Advertisment

அரசியல் பிக்பாஸ் : மொக்கை பட்டம் வேண்டாம்

தமிழகத்தின் ஆகச் சிறந்த பொழுதுப்போக்கு நிகழ்ச்சி " BIG BOSS’’. இந்த நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் சிலரை அனுப்பி வைத்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அரசியல் பிக்பாஸ் : மொக்கை பட்டம் வேண்டாம்

அபி அப்பா என்ற தொல்காப்பியன்

Advertisment

(தமிழகத்தின் ஆகச் சிறந்த பொழுதுப்போக்கு நிகழ்ச்சி " BIG BOSS’’. இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசியல் தலைவர்கள் சிலரை அனுப்பி வைத்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே இது. யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல.)

தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள் ப.செ., ப.சாமி, சுசிகலா, கதிரவன், சி.கோட்டை, வெற்றிகுமார், ஒளியம்மா, கே.பி.ராஜன், ம.பா, என்.வி.நாதன், கம்பத், ஜெயவேல், டிடிஎஸ், கர்நாடகா புகழ், செல்லாத ராஜு, வி.மணி மற்றும் இவர்கள் சார்ந்த இயக்கத்தின் சாதாரண தொண்டன் பரணி ஆகிய 17 பேர் பிக் பாஸ் வீட்டின் உள்ளே! சுற்றியும் 234 கேமிராக்கள், ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. 100 நாட்கள் உள்ளே இருக்க வேண்டும். வாரம் ஒருவரை மக்கள் ஓட்டு போட்டு வெளியே அனுப்புவார்கள். மக்கள் வெளியே அனுப்பாவிட்டால் பிக்பாஸ்க்கு பிடிக்காவிட்டால் அவரே வெளியேவும் அனுப்புவார். இது தான் விதி. ’’ஐ ஆம் வாட்சிங் யூ.....” என்கிற கணீர் குரல்... அவர் வேறு யாரும் இல்லை... பிக்பாஸ் ஜோடி தான்!

வீட்டின் உள்ளே அனைவரும் வந்து விட்டனர். பிக்பாஸ் குரல் கேட்கின்றது.

பிக்பாஸ்:- அனைவரும் வருக வருக! இப்போது உங்களுக்குள் ஒருவரை தலைவராக தேர்ந்தெடுங்கள். அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அதில் பிக்பாஸ் தலையிடமாட்டார். தேர்ந்தெடுப்பது உங்கள் சுதந்திரம். ஆனால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் குடும்ப தலைவர் பிக்பாஸின் விதிகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.

சுசிகலா:- மிக்க நன்றி பிக்பாஸ். சரி... தலைவரை தேர்வு செய்ய என்ன ரூல் பாஸ்?

பிக்பாஸ் :- விதி 1, தலைவர் அடக்கமானவராக இருக்க வேண்டும்.

கம்பத்:- எங்க அம்மா தான் ஆறாவது முறையா குடும்ப தலைவரா பாஸ். அவங்கதான் இங்க இல்லயே பாஸ்.

பிக்பாஸ் :- உஷ்ஷ்... எனக்கு எதிர்த்து பேசினா பிடிக்காது. அடுத்த விதி. அவர் மதுரை மண்டலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்!

கதிரவன் :- ஒத்துக்க முடியாது பாஸ்.

பிக்பாஸ் :- உஷ்ஷ்... அடுத்த விதி. அவர் தேனி தொகுதியில் இருந்து தேர்வாகி இருக்க வேண்டும். இதை தவிர வேறு விதிகள் இல்லை. இனி தேர்வு செய்வது உங்கள் சுதந்திரம். உங்கள் சுதந்திரத்தில் பிக்பாஸ் தலையிடமாட்டார்.

சுசிகலா :- உக்கூம்... இது பிக்பாஸ் விதி இல்ல. எங்க தலைவிதி! இதுக்கு யார் தலைவர்னு நேராவே சொல்லி இருக்கலாம்.

இருந்த போதிலும் ஆலோசனையில் ஈடுபடுகின்றார்.

ப.செ.வை தவிர்த்து எல்லோரும் ஒரு குரூப்பாக ஆலோசனை செய்து, “இப்போதைக்கு ப.செவை தலைவராக்கி அடுத்த வாரமே எவிக்‌ஷன்ல அனுப்பிடலாம். அடுத்த தலைவராக சுசிகலாவை அமர்த்தலாம், என முடிவெடுக்கின்றனர். அதன் படி முதல் வாரம் ப.செ. தலைவராகின்றார்.

முதல் எவிக்‌ஷனிலேயே ப.செவை நாமினேட் செய்துவிடுகிறார்கள். அவர் அதிக ஓட்டுகள் வாங்கி எவிக்‌ஷனில் முதலில் இருக்கின்றார். அடுத்து ஒளி இருக்கிறார். ஒளி எவிக்‌ஷனுக்கான காரணம் அவர், அவர் எப்போதும் தூங்கிக்கொண்டு இருக்கிறார். எப்போதாவது எழும் போது நான் தான் தலைவர் என சொல்கிறார். பீக்பாஸ் வீடே தனக்கு தான் சொந்தம் என்கின்றார் என்னும் குற்றச்சாட்டு வைக்கப்படுகின்றது.

ஆனால் பிக்பாஸ் ஜோடிக்கு ப.செ பிடித்தவராக இருப்பதால், மக்கள் ஓட்டு போட்டது ஒளிக்குத்தான் என சொல்லி அவரை வெளியேற்றுகிறார். சுசிகலா அணியின் பிரஷர் காரணமாக ப.செ. தலைவர் பதவியை ராஜினாமா செய்கின்றார்.

இதற்கிடையில் ப.செ.க்கு ஆதரவாக ம.பா., என்.வி.நாதன், கே.பி.ராஜன் ஆகியோர் அணி திரள்கிறார்கள். மீதமுள்ள அனைவரும் சுசிகலா அணியில் இருக்கின்றார்கள். அடுத்த தலைவராக ஒருவரை தேர்ந்தெடுக்கும் நாள் நெருங்குவதால், அவர்கள் ஒத்துமையாக இருக்க, கதிரவன் எல்லோரையும் ஸ்மோக்கிங் ரூமில் வைத்து பூட்டி, குச்சிமிட்டாய், குருவி ரொட்டி எல்லாம் கொடுத்து மயக்குகின்றார். இடையிடையே சுசிகலா லிவிங் ரூமில் இருந்து ஸ்மோகிங் ரூமுக்கு சென்று சென்று பார்வையிடுகின்றார்.

இதைக்கண்டு கொதித்த ப.செ கேமிரா முன்பாக நின்று அழுகின்றார். “பிக்பாஸ் பிக்பாஸ்... சுசிகலா எல்லோரையும் அடைத்து வைத்து இருக்கின்றார். தவிர முட்டை எல்லாம் திருடுகிறார். என்னை தலைவர் பதவியில் இருந்து தூக்க நினைக்கின்றார்” என அழுகின்றார்.

அதற்கு பிக்பாஸ் ஜோடி, அவரை கன்பக்‌ஷன் ரூமுக்கு வர சொல்கிறார்.

கன்பக்‌ஷன் ரூமில் பிக்பாஸ் பேசுகிறார்.

பன்னீர், நீங்கள் ராஜினாமா செய்தது செய்தது தான். எனக்கு பிடித்தவர் நீங்கள். அதனால் எவிக்‌ஷனில் இருந்து தப்ப வைத்தேன். மீண்டும் குடும்ப தலைவராக தேர்வாக இயலாது. அதே நேரம் எனக்கு சுசிகலாவைப் பிடிக்காது. அதனால் ஏற்கனவே சுசிகலா மீது, கோவில் உண்டியல் உடைத்ததாக ஒரு புகார் இருக்கிறது. அதில் தீர்ப்பு சொல்ல வைத்து அவரை சிறைக்கு அனுப்புகிறேன். இதை யாரிடமும் சொல்லக் கூடாது.

கிட்டதட்ட சுசிகலா அந்த வீட்டின் தலைவராக தேர்வாகும் நேரம், போலீஸ் கைது செய்ய வர இருக்கும் தகவல் வருகின்றது. போலீஸ் வருகின்றது சுசிகலா கைது ஆகின்றார். போகும் போது தரையில் அடித்து சத்தியம் செய்கிறார். அப்போது பிக் பாஸ் வீட்டின் தரை நொறுங்கிப் போனது. ப.செ. வீட்டில் உள்ள அனைவருக்கும் பால் பாயசம் செய்து கொடுக்கிறார். டான்ஸ் ஆடுகின்றார். சுசிகலா, அவரது ஆதரவாளர்கள் மீது பிக்பாஸ் கோபமாக இருப்பதை தெரிந்து கொண்ட கதிரவன், இருப்பவர்களிலேயே அமைதியான ப.சாமியை குடும்ப தலைவராக்குகிறார்.

