டு வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
அதே கடாயில் பீர்க்கங்காய் தோலினை சேர்த்து நன்றாக வதக்கி தனியாக வைக்கவும். பிறகு புதினா, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாயினை சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது வதக்கி வைத்த பொருட்களை ஆற விடவும். சிறிது நேரம் கழித்து ஆறவைத்துள்ள பொருட்களுடன் தேங்காய் , புளி, பெருங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அவ்வளவு தான் இப்போது பீர்க்கங்காய் தோல் புதினா துவையல் ரெடி. சூடு சோறு, இட்லி. தோசைக்கு வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். ட்ரை செய்து பாருங்க.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“