முனைவர் கமல.செல்வராஜ், கட்டுரையாளர்
எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் ஒருவர் கன்னியாகுமரி மாவட்டம், கேரளா எல்லையோரத்தில், கடந்த 20 ஆண்டுகளாக மெட்ரிக்குலேஷன் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அப்பள்ளியில் இந்து, கிறிஸ்தவர், முஸ்லீம் என அனைத்து மதத்தையும் சார்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.
அங்கு ஓணம், கிறிஸ்துமஸ், தீபாவளி, பொங்கல் என அனைத்துப் பண்டிகைகளும் பாரம்பரிய முறைப்படி மிகவும் சிறப்பாகப் கொண்டாப்படுவது வழக்கம். அந்த வகையில் இரண்டு தினங்களுக்கு முன்பு, எனது நண்பரைச் சந்தித்தபோது அவருக்கு அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துகளைக் கூறிக்கொண்டு, அவரிடம் கேட்டேன் ‘பள்ளியில் பொங்கல் விழா எப்பொழுது கொண்டாடப் போகிறீர்கள்?’ என்று. அதற்கு அவர் அளித்தப் பதில் என்னை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒருவேளை அந்தப் பதில் உங்களுக்கும் அதிர்ச்சியாகவே இருக்கும் என நினைக்கின்றேன். இதோ அவரது பதில்:
“முன்பெல்லாம் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடும் போது அனைத்து மாணவ மணவியரும் எவ்விதப் பாகுபாடுமின்றி விழாவில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொள்வார்கள். அதோடு, பொங்கலிட்டு, அந்தப் பொங்கலை, மாணவ மாணவியருக்குக் கொடுக்கும் போது அனைத்து தரப்பு மாணவர்களும் மிகுந்த மனமகிழ்ச்சியோடு அந்தப் பொங்கலை வாங்கிச் சாப்பிட்டு மகிழ்வார்கள். ஆனால், இப்போதெல்லாம் பொங்கல் விழா நடத்தும் போது சில மாணவ மாணவியர், அந்த விழாவில் எவ்வித பங்கும் எடுக்காமல் ஒதுங்கி விடுகிறார்கள். மட்டுமின்றி பொங்கலிட்டப் பிறகு அவர்கள் அந்தப் பொங்கலையும் சூரியனுக்குப் படையல் வைத்த எந்தப் பொருளையும் சாப்பிடுவதற்கு மறுக்கின்றனர்.
அந்த மாணவ மாணவிகளிடத்தில் ஏன் நீங்கள் இப்படி நடந்து கொள்கின்றீர்கள்? என்று கேட்கும் போது அவர்கள் அளிக்கும் பதில் அதிர்ச்சியல்ல பேரதிர்ச்சியாகவே உள்ளது. இப்படி பள்ளிக்கூடங்களில் பொங்கலிட்டு, படையல் வைத்துக் கொடுக்கும் எந்த ஒரு பொருளையும் வாங்கிச் சாப்பிடக் கூடாது. அது நமக்கு ஒவ்வாது என பெற்றோர் கூறியனுப்பியதாக அந்த மாணவ மாணவியர் கூறுகின்றனர் என அந்த நண்பர் மிகுந்த மன வேதனையோடு கூறினார்.
அதோடு மட்டும் அவர் நின்று விடவில்லை, மீண்டும் அவர் இப்படித் தொடர்ந்தார். ‘மாணவ மாணவிகளின் நிலை ஒருபுறம் இப்படியிருக்க மறுபுறம் சில ஆசிரியர்களும் இதே நிலையைத்தான் பொங்கல் விழாவில் கடைபிடித்து வருகின்றனர். அவர்களும் எந்த நிகழ்விலும் பங்கெடுப்பதும் இல்லை பொங்கலுக்காக வைக்கும் எந்தப் பொருளையும் சாப்பிடுவதுமில்லை. அவர்களிடம் கேட்டால் அது அவர்களின் மதத்திற்கு விரோதமானது’ எனக் கூறுகின்றனர்.
“இப்படி ஒருசில மாணவ மாணவிகளும், ஆசிரியர்களும் நடந்து கொள்வதினால் இப்பொழுதெல்லாம் பொங்கல் விழா நடத்துவதில் அதிக அக்கறை காட்டுவதில்லை” என மிகுந்த வேதனையோடு கூறினார்.
ஒன்றும் அறியாதப் பிஞ்சு குழந்தைகளின் நெஞ்சங்களில் இப்படி நஞ்சு பாய்ச்சும் பெற்றோர்களை எப்படி திருத்துவது? எல்லாம் தெரிந்தும் அறிவிலிகளாகச் செயல்படும் ஆசிரியர்களுக்கு என்னத் தண்டனை வழங்குவது?
நமது நாட்டில் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகைகளும், நம் நாட்டு பண்பாடின் அடையாங்கள் என்பதை இவர்களெல்லாம் எப்பொழுது உணரப்போகின்றார்கள்? அதிலும் தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையானது, எவ்வித சாதி, சமய வேறுபாடுமின்றி தமிழர்களுக்கே உரித்தான பண்பாடு மற்றும் பாரம்பரியத்தின் வெளிப்பாடே அன்றி வேறென்றுமில்லை என்பதை ஒவ்வொரு தமிழரும் உணர்ந்தாக வேண்டும்.
முதல் நாள் கொண்டாடப்படும் போகிப் பண்டிகையானது வீட்டில் இருக்கும் தேவையற்றப் பொருட்களை அகற்றி சுத்தம் செய்து, தூய்மைப் படுத்துவதற்கானதாகும். இந்தத் தத்துவத்தை மனிதனின் மனத்தோடு ஒப்பிட்டுக் கூறுகிறார்கள். மனிதன் தனது மனதில் இருக்கும் கோபம், பொறாமை, ஆணவம் போன்ற தீயக் குணங்களை அகற்றி, நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதாகும். எவ்வளவு உயர்ந்த வாழ்வியல் தத்துவம் இதற்குள்ளே பொதிந்திருக்கிறது என்பதை எல்லோரும் உணர்ந்து கொண்டால் இதில், சாதி, மதத்திற்கு இடமில்லை என்பது புரியும்.
இரண்டாம் நாள் கொண்டாடப்படும் தைப்பொங்கல், நமது வாழ்விற்கு ஆதாரமாக இருக்கும் விவசாயப் பொருள்களான நெல், மஞ்சள், கரும்பு, தானிய வகைகள், கிழங்கு வகைகள் அனைத்தையும் வைத்து, விளைச்சலுக்கு காரணகர்தாக்களாக இருக்கும் சூரியன், வருணன் உட்பட ஐம்பூதங்களுக்கும் நன்றி செலுத்தும் வைபோகமாகும். இது முழுக்க முழுக்க மனிதன் எப்பொழுதும் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும், இயற்கைக்கு நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும் என்னும் உயரியத் தத்துவத்தைப் பிரதிபலிப்பதேயன்றி வெறொன்றுக்கும் இங்கு இடமில்லை என்பதுதான் உண்மை.
மூன்றாம் நாள் கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கல் என்பது விவசாயத்திற்கு அடிப்படையாக இருக்கும் உழவுத் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் காளை, எருமை மற்றும் வீட்டில் வளர்க்கும் பசுவிற்கும் மரியாதை செலுத்துவதாகும். மனிதன் தனது சக இனமான மனிதர்களுக்கு மரியாதை செலுத்துவதோடு மட்டுமல்லாது, தனது வாழ்க்கைக்கு துணையாக இருக்கும் விலங்குகளுக்கும் மரியாதைச் செலுத்த வேண்டும் என்ற மிக உயரிய லட்சியத்தை உள்ளடக்கியிருப்பதே இந்த மாட்டுப் பொங்கலாகும்.
நான்காம் நாள் கொண்டாடப்படும் காணும் பொங்கல், மனிதர்கள் தங்களுக்குள் உறவுகளை மேம்படுத்துவதற்காக, தங்களின் அக்கம் பக்கத்திலுள்ளவர்கள், உறவினர்கள் ஆகியோரைச் சந்தித்து, தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்வதாகும். இது உறவுகளுக்குள்ளே ஒரு நெருக்கமான பாலத்தை உருவாக்கிக் கொள்வதற்கே அன்றி வேறு எதற்காகவும் அல்ல என்பதுதான் உண்மை.
நான்கு நாள் கொண்டாடப்படும் பொங்கல் விழாவிற்குள் சாதி, மத, இன, குல வேற்றுமைகள் இன்றி அனைவருக்கும் பொதுவான இவ்வளவு பெரியத் தத்துவத்தை அடக்கியிருக்கும் போது, பெற்றோர்களும் ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் இந்த உயரிய நோக்கங்களை எடுத்துக்கூறி, அவர்களுக்குப் புரிய வைத்து, அவர்களின் வாழ்க்கையிலும் இவற்றையெல்லாம் பரம்பரை பரம்பரையாக கடைபிடிக்க வலியுறுத்த வேண்டுமே தவிர, அவர்களுக்கு தவறுதலானப் புரிதலை உருவாக்கி இவற்றிலிருந்தெல்லாம் வேறுபடுத்தி வைப்பது, நம் நாட்டின் பண்பாட்டிற்கும் பாரம்பரியத்திற்கும் வேட்டு வைப்பது மட்டுமல்ல, வருங்கால இளம் சந்ததியினரின் வாழ்க்கைக்கு வைக்கும் பெரிய சவால் ஆகும்.
எனவே, அரசாங்கம் வரும்காலங்களில் மக்களின் வாழ்வியலையும், நாட்டின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பரதிபலிக்கும் அனைத்து பண்டிகைகளையும் அனைத்து கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி தொழில் நிலையங்களிலும் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும். மட்டுமின்றி கல்வி நிறுவனங்களில் இது போன்ற பண்டிகை கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருக்கும் ஆசிரியர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்ற சம்பவங்கள் எனது நண்பரின் பள்ளியில் நடப்பது மட்டுமல்ல பெரும்பாலான அரசு, தனியார் பள்ளிகளில் சிறிது சிறிதாக அரங்கேறிக் கொண்டே வருகின்றன. எனேவே அரசாங்கமும் கல்வித்துறையும் கண்ணும் கருத்துமாக இருந்து இந்த விஷயத்தை கண்காணிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நம் முதாதையர்கள் உருவாக்கி வைத்துள்ள தமிழர்களின் உயரிய கோட்பாடுகளைக் கட்டிக்காக்க முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.