Pongal 2020 Alanganallur Palamedu Jallikkattu Pollachi Rekla race : வருகின்ற புதன் கிழமை பொங்கல். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது தான் பொங்கலுக்கான அடையாளமாக இருந்தாலும், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நம்மோடு இருந்து பயணித்து பரிணமித்து வரும் சில கலாச்சாரங்களிலும், பண்பாடுகளிலும் மாற்றங்கள் ஏதும் இருப்பதில்லை.
அப்படிப்பட்டது தான் மாட்டுப் பொங்கல். சில ஊர்களில் மாட்டுப் பொங்கலின் போது மாடுகளை நன்றாக குளிக்க வைத்து, கொம்புகள் நன்றாக சீவப்பட்டு, வண்ணங்கள் அடித்துவிடுவது, பொங்கல் படைத்து மாடுகளுக்கு ஊட்டி விடுவதும், சில நேரங்களில் மாடுகளை சுதந்திரமாக அவிழ்த்துவிடுவதும் வழக்கமான ஒன்றாக இருக்கும். மாட்டுப் பொங்கலின் போது மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு, ரேக்ளா என்று மற்றொரு வகையில் கொண்டாட்டங்கள் நடைபெறுவதும் வழக்கமான ஒன்றாக இருக்கும்.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜல்லிக்கட்டு வெகு விமர்சையாக கொண்டாடப்படும். சங்க இலக்கியங்களிலும் மேற்கோள்காட்டப்பட்ட ஒரு வீர விளையாட்டு இன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுவது அனைவருக்கும் மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் தான் தருகிறது. ஆனால் இன்றும் ஒரு குறிப்பிட இன மக்களை இந்த போட்டிகளில் அனுமதிக்க மறுப்பது போன்ற அவலங்களும் நிகழ்ந்த வண்ணம் தான் உள்ளது. தமிழகத்தில் ஏறு தழுவல் எப்படியெல்லாம் கொண்டாடப்படுகிறது என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.
ஜல்லிக்கட்டு வகைகளும் முறைகளும்
பொதுவாக ஜல்லிக்கட்டினை ஏறுதழுவல், கொல்லேறு தழுவுதல், மஞ்சுவிரட்டு என்று அழைப்பது வழக்கம். வேலி ஜல்லிக்கட்டு, வாடிவாசல் ஜல்லிக்கட்டு மற்றும் வடம் ஜல்லிக்கட்டு என்று பலவகைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயர்குடி பெண்களை மணக்க வேண்டுமென்றால் ஒருவர் அப்பெண்ணின் வீட்டுக் காளையை அடக்க வேண்டும். காளையை அடக்கும் நபருக்கு பெண் என்றும் பழக்கம் அன்றைய நாளில் இருந்தே பழக்கத்தில் இருந்துள்ளது. சில சினிமாப்படங்களிலும் இதே விசயங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
வாடிவாசல் ஜல்லிக்கட்டு
மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் பொதுவாக வாடிவாசல் ஜல்லிக்கட்டுகளாகவே இருக்கின்றது. ஏறு தழுவும் வீரர்கள் இந்த வாடிவாசல் எனப்படும் பகுதிகளுக்கு வெளியே வந்து நிற்பார்கள். வாடிவாசலில் இருந்து காங்கேயம் , புலிகுளம் பகுதிகளில் இருந்து வளர்க்கப்படும் பெரிய கொம்பு மட்டும் திமிலுடைய காளைகள் அவிழ்த்துவிடப்படும். அதன் கொம்பில் சல்லி எனப்படும் போட்டிப்பரிசு கட்டப்பட்டிருக்கும். காளையை அடக்கி அந்த சல்லியை எடுக்கும் நபர் வெற்றி பெற்றவராக கருதப்படுவார். காளைகளின் உடலை துன்புறுத்தாமல், மது போன்றவற்றை தராமல் இந்த விளையாட்டினை மேற்கொள்ள தற்போது நடைமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுகிறது.
ரேக்ளா பந்தயம்
தென் தமிழகத்தில் ஒரு மாதிரியான கொண்டாட்டங்கள் இருந்தால் மேற்கு தமிழகத்தில் வேறு மாதிரியான கொண்டாட்டங்கள் களை கட்டும். குறிப்பாக கொங்கு மொழி பேசும் மக்கள் அதிகம் வாழும் இடங்களான கோவை, பொள்ளாச்சி போன்ற இடங்களில் ரேக்ளா எனப்படும் மாட்டு வண்டி பந்தயங்கள் நடைபெறும். இருவர் அல்லது ஒருவர் மட்டும் ஓட்டிச் செல்லும் வண்டிகளில் குறிப்பிட்ட பந்தய தூரத்தை முதலில் கடந்து வருபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
வடம் ஜல்லிக்கட்டு
ஒரு மைதானத்திற்குள் காளைகளை குறிப்பிட்ட அளவு கொண்ட கயிறுகளில் கட்டிவிடுவார்கள். அந்த சுற்றளவுக்குள் காளைகள் சுற்றித் திரியும். அந்த காளையை 7 முதல் 10 பேர் கொண்ட குழு அடக்க முற்படுதல் வடம் ஜல்லிக்கட்டு என்று அழைக்கப்படுகிறது. மானாமதுரை மற்றும் சிவகங்கையின் பல்வேறு பகுதிகளில் இது போன்ற முறைகளில் ஜல்லிக்கட்டுகள் நடத்தப்படுகிறது.
வேலி மஞ்சுவிரட்டு
இது வாடிவாசல் ஜல்லிக்கட்டு போல் எல்லை தாண்டியதும் காளையை விட்டுவிடலாம் என்று அர்த்தமாகாது. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் காளைகள் அவிழ்த்துவிடப்படும். அதனை குறிப்பிட்ட நேரத்துக்குள் அடக்க வேண்டும். இது தான் இந்த போட்டியின் விதிமுறை. இது போன்ற கொண்டாட்டங்கள் வட தமிழகத்தை காட்டிலும் தென் தமிழகத்தில் குறிப்பாக மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அதிகமாக கொண்டாடி வருகிறார்கள்.
புலிகுளம் காளைகள்
சிவகங்கை பகுதியில் அமைந்திருக்கும் புலிகுளம் காளைகள் ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்றவை. இந்த பகுதியில் வளர்க்கப்படும் காளைகள் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டுக்காகவே பயிற்சி அளிக்கப்படுகிறது. பெரிய கொம்புகள், உயரம், திமில்கள் என பிரமிக்க வைக்கும் காளைகளை ஆயர் குலத்தினர் வளர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த பொங்கலை எப்படி கொண்டாடினாலும் சரி, ஜல்லிக்கட்டு பார்த்தாலும் சரி பார்க்கவில்லை என்றாலும் சரி, நம்முடைய தட்டிற்கு வரும் உணவு கண்ணுக்கு தெரியாத ஆயிரக்கணக்கான உழவர்களின் உழைப்பில் இருந்து உருவாவதையும், அவர்களுக்கு துணையாக நிற்கும் கால்நடைகளையும் மறவாதிருங்கள். அதுவே இந்த பண்பாடும், கலாச்சாரமும் தழைத்தோங்க உதவும்.
மேலும் படிக்க : ஜல்லிக்கட்டு நடைபெறும் முக்கிய தேதிகள், சென்னை மக்களுக்கு பஸ் வசதி ஏற்பாடு