வெயிலோடு விளையாடு : கோடையை எதிர்கொள்ள சில டிப்ஸ்

வெயிலிலும் மண்ணிலும் குழந்தைகள் விளையாடினால் அவர்களது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது

சூர்யகுமார்

கோடையின் உக்கிரம் அனைவரையும் பாதித்துக்கொண்டிருக்கும் நேரமிது. எனினும் மாணவர்களை இந்தக் கொளுத்தும் வெயில் பெரிதாக முடக்கிவிடுவதில்லை. வெயிலில் விளையாடும் மாணவர்களின் ஆர்வம் குறையப்போவது இல்லை.

ஆனால் அவர்களுக்கான வாய்ப்புகளும் வசதிகளும் அவர்களது விருப்பத்திற்கேற்ப இல்லாமல் இருப்பதும், வெயிலில் விளையாடுவது பற்றிய தவறான எண்ணங்களும் மாணவர்களுடைய ஆர்வத்தைக் குறைத்துக்கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் காலி இடங்களெல்லாம் விளையாடும் மைதானம்தான். ஆனால் இன்று மைதானங்கள்கூடக் கட்டிடங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. பெற்றோர்களும் பிள்ளைகளை வெயிலில் போனால் கருத்துவிடுவாய், வியர்க்குரு போன்ற பல சரும நோய்கள் வரும் என்று பயமுறுத்திவிடுகிறார்கள்.

இதுபோன்ற பயமுறுத்தல்களால் மாணவர்கள் வீட்டிற்குள்ளேயே அடைந்துவிடக் கூடாது. வெயிலில் தலை காட்டமலே அடைந்து கிடந்து என்றாவது வெளியில் வந்து நிற்கும் பலர் வியர்வையைக்கூட நோய் என்றே கருதுகிறார்கள். வியர்வை வராவிட்டால்தான் நோய்கள் நிறைய வரும். உடலில் உள்ள கழிவுகள் வியர்வை மூலமும் வெளியேறுகின்றன. வியர்வை வர உழைப்பதும் விளையாடுவதும் மிகவும் அவசியம். வெயிலில் விளையாடினால் தோல் வியாதிகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும் என்பது மருத்துவ அறிவியலில் கூறப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

வெயிலிலும் மண்ணிலும் குழந்தைகள் விளையாடினால் அவர்களது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எப்படி இயற்கையையும் மனித வாழ்க்கையையும் பிரிக்க முடியாதோ அதேபோல் குழந்தைகளையும் விளையாட்டையும் பிரிக்க முடியாது. பிரிக்கவும் கூடாது. வெயிலில் விளையாடாமல் அடைத்து வைக்கப்படும் மாணவர்களுக்குப் பல விதமான பிரச்னைகள் உருவாகின்றன.

வீட்டிற்குள் நுழையும் நோய்கள்

வீட்டிற்குள் பிள்ளைகள் அடைக்கப்படுவதால்தான் சிறு வயதிலேயே ரத்த அழுத்தம், மன அழுத்தம், திறமை குறைபாடு, தைரியமின்மை, சுய நம்பிக்கையற்ற தன்மை போன்றவை உருவாகின்றன. இதனால் பிள்ளைகளுக்குத் தலைவலி ஏற்பட்டு, சோர்வடைந்து சிறு வயதிலேயே மூக்குக் கண்ணாடி அணிய வேண்டிய நிலைகூட ஏற்படுகிறது.

விளையாட்டு என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. ஒருவர் விளையாடும் விளையாட்டு அவர் யாரென்று சொல்லிவிடும். விளையாட்டு நம்முடைய மனநிலையை அப்படியே பிரதிபலிக்கும், நம் மனநிலையை மாற்றவும் செய்யும். விளையாட்டு நமக்குப் பாடமும் கற்பிக்கும். விளையாட்டு உடல் வலிமையைக் கூட்டும், மன வலிகளைக் குறைக்கும். விளையாட்டு என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது திறமை, ஆளுமை, கொண்டாட்டம்.

கஷ்டத்தைத் தாங்கும் திறன்

ஸ்டாமினா என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் தாக்குப் பிடிக்கும் திறன் ஒவ்வொருவருக்கும் முக்கியம். நெடுநேரம் கஷ்டத்தைத் தாங்கும் திறன் நீண்ட நேரம் வெயிலில் ஓடி விளையாடுவதால் மட்டுமே கிடைக்கும். உடல் வலிமையையும் மன வலிமையையும் தரும் விளையாட்டுகளை மாணவர்கள் நிச்சயம் விளையாட வேண்டும். ஆண்ட்ராய்ட் போன்களிலும் டேப்களிலும் கம்ப்யூட்டரிலும் மட்டும் விளையாடாமல் நிஜமான களத்தில் வியர்வை வழிய விளையாட வேண்டும்.

ஆனால் மாறிவரும் மக்களின் வாழ்நிலையும் மனநிலையும் வெயிலை வேண்டாத வார்த்தையாய் மாறிவிடும்போல இருக்கிறது. நம் தாத்தா பாட்டிகள் வாழ்ந்துவந்த வாழ்க்கையைக் கண்கூடாகக் கண்ட நம் பெற்றோர்களே இந்த பயத்தை அவர்களின் பிள்ளைகளிடம் விதைக்கிறார்கள். அதற்கும் காரணங்கள் உண்டு. முன்பெல்லாம் உழைத்தால்தான் பிழைக்க முடியும். ஆனால் இப்போது படித்தால்தான் பிழைக்க முடியும் என்று நிலை மாறிவிட்டது. ஆனால் அதற்காக குழந்தைகளை விளையாட்டிலிருந்து பிரிப்பதென்பது தவறான காரியம்.

பெற்றோர்கள் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். மாணவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக அவர்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவத்தை அறிவுறுத்தி களைப்பைப் போக்கும் அம்சங்களையும் ஏற்படுத்தித் தர வேண்டும். வலிமையான ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவதன் மூலமே ஒரு நல்ல சமுதாயத்தையும் எதிர்காலத்தையும் உருவாக்க முடியும்.


வெயிலை சமாளிக்க பத்து டிப்ஸ்:

1. மண் பானைகளில் நீர் சேகரித்துக் குடிப்பது
2. தர்பூசணி, வெள்ளரி போன்ற அதிக நீர்ச்சத்துள்ள பழங்களைச் சாப்பிட வேண்டும்.
3. கோடைக்காலத்திற்கேற்ற உணவுப் பழக்கங்கள்
4. அதிக நீர் அருந்த வேண்டும். இடைவெளி விட்டு நீர் அருந்துவது நல்லது.
5. குளிர்பானங்கள் அருந்துவதைத் தவிர்த்து சாதாரண நீரை அருந்த வேண்டும்.
6. மதிய வேளையில் மோரில் நன்கு நீர் கலந்து அதனுடன் சீரகம், கொத்தமல்லி சேர்த்து குடிப்பது நல்லது.
7. தினமும் இருமுறை குளிப்பது நல்லது. அதிக வியர்வை இருக்கும்போது, வெயிலில் இருந்து திரும்பிய உடன் குளிக்கக் கூடாது.
8. கருமை நிற ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது.
9. பருத்தியினாலான ஆடைகளை அணிவது நல்லது.
10. இளநீர், பனை நுங்கு உடல் வெப்பத்தைத் தடுத்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும்.

*

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Play with warm up some tips on how to get rid of summer

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com