சந்திர கிரகணத்தை ரசிக்க அலைமோதும் பொதுமக்கள்!

சந்திர கிரகணம் மீண்டும் 2028-ம் ஆண்டுதான் நிகழும் என்பதால் இன்றைய சந்திரகிரகணத்தை காண மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்

இந்தியாவில் ‘சூப்பர் ப்ளூ பிளட் மூன்’ எனப்படும் அபூர்வ சந்திர கிரகணம் மாலை 5.18 மணிக்கு  தொடங்கியது. 152 ஆண்டுகளுக்கு பின் இந்த அபூர்வ சந்திர கிரகணம் தெரிவதால், இதனை பார்க்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சுமார் 152 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் மூன், ப்ளு மூன், பிளட் மூன் ஆகிய அரிய நிகழ்வுகளுடன் இந்த சந்திர கிரகணம் தோன்றியது. சூரியனுக்கும், நிலாவுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது படும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, முழு சந்திர கிரகணம் ஏற்படும்.

இதுபோன்றதொரு சந்திர கிரகணம் மீண்டும் 2028-ம் ஆண்டுதான் நிகழும் என்பதால் இன்றைய சந்திரகிரகணத்தை காண மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தின் பல இடங்களிலும் சமவெளிப் பகுதியில் மக்கள் சந்திர கிரகணத்தை காண குவிந்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரையிலும் சந்திர கிரகணத்தை காண மக்கள் திரண்டுள்ளனர்.

இதேபோல் சென்னை பிர்லா கோளரங்கத்திலும் சந்திர கிரகணத்தை காண மக்கள் குவிந்தனர். பிர்லா கோளரங்கத்தில் உள்ள தொலை நோக்கி மூலம் மக்கள் வரிசையில் சந்திர கிரகணத்தை கண்டுகளித்து வருகின்றனர்.

முன்னதாக, இன்றைய சந்திர கிரகணம் குழந்தைகளுடன் ரசிக்க வேண்டிய அரிய நிகழ்வு என்றும் வீட்டுக்குள் சென்று மறைய தேவையில்லை என்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய இணை இயக்குநர் சவுந்தரராஜ பெருமாள் தெரிவித்து இருந்தார். மேலும், சமூக தளங்களிலும் சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என்று தகவல்கள் பரவியதால், வதந்திகளை நம்பாமல், பலரும் இதனை கண்டுகளிக்க ஆர்வம் காட்டினர்.

சிலர், இந்த சந்திர கிரகண நேரத்தில் வீட்டில் எதுவும் சமைக்கக் கூடாது என்றும் கூறுகின்றனர். ஆனால், இவற்றுக்கும் அறிவியல் சான்றுகள் இல்லை என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

×Close
×Close