பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இது ஒரு அறுவடைத் திருநாள்.
நல்ல அறுவடை தந்தற்காக சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மக்கள் இதைக் கொண்டாடுகிறார்கள். பொங்கலுக்கு முன், மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, புது வர்ணங்களை பூசி, மாவிலை தோரணங்கள் கட்டி, அலங்கரிக்கிறார்கள்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை மூன்று நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
முதல் நாள் சூரிய பொங்கல். அன்று சூரிய உதயத்துக்கு முன்பே அதிகாலையில் எழுந்து தலைக்கு நீராட வேண்டும். பிறகுதான் பொங்கல் வைக்க வேண்டும். தென் மாவட்டங்களில் பராம்பரியமாக வீட்டு வாசலில் அடுப்புக் கட்டி வைத்து, பனை ஓலையில் பொங்கல் வைப்பார்கள். இதற்காக பொங்கலுக்கு ஒருவாரம் முன்னதாகவே சந்தைகளில் அடுப்புக் கட்டிகள், பனை ஓலை விற்பனை அமோகமாக நடைபெறும்.
அந்த அடுப்புக் கட்டியில் சுண்ணாம்பு அடித்து, காவியில் பட்டை தீட்டுவார்கள், அதேபோல பொங்கல் பானை வைக்கும் இடத்தில் சுற்றிலும் காவி, சுண்ணாம்பு கொண்டு பட்டை தீட்டுவார்கள்.
பொங்கல் வைப்பது எப்படி?
பொங்கல் அன்று அதிகாலையில் எழுந்து நீராடி வீட்டை சுத்தம் செய்து, முற்றத்தில் சாணம் தெளித்து கோலம் இட வேண்டும். ஆனால், பெரும்பாலான வீடுகளில் பொங்கல் முந்தைய நாள் இரவே கோலம் வரைந்து விடுவார்கள். பொங்கல் இடும் பகுதியில் அடுப்புக்கட்டியை வைத்து, சுற்றிலும் காவி, சுண்ணாம்பில் பட்டை தீட்ட வேண்டும்.
பொங்கல் அன்று முதலில் செய்ய வேண்டியது கணங்களின் அதிபதியான கணபதியை வணங்குவது. நீங்கள் சாணம் அல்லது மண்ணில் பிடி செய்து அதில் அருகம்புல், கன்னிப்பிள்ளை செடி வைத்து கூட விநாயகரை வணங்கலாம்.
பிறகு பொங்கல் இடும் இடத்தில் வாழை இலையில் பூஜைக்கு தேவையான பொருட்களை வைத்து, அதனுடன் குத்து விளக்கு, காய்கறிகள், மசாலா, கிழங்கு வகைகள், கரும்பு, ஒரு உழக்கில் புதிதாக அறுவடை செய்த நெல்மணிகளை வைக்க வேண்டும். அதனுடன் நீங்கள் பிடித்து வைத்த கணபதியையும் வைக்க வேண்டும். பிறகு விவசயாத்துக்கு தேவையான களைவெட்டி, அரிவாள் போன்றவற்றை வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். பிறகு தேங்காய் உடைத்து சூடம், விளக்கேற்றி பயபக்தியுடன் கடவுளை வழிபட வேண்டும்.
தொடர்ந்து அடுப்புக்கட்டியில் பொங்கல் பானையை கிழக்கு பக்கமாக வைத்து அதற்கு சந்தனம் குங்குமம் இட்டு, பச்சை மஞ்சள், இஞ்சி தழைகளை பானையை சுற்றிலும் கட்டிய பிறகு, அதை தொட்டு வணங்கிவிட்டு தான் பொங்கல் வைக்க வேண்டும். பனை ஓலையில் சூடம் கொண்டு தீயை முட்ட வேண்டும்.
பச்சரிசி கழுவும் தண்ணீரை பயன்படுத்தி தான் பொங்கல் வைக்க வேண்டும். பால் பொங்கியதும் குலவை விட்டு, மனம் நிறைய பொங்கலோ பொங்கல் என கூவி சூரிய பகவானை வழிபட வேண்டும். பிறகு சமைத்த பொங்கல் பானையை ஏற்கெனவே வைத்த படையலில் ஓரமாக வைத்து தேங்காய் உடைத்து வணங்க வேண்டும். முதலில் சூரிய பகவானை மனதில் நினைத்து படைத்துவிட்டு, பிறகு காகத்துக்கு படைக்க வேண்டும். பிறகு அதே அடுப்பில் சர்க்கரை பொங்கல், பொங்கல் குழம்பு என அனைத்தையும் செய்யவும்.
பொங்கல் வைத்த பானையை அன்றே கழுவக் கூடாது. அதில் கொஞ்சமாவது பொங்கலை மிச்சம் வைத்துவிட்டு அடுத்தநாள் தான் கழுவ வேண்டும். . இதனால், வீட்டில் தனம், தானியம் பெருகும். விவசாயிகள் நல்ல மகசூலை காண்பார்கள்.
பொதுவாக கிராமங்களில் சூரியன் உதயமாகும் நேரத்தை கணக்கில் கொண்டு பொங்கல் இடுவார்கள், இதனால் பால் பொங்கும் நேரமும், சூரியன் உதயமாகும் நேரமும் ஒன்றுபோல இருக்கும். இன்னும் சில வீடுகளில் சூரிய உதயத்துக்கு முன்பாகவே பொங்கல் வைத்து விடுவார்கள்.
வீடுகளில் பொங்கல் வைக்க உகந்த நேரம்
வரும் தை 1-ம் தேதி (15.01.2023) திங்கள்கிழமை மாதப் பிறப்பு ஏற்படுகிறது.
பொங்கல் காப்புக் கட்ட நல்ல நேரம் - காலை 9.00 - 10.30
பொங்கல் வைக்க உகந்த நேரம்
காலை 6.00 - 7.30
காலை 9.00 - 10.30
மதியம் 12.00 - 1.30
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.