தலைவர் பதவிக்கு அடித்துக் கொள்வதை பார்க்கும் சாதாரண தொண்டன், குழம்பிப் போகிறான். மற்றவர்கள் மீது கோபத்தைக் காட்ட முடியாத, சிலர் அவனை அடிக்க பாய்கின்றனர். யாரும் அதை தட்டிக்கேட்க வரவில்லை. தனிமையில் தவிக்கும் அவனுக்கு ஒரு கட்டத்தில் கடுப்பாகி வீட்டை விட்டு வெளியேற பிக்பாஸிடம் அனுமதி கேட்கிறான். அவரும் கண்டு கொள்ளவில்லை. பொறுத்தது போதுமென பொங்கி எழுந்து, வீட்டு சுவரை ஏறி குதித்து தப்பி ஓடினான்.

ப.சாமி குடும்ப தலைவர் ஆகின்றார். அதற்கு பின்னர் மெல்ல மெல்ல ப.சாமி அந்த குடும்ப தலைவர் பதவி பிடித்துப்போகின்றது. அடிக்கடி கன்பக்‌ஷன் ரூமுக்கு சென்று பிக்பாஸ் நட்பை பலப்படுத்திக்கொள்கிறார். கதிரவன், குடும்ப தலைவராக ஆக எடுக்கும் முயற்சியை பிக்பாஸிடம் போட்டுக்கொடுக்கிறார். அவரையும் சிறைக்கு அனுப்புமாறு பிக்பாஸிடம் சொல்கிறார்.

பிக்பாஸும் கதிரவனை சிறைக்கு அனுப்புகிறார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் இரண்டு அணிகளால் பார்வையாளர்களுக்கு சுவராஸ்யம் குறைகிறது. உடன் பிக்பாஸ் வைல்ட் காட்டு முறைப்படி கதிரவனை உள்ளே நுழைகின்றார். அதற்குள் பிக்பாஸின் தீவிர விசுவாசியாகிவிடுகிறார், ப.சாமி. திரும்பி வந்த கதிரவனிடம் செல்ல அவருடன் இருந்தவர்கள் பயப்படுகிறார்கள். ப.சாமியுடன் வெற்றிகுமார், சி.கோட்டை, செல்லாத ராஜு, விமணி ஆகியோர் ஒட்டிக்கொள்கின்றனர்.

ஆக மொத்தம் அந்த வீட்டில் இப்போது மொத்தம் 3 கோஷ்டிகள். எடப்பாடி தலைமையில் பிக்பாஸ் ஆதரவு பெற்ற ஒரு ப.சாமி குரூப், பசெ தலைமையில் அதே பிக்பாஸ் ஆதரவு பெற்ற அடுத்த குரூப், பிக்பாஸ் ஆதரவு கிடைக்காத கதிரவன் தலைமையில் ஒரு குரூப்.

அடுத்து பிக்பாஸ் குரல்: ப.சாமி, கொஞ்சம் ஸ்டோர் ரூமுக்கு வாங்க. அங்கே எல்லோருக்கும் பட்டம் கொடுத்து ஷீல்டு வைத்திருக்கின்றோம். அதை எடுத்து எல்லோருக்கும் கொடுக்கவும். உங்களுக்கும் ஒரு பட்டம் உண்டு.

ப.சாமி ஸ்டோர் ரூமுக்கு சென்று பட்டங்களை எடுத்து வந்து கொடுக்கின்றார்.

அம்மா அடிமை, குனிஞ்சவன், எடுபிடி, தலையாட்டி பொம்மை, கூன் விழுந்தவன், டயர் நக்கி இப்படியாக பல பட்டங்களை எடுத்து வினியோகம் செய்கின்றார்.

ஒரு குரல் மட்டும் “நான் இந்த பட்டத்தை வாங்க மாட்டேன்” என உரத்து ஒலித்தது. குரல் வந்த திசையை எல்லோரும் பார்க்கின்றனர். அது ப.செ குரல்...

“அது என்ன பிக்பாஸ் எனக்கு “அம்மா அடிமை” என மொக்கை பட்டம்”

பிக்பாஸ்:- ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லையா?

ப.செ : ஆமாம் வெறுமனே அம்மா அடிமை என்று இல்லாமல் அதை “அம்மாவின் மகா அடிமை” என மாத்தி தந்தால் வாங்கிப்பேன் என கறாராக சொல்லிவிட்டு விருதை வாங்காமல் அமர்கின்றார். ப.சாமி அந்த விருதையும் பெருமையுடன் வைத்துக்கொள்கின்றார்.

இப்போது பிக்பாஸ் குரல்:

பிக்பாஸ் :- உங்களுக்கு இன்றைய டாஸ்க்.... நீங்கள் மூன்று அணிகளாக பிரிந்து இந்த விளையாட்டை விளையாட வேண்டும்.

கதிரவன்:- பாஸ்.. ஏற்கனவே அப்படித்தான் இருக்கு இங்க!

பிக்பாஸ் :- இப்போது ஒரு சறுக்கு மரம் வழியாக துணிகள் வரும். இந்த டாஸ்கின் பெயர் பிக்பாஸ் சலவைக்கடை. அழுக்கான துணிகள் காசியில் இருந்து உங்களுக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. அதை கரை போக துவைத்து, காயவைத்து, சலவை செய்து அனுப்ப வேண்டும். இதுவே இன்று உங்கள் டாஸ்க்....

சங்கு ஊதப்படுகின்றது...... ஊஊஊஊஊஊஊ.....

எல்லோரும் ஓடுகின்றனர்... ப.சாமி ஆர்வக்கோளாறு காரணமாக அந்த சறுக்கு மரத்தின் மீது ஏறி அந்த துணிகளை பிடிக்க முயல்கின்றார். கீழே இருக்கும் கே.பி.ராஜன், “அண்ணே அண்ணே தயவு செஞ்சு கீழே இறங்குங்க... எல்லோரும் சமமா பிரிச்சுப்போம்” என சொல்ல, வெற்றிக்குமார் “போட்டின்னு வந்துட்டா அண்ணன் தம்பில்லாம் கிடையாது. அதல்லாம் வீட்டுக்கு வெளியே வச்சிப்போம்” என சொல்லி துணிகளை பிடிக்கின்றனர்.

வந்தது எல்லாம் காவி கோமணங்கள். வந்த இடம் அப்படி.

கதிரவன் கோஷ்டி மட்டும் “நாங்கள் இதை துவைக்க மாட்டோம்” என சொல்ல பார்வையாளர்களுக்கு ஆச்சர்யம். ஆகா இவர்களாவது ரோசமுடன் இருக்கின்றார்களே என்று. ஆனால் அவர்கள் சொன்ன பதில் தான் கிளாசிக்...

”பிக்பாஸ், நாங்கள் இதுவரை புடவை துவைத்து தான் பழக்கம். இது என்னவோ புது மாதிரியான வஸ்துவாக இருக்கின்றது. கைக்குட்டை போல அல்லாமலும், கழுத்தில் கட்டும் டை மாதிரியும் இல்லாமலும் வித்யாசமாக இருக்கு. எனவே நாங்கள் கலந்து கொள்ளவில்லை. எங்களுக்கான லக்சுரி பாயிண்ட்ஸ் எல்லாம் அவர்களுக்கே கொடுத்து விடுங்கள்” என்கின்றனர். அத்தோடு ப.சாமி அணி அதில் வெற்றி பெற்று அதிக கோவணங்களை துவைத்து லக்சுரி பொருட்களாக பஞ்சகவ்யம், கோமியம், கங்காஜலம், காக்கி டவுசர், கருப்பு தொப்பி என பரிசுகளை அள்ளிச்சென்றனர்.

ஹவூஸ்மேட்ஸ் மூன்று அணிகளாக பிரிந்து, ஒருவருக்கொடுவர் வசைபாடுவதும், சண்டை போடுவதுமாக நேரம் போவதே தெரியாமல் வீட்டுக்குள் இருக்கின்றனர். அடுத்து நடந்த ஆச்சரிய அணிவகுப்பை நாளைக் காணலாம். அதுவரை விடை பெறுவது, உங்கள் நான்.

Bigg Boss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment