ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
Advertisment
தமிழ்நாட்டின் பாரம்பரிய பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் வரும் 15 ஆம் தேதி வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது.
இதை முன்னிட்டு கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இன்று (ஜனவரி 12) பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதற்காகக் கல்லூரி வளாகமே விழாக்கோலம் பூண்டிருந்தது. வாழை மரங்கள், தென்னங்கீற்று, பனைவோலை, பல வண்ணப்பூக்கள் அலங்காரத்துடன் காணப்பட்டது. கொண்டாட்ட மனதுடன் மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடையணிந்து கல்லூரிக்கு வந்தனர்.
Advertisment
Advertisements
பின்னர் பொங்கல் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் மாணவிகளுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதற்காக நடத்தப்பட்ட போட்டியில், மாணவர்களும், மாணவிகளும் சிறு, சிறு குழுக்களாக இணைந்து பொங்கல் வைத்து அசத்தினர்.
கிராம வாழ்வியல் சூழலை இன்றைய இளம் தலைமுறையினருக்குக் கொண்டுச் செல்லும் வகையில் கிராமரிய ஆடை அலங்காரப் போட்டி நடத்தப்பட்டது. அதில் கிராம மக்களைப் போலவே தோற்றமளித்த மாணவர்கள் 'அழகிய தமிழ் மகன்'களாகவும் மாணவிகள் 'அழகிய தமிழ் மகள்'களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
உரலில் அரிசி குத்துதல், அம்மியில் அரைத்தல், பூக்கட்டுதல், மருதாணி வைத்தல், கோலம் போடுதல், கைவினைப் பொருட்கள் செய்தல், மெதுவாக மிதிவண்டி ஓட்டும் பந்தயம், சக்கர வண்டி ஓட்டுதல், நொண்டியடித்தல், பல்லாங்குழி, ஐந்துகல் ஆட்டம், கோலி குண்டு என பல விளையாட்டுள் நடத்தப்பட்டது.
மேலும் கிராமப்புற பெண்களைப் போல் ஆடை அலங்காரம் செய்து கொண்டு, உரலில் நெல் குத்துதல், முறத்தில் புடைத்தல் என மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
அம்மியில் மஞ்சள் அரைத்தும், பூக்கட்டியும், கைவினைப் பொருட்கள் செய்தும் மாணவர்கள் அசத்தினர். அதைத் தொடர்ந்து நாட்டுப்புற நடனம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிறைவாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் பரிசுகள் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“