சரவணக்குமார்
தீபாவளி திருநாளைவிட பொங்கல் பண்டிகைக்குத்தான் தமிழ்நாட்டில் மவுசும் மதிப்பும் அதிகம். அந்த நான்கு நாட்களும் மாநகரங்களில் இருந்து பட்டிதொட்டி வரை ஊரே அல்லோல கல்லோலப்படும். கரும்பும் வாயுமாக ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் தொடங்கி போட்டி பந்தயம், உறவினர்கள் கூடுதல் என ஒவ்வொரு நாளும் உற்சாகம் களைகட்டும்.
பொங்கல் விழாவிற்கு தமிழர் திருநாள் என்கிற செல்லப்பெயரும் உண்டு. உண்மையை சொல்லப்போனால் உழவுத்தொழிலுக்கு மரியாதை செலுத்தும் உழவர் திருநாள் இது. என்றைக்கு நாம் பயிர் தொழில் ஆரம்பித்தோமோ அன்றைக்கே இவ்விழாவும் வெவ்வேறு வடிவங்களில் ஆரம்பமாகிவிட்டது. அதாவது கி.மு.விலிருந்தே பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சோழர்கள் காலத்தில் இவ்விழா ‘புதியீடு’ என்கிற பெயரால் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆடியில் விதை விதைத்து, அதை ஆறு மாதம் கழித்து அறுவடை செய்யும் உழவர்கள், தை முதல் தேதியில் உழவுக்கு உதவியாய் இருந்த இயற்கைக்கு நன்றி சொல்கிறார்கள். இதை ஒட்டி உருவானதே, ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்கிற பழமொழி.
வானியல் சாஸ்திரப்படி சூரியனின் சஞ்சாரத்தை அடிப்படையாக வைத்தே ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடவுள் இல்லை என்பவர்கள் கூட வணங்கும் ஒரே தெய்வம் சூரியன். இவர் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறும் நாளில் தான் தை மாதம் பிறக்கிறது. இதிலிருந்து உத்திராயன புண்ணிய காலம் ஆரம்பமாகிறது. உத்திராயனம் என்பதற்கு வடக்கு நோக்கி நகர்தல் என்று பொருள். கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் மறைந்தாலும், இன்று முதல் அவருடைய சஞ்சாரம் சற்றே வடக்கு நோக்கி சாய்ந்திருக்கும் என்கிறது வானியல். இதிலிருந்து ஆறுமாத காலம் தேவலோக வாசிகளுக்கு பகல் பொழுது என்பது இந்துக்களின் நம்பிக்கை.
சூரியனை வழிபடும் சமயத்திற்கு ‘சவுரம்’ என்பது பெயர். இன்றைக்கு இச்சமயத்தில் இருந்தவர்களெல்லாம் சைவத்தோடும் வைணவத்தோடும் ஐக்கியமாகிவிட்ட நிலையில், அனைத்து சமயத்தவராலும் சூரியன் வழிபடப்படுகிறார்.
தை முதல் தேதியில் தமிழர் திருநாள் ஆரம்பித்தாலும், இதற்கான பிள்ளையார் சுழியை மார்கழி மாத இறுதியிலேயே போட்டுவிடுகிறோம். இதுதான் ‘போகி’யாக கொண்டாடப்படுகிறது. பழையனவற்றை போக்கியதால் போக்கி என்றழைக்கப்பட்டு பின்னாட்களில் போகி என உருமாறியது. இந்நன்னாளில், மனதிற்குள் இருக்கும் குப்பைகளை அகற்றி மனதை சுத்தப்படுத்த வேண்டும் என்பதே இவ்விழாவின் தாத்பர்யம். வடமாநிலங்களில் போகியை இந்திரனுக்கு உரிய விழாவாக கொண்டாடுகிறார்கள். தேவர்களின் தலைவனான இந்திரனின் மற்றொரு பெயர் போகி என்கிறது நமது புராணங்கள். இத்தினத்தில் தான் புத்தர் இறந்தார் எனவும் நம்பப்படுகிறது. போகி அன்று வீட்டின் கூரையில் ‘பூலாப்பூ’ என்கிற ஒருவகை பூவை செருகி வைக்கும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.
தமிழர் திருநாளாகிய பொங்கலை மற்ற மாநிலத்தவர்கள் மகர சங்கராந்தியாக கொண்டாடுகிறார்கள். அதே சமயம் அறுவடை திருநாள் எனவும் இவ்விழா அழைக்கப்படுகிறது. குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இப்பண்டிகை உத்தராயன் என்கிற பெயரிலும், பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் லோரி என்றும் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவிற்கு அப்பாலும் பொங்கல் பண்டிகை களைகட்டுகிறது. இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கை, நேபாளம், மியான்மர், லாவோஸ் போன்ற நாடுகளிலும் வேறு பெயர்களில் இப்பண்டிகை அழைக்கப்படுகிறது.
நேபாளத்தில் மாகி, மாகே சங்கராந்தி, மாகே சகாராதி என்கிற பெயர்களில் பொங்கல் போற்றப்படுகிறது. தாய்லாந்தில் சொங்க்ரான் எனவும், லாவோஸ் மக்களால் பி மா லாவ் என்றும், மியான்மரில் திங்க்யான் என்கிற பெயரிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளை தமிழ் புத்தாண்டாக பாவிக்கிறார்கள் இலங்கை இன மக்கள்.
உழவு தொழிலுக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி சொல்லும் நன்நாளே மாட்டுப்பொங்கல். இத்தினத்தன்று முறைமாப்பிள்ளை மீது மஞ்சள் நீர் தெளிப்பது தமிழக கிராமங்களில் இன்றும் வழக்கத்தில் உள்ளது. தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு என்னும் மாடுபிடி விளையாட்டு இந்நாளில் நடைபெறும். கொல்லேறு தழுவுதல், மஞ்சு விரட்டு என்கிற பெயர்களும் இவ்வீரவிளையாட்டிற்கு உண்டு. முன்பு, இந்திய நாணயமாகிய சல்லிக் காசுகளை மாடுகளின் கொம்பில் கட்டிவைத்திருப்பார்கள். மாட்டை அடக்குபவர்களுக்கே அந்த காசு பரிசளிக்கப்படும். இந்த சல்லிக்காசே பின்பு ஜல்லிக்கட்டாக மாறி அழைக்கப்பட்டது. வேலி ஜல்லிக்கட்டு, வாடிவாசல் ஜல்லிக்கட்டு, வடம் ஜல்லிக்கட்டு என இதற்கு பல பெயர்கள் உண்டு.
உலகப் பொதுமறை நூலாகிய திருக்குறளை தமிழுக்கு தந்ததால் திருவள்ளுவரை சிறப்பிக்கும் வகையில் இன்றைய தினம் திருவள்ளுவர் தினமாகவும் அழைக்கின்றோம். பெண்களின் மாங்கல்ய பலத்திற்காகவும், உடன்பிறந்தோரின் நலனுக்காகவும் கணுப்பண்டிகை என்னும் விசேஷ நிகழ்வு மாட்டுப்பொங்கல் அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது.
தமிழர் திருநாளின் இறுதியில் வருவது காணும் பொங்கல். இன்றைக்கு உறவுகளும் நட்புகளும் சங்கமித்து மகிழ்ந்து பொங்கல் பண்டிகைக்கு விடைகொடுக்கிறார்கள். இக்காணும் பொங்கலை கன்னி பொங்கல், கன்று பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. திருமணமாகாத பெண்களுக்காக கன்னி பொங்கலும் ஆண்களுக்காக கன்று பொங்கலும் வைத்து கூடிய விரைவில் மேளச்சத்தம் கேட்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறார்கள்.
இத்தனை சிறப்புக்கள் கொண்ட தமிழர்களின் கலாச்சார விழாவை நாம் இனிதே கொண்டாடி மகிழ்வோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.