Pepper Rasam Recipe, Pepper Rasam Tamil Video: மட்டன், சிக்கன் ஒருபக்கம்... அதிரசம், முருக்கு, முந்திரி கொத்து என எண்ணெய் பண்டங்கள் மறுபக்கம்... என தீபாவளியை ரொம்ப வெயிட்டாக கொண்டாடிவிட்டீர்களா? உங்கள் வயிறு சற்றே திணறியிருந்தால், அதற்கு மருந்து மிளகு ரசம்.
Advertisment
இயல்பாகவே ஜீரண சக்தியை தூண்டுவதும், நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடியதுமான மிளகு ரசம் வாரத்திற்கு சில நாட்கள் நம் உணவில் இடம்பெற வேண்டியது அவசியம். சுலபமாக குறைந்த நேரத்தில் செய்து முடிக்கக் கூடிய ஒன்று என்பதால், பேச்சிலர்களுக்கு தோன்றாத் துணை இந்த மிளகு ரசம்.
சிக்கனமான செலவில் செய்யக்கூடிய இந்த மிளகு ரசத்தை சூப்பரான சுவையில் எப்படி செய்வது? என இங்குக் காணலாம்.
Pepper Rasam Tamil Video: மிளகு ரசம்
Advertisment
Advertisements
மிளகு ரசம் செய்யத் தேவையான பொருட்கள்: புளியை கரைத்து எடுக்கப்பட்ட புளி கரை 2 மேசைக் கரண்டி எடுத்துக்கொள்ள வேண்டும். தக்காளி 1 நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். கறிவேப்பிலை சிறிதளவு, கருப்பு மிளகுத்தூள் 1 அல்லது 2 டீஸ்ஃபூன் எடுத்துகொள்ள வேண்டும். பூண்டு ஒரு 5 பல், சீரகம் 1 டீஸ்ஃபூன், பெருங்காயத் தூள் 1 டீஸ்பூன், கொத்தமல்லி சிறிதளவு நறுக்கியது எடுத்துக்கொள்ள வேண்டும். 2 சிவப்பு மிளகாய், தேவையான அளவு உப்பு, மஞ்சள் 1/2 டீஸ்ஃபூன், கடுகு சிறிதளவு, எண்ணெய் 1 டீஸ்ஃபூன் ஆகியவற்றை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.
Milagu Rasam In Tamil: மிளகு ரசம் செய்முறை:
2 சிவப்பு மிளகாய், மிளகு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடு பண்ண வேண்டும். நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை, மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 3-4 நிமிடங்கள் வதக்க வேண்டும்.
இதற்கு அடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள மிளகு சீரகம், பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை கலந்த தூளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதையடுத்து, புளிக் கரைசலுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து தீயைக் குறைத்து வாணலியை மூடிவைத்து 10 நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். அதே நேரத்தில் ரசத்தை அதிக நேரம் கொதிக்கவிடவும் கூடாது.
மற்றொரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி அதில், கடுகு, சிவப்பு மிளகாய் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்க வேண்டும். பின்னர் வறுத்த பொருட்களை, கொதிக்கும் ரசத்தில் கலக்க வேண்டும். பின்னர், ரசத்தை அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லி சேர்த்து, சாப்பிட பரிமாறலாம். இன்னும் கொஞ்சம் மிளகு காரம் தூக்கலாக இருக்க வேண்டும் என்றால் சிறிது மிளகு தூள் சேர்த்துக்கொள்ளலாம்.
அத்தியாவசியமான இந்த மிளகு ரசத்தை சூப்பரான சுவையில் செய்து மகிழுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"