Advertisment

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளின் மகத்துவமும் சிறப்பும்!

உழவர் திருநாள், திராவிடர்கள் திருநாள், தமிழர்த் திருநாள், சாமானியர்கள் உள்ளடங்கிய அனைவரின் திருநாள் என்று ஒவ்வொருவரும் கொண்டாடும் பாங்கு இன்றும் தொடர்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளின் மகத்துவமும் சிறப்பும்!

K. S. Radhakrishnan 

Advertisment

Pongal 2020 Pongal history : தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது அனைவரின் நம்பிக்கை. இது அனுபவமொழியும்  கூட. விவசாயிகளுக்கு அறுவடை முடிந்து தங்களுடைய பிரச்சனைகள் தீர்ந்து மனதில் அமைதியையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கும் விழாக் காலம். நாம் பொங்கல் திருநாள் என்று இங்கே கொண்டாடுகிறோம்.

கவிஞர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர், சிறந்த திரைக்கதையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்த கைய்பி ஆஸ்மியின் 101வது பிறந்தநாளையொட்டி,...

வடபுலத்தில் மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அறுவடை நாள் அறிவியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும்  மக்களை நிம்மதிப்படுத்துகின்ற காலநேரமாகும். மனித நாகரிகம் துவங்கிய காலத்திலிருந்தே தை திங்களை கொண்டாட ஆரம்பித்தோம். பழைய கழித்து புதியன புகும் பொங்கலுக்காக வீடுகளைச் சுத்தப்படுத்தி வர்ணம் பூசுவது மட்டுமல்லாமல், மாடுகளுக்கும் மாடுகளின் கொம்புகளுக்கும் வர்ணம் பூசுவதுண்டு.

விதவிதமான விளையாட்டுகள், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற வீரசாகசப் போட்டிகள், ரேக்ளா ரேஸ், மாட்டு வண்டிப் பந்தயம்,  கல்லூரி காலத்தில் மாணவர்கள் அன்றைக்கு வெளியாகும் புதிய திரைப்படங்களை பார்க்கும் ஆர்வம், கிராமங்களில் 4 மணிக்கே எழுந்து குளித்து புத்தாடை உடுத்தி தோட்டங்களுக்குச் சென்று வேப்பிலைத் தண்டையும், கன்னிப் பில்லையையும் சேர்த்து பொலி கட்டுதல் என்பது ஒவ்வொரு விவசாய வீட்டுப் உறுப்பினர்களின் கடமையாகும். பண்டைய தமிழகத்தில் தைப்பொங்கலை கொண்டாடியது குறித்தான இலக்கியத்தில் அகநானூறு, பதிற்றுப்பத்து, நெடுநல்வாடை, ஐங்குறுநூறு போன்ற இலக்கியங்களில் தரவுகள் உள்ளன.

மேலும் படிக்க : பொங்கல் ஸ்பெஷல்: கரும்பு சாறு; கூட்டுக் குழம்பு – நம் முன்னோர்கள் அவ்வளவு சாதாரணமானவர்கள் அல்ல

பொங்கலுக்கு முதல்நாள் போகி. போகித் திருநாள் மழையின் அதிபதியான

வருணனையும், மார்கழி மாதத்தின் நிறைவடையும் நாளையும் கொண்டாடப்படுகிறது.

பழையன கழிக்கப்படுகிறது, புதியன ஏற்படுத்தப்படுகிறது, கேடுகள் ஒழிந்து நாளையில்

இருந்து நல்லவை நடக்கும் என்றொரு ஒரு நம்பிக்கையில் தை பிறக்கிறது என நினைக்கும்

நாள். சிலப்பதிகாரத்தில் கானல் வரிப் பாடலில் இது குறித்தான தரவுகளும் உண்டு.

அடுத்த நாள் தைத்திருநாள். கதிரவனையும், விவசாயத்தையும் வணங்கிடும் நாள்.

“பாதியே! பொருள் யாவிற்கும் முதலே!

பானுவே பொன்செய் பேரொளித்திரளே!

கருதி நின்னை வணங்கிட வந்தேன்,

ஆதவா! நினை வாழ்த்திட வந்தேன்!

நன்று வாழ்ந்திடச் செங்குவை பையை!”

என்று பாரதியும்,

“ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்

காவிரி நாடன் திகிரி போல்

பொற்கோட்டு

மேரு வலம் திரிதலான்!”

என்று சிலப்பதிகாரமும்,

“உலகம் உவப்ப

வலனேர்பு திரிதரு

பல்கதிர் ஞாயிறு

கடல் கண்டாங்கு!”

என்று நக்கீரரின் திருமுருகாற்றுப் படையிலும் பொங்கல் திருநாளை குறித்து பாடியதுண்டு.

இந்த பொங்கல் திருநாளில் புதிதாக அறுவடை செய்த நெல்லில் இருந்து கிடைத்த

அரிசியை வெல்லத்திலும், புதுப்பானையின் மீது கோலங்களும், வர்ணங்களும் இட்டு, கரும்பு,

மஞ்சள், குங்குமம் என சூழ பொங்கல் பொங்கி வருவதை உள்ளத்தில் போற்றி பொங்கலோ

பொங்கல் என்று ஆதவனை வழிபடுகிறோம்.

அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். உழவுத் தொழிலுக்கு கர்த்தாவாக இருக்கும்  மாட்டுக்கு நன்றி சொல்லும் நன்னாள். அன்றைக்கு வீரதீர விளையாட்டுகளான மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம், மாட்டு வண்டிப் பந்தயம், இளவட்டக் கல்லை தூக்குதல் போன்ற சாகச நாட்டுப்புற விளையாட்டுகள் எல்லாம் நடக்கும். இந்த தரவுகள் தமிழ் இலக்கியமான கலித்தொகையிலும் உள்ளது. முதன்முதலாக இதில் வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசுகளை வழங்குவது மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் காலத்தில் துவங்கியது.  “வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடற் காவிரி” என்று

பட்டினப்பாலை பாடியது.

“உலகு புரந்து ஊட்டும் உயர்பேர் ஒழுக்கத்துப் புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி,

வையை என்ற பொய்யாக் குலக்கொடி” என்று சிலம்பு ஒலித்தது.

“வாழை வடக்கீனும் வான்கமுகு மேற்கீனும், கரும்பும் இளநீரும் கண்திறந்து

மடைபாயும், கட்டும் கலம் காணும் கதிருழக்கு நெல்காணும் அரிதாள் அறுத்துவர மறுதாள் பயிராகும், அரிதாளின் கீழாக ஐங்கலந்தேன் கூடுகட்டும், மாடுகட்டிப் போரடித்தால் மாளாது  செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கம் அழகான தென்மதுரை” என்று பிற்காலப் புலவர்  புகழேந்தி பாடினார்.

தமிழக வளமையைப் புலவர்கள் பானார்கள், ஆண்ட அரசர்கள் காத்தனர்.

போர்முனையில் பெறும் வெற்றிக்கு ஏர்முனை தரும் வலிவு தான் இன்றையமையாத ஒன்று

என்று அவர்கள் கருதினார்கள்.  அரசு எப்படி உழவர்களை, மக்களைப் பாதுகாத்து ஆளுவேண்டும் என்று ஆலத்தூர் கிழார் என்ற தமிழ்ப் புலவர சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்ற அரசனுக்கு அறிவுரை தருவதில் குறிப்பிட்டார்.

“வருபடை தாங்கிப் பெயர்புறத்து ஆர்த்துப் பொருபடை தருஊங் கொற்றமும்

உழுபடை, ஊன்றுசால மருங்கின் ஈன்றதன் பயனே”

அதாவது, ‘நாட்டின் மேல் வரும் படைகளை புறங்காட்டி ஓடச் செய்து, ஆரவாரமான

வெற்றி என்பது, உழும் கலப்பையை வைத்து உழவர் படை தரும் விளைச்சலால் ஏற்பட்ட

பலனே ஆகும்’ என்கிறார்.

“உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து” என்று திருக்குறளில் உழவுத் தொழில் அல்லாமல் பிற தொழிலில் ஈடுபடுவோரை சேர்ந்து பாதுகாக்கும் பொறுப்பு உழவர்களுக்கு உண்டு. இவர்கள் உலகம் என்ற தேருக்கு அச்சாணி ஆவார்கள் என்ற திருவள்ளுவரும் தங்களது பாடல்களில் சிறப்பாக எடுத்து சொல்கின்றனர்.

மாடுகட்டி போரடித்த அத்தகைய உழவனின் நிலைமை இன்றைக்கு மோசமாக

உள்ளது. தன்னுடைய உரிமைக்காக போராடி கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக 48க்கும்

மேற்பட்ட விவசாயிகள் சுடப்பட்டு சாகடிக்கப்பட்டுள்ளனர் என்று பொங்கல் திருநாளில்

பேசக் கூடாது என்றாலும், உழவர் திருநாளில் இதை பதிவு செய்ய வேண்டிய அவசியமும்

கடமையும் உண்டு.  மார்கழியில் சூரியன் தெற்கே மகர ரேகையில் பிரகாசிக்கின்றான். அவனுடைய தெற்கு  நோக்கிய பயணம் (தட்சிணாயணம்) மார்கழியில் முடிவடைகிறது. தை முதல் நாளன்று  வடக்கே கடக ரேகை நோக்கிய பயணம் (உத்திராயணம்) தொடங்குகிறது. இது கதிரவனை  வழிபடும் காலம். எகிப்தியர்கள் சூரியன் தான் ஆரோக்கியத்தையும், உடல் நலத்தையும்,  புத்திசாலித்தனத்தையும் வழங்குகின்றது என்று நைல் நதிக்கரையிலும், பிரமிடுகளிலும் சூரிய வழிபாடு நடத்துகின்றனர். கிரேக்கத்தில் ஹீலியோஸ் என்ற பெயரில் ஆதவன் வழிபாடு நடக்கின்றது. மெக்சிகோ, பெரு நாடுகளில் சூரியன் வீர தேவனாக வணங்கப்படுகிறார்.  வடபுலத்தில் சங்கராந்தி என்றும்; மராட்டியத்தில் கிச்சடி அமாவாசை என்றும்; பஞ்சாப், ஹரியானாவில் லோகிரி என்றும்; அசாம், மணிப்பூரில் போகாலிப் பிகு என்றும்; காமுதேனுப் பூஜை என்றும்; கணுப் பண்டிகை என்றும் பல விதங்களில் கொண்டாடப்படுகின்றன. ஆந்திரத்தில் கொலு பொம்மைகள், பொங்கலிடுவது, கரும்பை உறவினர்களுக்கு கொடுப்பது, கர்நாடகத்திலும் இதே பழக்கவழக்கங்கள், மகாராஷ்டிரத்தில் எள்ளையும், வெல்லத்தையும் வழங்குவது உண்டு.

இயற்கையை எல்லா இடங்களிலும் வழிபடுகின்ற பண்டிகைகளாக விளங்குகின்றன.

இந்த நாளை உத்தரப்பிரதேசத்திலும் சிறப்பாக கொண்டாடுகின்றனர். இலங்கை, மலேசியா

போன்ற வெளிநாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. மத்திய முன்னாள் அமைச்சர்கள் சி. சுப்பிரமணியம், ஒ.வி.அழகேசன், தமிழ் கலைக்களஞ்சியத்தின் ஆசிரியர் பெரியசாமித் தூரன் ஆகியோர் சென்னை மாநிலக் கல்லூரியில் நாட்டு விடுதலைக்கு முன்னர் மாணவர்களாகப் படித்தபோது, கிறித்துமஸ் வாழ்த்து மடலைப் போன்று பொங்கல் விழாவுக்கு நாமும் தயாரிக்க வேண்டுமென்ற யோசனையை தூரன் சொல்ல அவரே பனங்குருத்துகளை நறுக்கி பலவண்ண மைகளால்  அழகுப்படுத்தி, பொங்கல் வாழ்த்துகளை தயாரித்து அண்ணல் காந்தி, ராஜாஜி, சேலம் வரதராஜூலு நாயுடு, திரு.வி.க., கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்ற அன்றைய

முன்னோடிகளுக்கு அனுப்பியது தான் பிற்காலத்தில் பொங்கல் வாழ்த்து அட்டைகள் என்று

பிரபலமானது.

இது கிடைத்தவுடன் திரு.வி.க. தனது நவசக்தி ஏட்டில் பாராட்டி நாம் அனைவரும் இந்த வழக்கத்தை எதிர்காலங்களில் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று  வேண்டுகோள் விடுத்தார். இந்த பழக்கம் 1928 காலக்கட்டத்தில் நடந்ததாகச் செய்தி. பொங்கல் திருநாளை உழவர் திருநாள், திராவிடர்கள் திருநாள், தமிழர்த் திருநாள், சாமானியர்கள் உள்ளடங்கிய அனைவரின் திருநாள் என்று ஒவ்வொருவரும் கொண்டாடும் பாங்கு இன்றும் தொடர்கிறது. மாதங்களில் மார்கழி என்று திருப்பாவை, திருவெம்பாவை பாட, பின் தைத் திங்கள் பிறந்து இயற்கையை, இந்த மண்ணை வணங்குகின்றோம். பாவை நோன்பு ஏழாம் நூற்றாண்டில் வளர்ச்சியடைந்து, சங்க காலத்தில் தித்தித்பாக பொங்கல் கொண்டாடி அதை ஒவ்வொரு தலைமுறைக்கும் கடமை என்ற சீதனமாக எடுத்துக் கொண்டு வருகிறோம்.

பொங்கல் வரலாற்றைப் பற்றி முதலாம் ராஜேந்திரன் காலத்தில் இருந்தும் தரவுகள்

கிடைக்கின்றன. திருவொற்றியூர் கல்வெட்டில் ’புதியீடு விழா’ என்று அறுவடை நாளை

குறிக்கின்ற தரவு உள்ளது. இன்றைக்கு உலகமயமாக்கல் வேகமாக நகர்ந்தாலும், நம்முடைய கலாச்சாரம்,  பண்பாடு என்பதை பாதுகாப்பதில் முதலில் நிற்பது தைத் திருநாள் கொண்டாட்டங்கள் தான்.  கதிரவன், உழவு, இயற்கை, வள்ளுவர் பேராசான் என தமிழகத்தின்

அடையாளங்களை ஒழுங்குபடுத்துகின்ற இந்த தை திருநாளைப் போற்றுவோம்,

வணங்குவோம். வருகின்ற காலத்தில் சுயநலமற்று நல்லதை நினைப்போம், நேர்மையான

பணிகளை ஆற்றுவோம், இயற்கையின் அருட்கொடையை வேண்டி மகிழ்ச்சியாய

வாழ்வோம்.

பொங்கல் வாழ்த்துகள்.

 கே.எஸ். ராதாகிருஷ்ணன் (திமுக செய்தித்தொடர்பாளர்)

இணையாசிரியர் - கதைசொல்லி,  பொதிகை, பொருநை, கரிசல் 

Pongal Happy Pongal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment