புதுச்சேரி மக்கள் உற்சாகமாக போகி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு பழைய பொருட்களை தீயிட்டு எரித்தனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு விதமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதியான போகியில் இருந்து பொங்கல் விழா தொடங்குகிறது. இதன் தொடர்ச்சியாக, ஜனவரி 14-ஆம் தேதி முதல் பொங்கல் கொண்டாட்டம் நடைபெறுகிறது.
பொங்கலை வரவேற்கும் விதமாக போகியில் இருந்து பொதுமக்கள் தங்கள் கொண்டாட்டங்களை தொடங்கியுள்ளனர். குறிப்பாக, பழையன கழிதலும்; புதியன புகுதலும் என்ற அடிப்படையில், புதுச்சேரி மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
அதிகாலை முதலே கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், தேவையில்லாத பொருட்களை வீட்டு வாசலில் தீயிட்டு கொளுத்தி மக்கள் போகியை கொண்டாடி வருகின்றனர். இதேபோல், போகி தினத்தன்று தங்கள் குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்திற்கு வழிபாடு நடத்தும் வழக்கத்தையும் மக்கள் கடைபிடிக்கின்றனர்.