தமிழர் பாரம்பரிய பண்டிகை பொங்கல் பண்டிகை. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி, தமிழ் பண்பாடு கலாச்சாரம் உள்ளிட்டவற்றை போற்றும் நபர்களால், வெகு விமரிசையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
இந்த நிலையில், கோவையில் பல்வேறு விதமான வகையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்ற நிலையில், பொதுமக்களை ஈர்க்கும் வகையில் மத பாகுபாடின்றி மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் சமத்துவ பொங்கல் கொண்டாடினர். தமிழ் கல்லூரி வளாகத்தில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக 15 வது ஆண்டாக இந்த விழா நடத்தப்பட்டது.
கரும்பு, வாழை நட்டு, பொங்கல் வைத்து, தமிழின பாரம்பரிய முறைப்படி இந்த பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பொதுமக்கள் பொங்கல் பானையில் அரிசி வெல்லம் பால் இட்டு பொங்கல் பொங்கினர். பொங்கல் விழாவில் கொலவையிட்டு, ஆடல் பாடல்களுக்கு நடனமாடி, கண் கட்டி பானை உடைத்து பொங்கல் கொண்டாடினர்.
இந்த நிலையில் பொது அமைதி, உலக சமாதானம் மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி வெண் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. மதங்கள் வேறாயினும் பிறந்த மண்ணும் மரபும் தமிழ் என தெரிவித்த மத நல்லிணக்கத்தார் இது போன்ற சாதி மத பேதமில்லாமல் நாட்டிலுள்ள பொதுமக்கள் மத நல்லிணக்க விழாக்களை கொண்டாட அழைத்தனர்.
வேற்றுமையில் ஒற்றுமை, பன்முக கலாச்சாரம் கொண்ட இந்த நாட்டில், மத நல்லிணக்கமே மனிதம் மலர உதவும் என தெரிவித்தார்கள். வந்தாரை வாழ வைக்கும் இந்த தமிழ் மண்ணில், பாரம்பரிய மிக்க பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதாக சமய பிரதிநிதிகள் உணர்வு பூர்வமாக சிலாகித்தனர். இந்த நிகழ்ச்சியில் மலைவாழ் பழங்குடி கிராம மக்கள், ஏழை எளியோர், கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு நிதி உதவி தந்தனர். பழங்குடியை சேர்ந்த 300 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு நலத்திட்ட உதவிகள் தந்தனர்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“