வீட்டில் நாம் விரும்பாத விருந்தினர்கள் என்றால் அது பூச்சிகள்தான். ஆனால், பெரும்பாலும் நமக்குத் தெரியாமலேயே பூச்சிகளுக்கு நம் வீட்டிற்குள் சிவப்பு கம்பளம் விரித்து வருகிறோம். பூச்சிகள் சிறிய இடைவெளிகள் வழியாகக்கூட உள்ளே நுழைந்து தங்கள் இடங்களை அமைத்துக் கொள்ளும் திறமை கொண்டவை. நமது அன்றாடப் பழக்கவழக்கங்களில் நாம் செய்யும் சில தவறுகள் இந்தப் பூச்சிகளுக்கு அமைதியான அழைப்பை விடுக்கின்றன.
பொதுவாக, சுவர்களில் உள்ள விரிசல்கள் மற்றும் மோசமாக அடைக்கப்பட்ட வடிகால்கள் வழியாக பூச்சிகள் வீட்டுக்குள் நுழைகின்றன என்பதை நாம் அறிவோம். ஆனால், நாம் செய்யும் ஐந்து பொதுவான தவறுகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.
1. சிதறிய உணவுத் துகள்களை அலட்சியம் செய்வது
சமையலறையில் சமைக்கும்போது சிதறல்கள், சிந்தல்கள் மற்றும் துகள்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஆனால், இது சமையலறையுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. சாப்பாட்டு மேசையிலோ அல்லது சோஃபாவிலோ சாப்பிடும்போது விழும் சிறிய துகள்கள்கூட பூச்சிகளுக்கு ஒரு விருந்தாகும்.
எறும்புகள், கரப்பான் பூச்சிகள், மற்றும் சிறிய கொறி விலங்குகளுக்கு இந்த துகள்கள் ஒரு திறந்த விருந்துக்குச் சமம். மோசமான விஷயம் என்னவென்றால், இந்த பூச்சிகள் மீதமுள்ள உணவை சாப்பிடுவதோடு நின்றுவிடுவதில்லை, அவை அங்கேயே தங்கி இனப்பெருக்கமும் செய்கின்றன.
2. இரவில் பாத்திரங்களை அப்படியே விட்டுவிடுவது
இரவில் பாத்திரம் கழுவுவது ஒரு அலுப்பான வேலையாக இருக்கலாம். ஆனால், பாத்திரங்களை அப்படியே விட்டுவிட்டு தூங்குவது பூச்சிகளுக்கு அழைப்பு விடுப்பதுபோல்தான். பாத்திரங்களில் ஒட்டியுள்ள உணவுத் துகள்கள், எண்ணெய் மற்றும் தேங்கிய நீர் ஆகியவை எறும்புகள், கரப்பான் பூச்சிகள் மற்றும் பழ ஈக்களை ஈர்க்கின்றன.
காலையில் பாத்திரங்களில் ஒருவித கெட்ட வாசனையை நீங்கள் உணரலாம். இது வெறும் சுகாதாரப் பிரச்சனை மட்டுமல்ல. பூச்சிகள் ஈரப்பதம் மற்றும் உணவுத் துகள்களால் ஈர்க்கப்படுகின்றன. எனவே, இரவில் தூங்குவதற்கு முன் பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்துவிடுங்கள்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/N2nU1L7l60F3YIVT499F.jpg)
3. செல்லப் பிராணிகளின் உணவை அலட்சியம் செய்வது
உங்கள் செல்லப் பிராணிக்காக வைக்கப்பட்ட உணவு, பூச்சிகளுக்கும் மிகவும் பிடிக்கும். புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உலர்ந்த உணவும், ஈரமான உணவும் வலுவான வாசனையை வெளிப்படுத்துகின்றன. இது எறும்புகள், கரப்பான் பூச்சிகள் மற்றும் கொறி விலங்குகள் போன்ற பல்வேறு பூச்சிகளை ஈர்க்கிறது.
செல்லப் பிராணிகள் சாப்பிட்ட பிறகு மீதமுள்ள உணவுத் துண்டுகள் பூச்சிகளுக்கு ஒரு காந்தம் போல செயல்படும். பூச்சிகளை அண்டாமல் இருக்க, ஒவ்வொரு உணவுக்குப் பிறகும் கிண்ணங்களை சுத்தம் செய்து, உணவை காற்று புகாத பாத்திரங்களில் சேமித்து வையுங்கள்.
4. பொருள்கள் குவிந்திருக்கும் இடங்களும், அட்டைப் பெட்டிகளும்
பூச்சிகள் இருளான, தொந்தரவு இல்லாத மற்றும் அரிதாக சுத்தம் செய்யப்படும் இடங்களை விரும்புகின்றன. வீட்டு மூலையில் குவிந்திருக்கும் பொருள்கள் மற்றும் அட்டைப் பெட்டிகள் அவர்களுக்கு சரியான மறைவிடத்தை வழங்குகின்றன.
குறிப்பாக, அட்டைப் பெட்டிகள் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, பூச்சிகள் தங்குவதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் எளிதாக உள்ளன. எனவே, அவ்வப்போது தேவையில்லாத பொருள்களை அகற்றுவது, தளபாடங்களுக்குப் பின்னால் உள்ள இடத்தை சுத்தம் செய்வது, அட்டைப் பெட்டிகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் சேமிப்பு கொள்கலன்களைப் பயன்படுத்துவது பூச்சிகளை வீட்டிலிருந்து விலக்கி வைக்கும்.
5. உட்புறச் செடிகளுக்கு அதிகமாக நீர் ஊற்றுவது
உட்புறச் செடிகள் உங்கள் வீட்டிற்கு அழகு சேர்க்கலாம். ஆனால், அவற்றுக்கு அதிகமாக நீர் ஊற்றுவது செடிகளுக்கு மட்டுமல்ல, உங்கள் வீட்டிற்கும் தீங்கு விளைவிக்கும். மண்ணில் அதிகப்படியான ஈரப்பதம் அல்லது பாத்திரங்களுக்கு அடியில் சேகரிக்கப்படும் நீர், பூஞ்சை ஈக்கள், கொசுக்களுக்கு ஏற்ற ஈரப்பதமான சூழலை உருவாக்குகிறது.
இதை தடுக்க, தேவையான அளவு மட்டும் நீர் ஊற்றவும், சரியான வடிகால் வசதி இருப்பதை உறுதி செய்யவும், மற்றும் தொட்டியின் அடியில் உள்ள தட்டில் உள்ள நீரைத் தவறாமல் அகற்றவும்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.