Farmers Pension Scheme Tamil Nadu: இந்தியாவின் மின் ஆளுகை சேவை, (சி.எஸ்.இ) நாடு முழுவதும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பொது சேவை மையங்களை நிர்வகிக்கிறது , இந்த பொது சேவை மையங்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் 2 கோடி சிறு, குறு விவசாயிகளை பிரதான் மந்திரி கிசான் மான்-தன் யோஜனாவின் கீழ் சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளன.
2019 -20 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் பிரதான் மந்திரி கிசான் மான் தன் யோஜனா திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி, 60 வயதான தகுதியுள்ள சிறு குறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயன்பெறலாம் என்றால், 2 ஹெக்டருக்குள் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், அதாவது 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் அனைவரும் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
இந்த பிரதான் மந்திரி கிசான் மான் தன் யோஜனா திட்டம் 18 முதல் 40 வயது வரையிலான விவசாயிகளுக்கு தன்னார்வத்துடன் பங்கேற்பு அடிப்படையிலான ஓய்வூதிய திட்டத்தை வழங்குகிறது. ஓய்வூதிய நிதியில் நுழைந்த வயதைப் பொறுத்து விவசாயிகள் 60 வயதை எட்டும் வரை மாதந்தோறும் ரூ.55 முதல் ரூ.200 வரை பங்களிப்பு செய்ய வேண்டும். அதே அளவு தொகையை மத்திய அரசு ஓய்வூதிய நிதியில் சமமாக வழங்கும்.
“விவசாயியின் மனைவி தனியாக பங்கேற்பு நிதி அளித்தால் அவரும் தனியாக மாதம் ரூ.3000 ஓய்வூதியமாக பெற தகுதியுடையவர். ஒருவேளை விவசாயி ஓய்வுபெறும் தேதிக்கு முன்பு இறந்துவிட்டால், இந்த திட்டத்தை விவசாயியின் மனைவி தொடரலாம். ஒருவேளை விவசாயியின் மனைவி இந்த திட்டத்தை தொடர விரும்பாவிட்டால், விவசாயியின் மொத்த பங்களிப்பு நிதியும் வட்டியுடன் அவரது மனைவிக்கு வழங்கப்படும்” என்று பொது சேவை மையங்களின் தலைமை நிர்வாக அலுவலர் தினேஷ் தியாகி தெரிவித்துள்ளார்.
இந்த பிரதான் மந்திரி கிசான் மான் தன் யோஜனா திட்டத்தை கடந்த வெள்ளிக்கிழமை மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் டெல்லியில் தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் மாதத்திற்கு ரூ.3000 ஓய்வூதியமாக பெறலாம்.
இந்த திட்டத்தின் பயனைப் பெற விவசாயிகளின் பெயரை பதிவு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து, மத்திய பொது சேவை மையங்களின் தலைமை நிர்வாக அலுவலர் தினேஷ் தியாகி கூறுகையில், “இந்தியா முழுவதும் கிராமங்களில் பொது சேவை மையங்களை நடத்திவரும் 2 லட்சம் தொழில் முனைவோர்களிடம் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்துக்குள் இந்த திட்டத்தின் மூலம் குறைந்த பட்சம் 100 சிறு குறு விவசாயிகளை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளேன்.
நாட்டிலுள்ள அனைத்து பொது சேவை மையங்களும் சுதந்திர தினத்தன்று திறந்திருக்கும். சுதந்திர தினத்தில் குறைந்த பட்சம் 2 கோடி விவசாயிகளை பதிவு செய்ய வேண்டும் என்ற இலக்கு பூர்த்தி செய்யப்படும் என்று கூறினார்.
மத்திய வேளாண்மைத் துறை அமைச்சகம் விவசாயிகள் நலனுக்காக பொது சேவை மையங்களை பயன்படுத்துகிறது. அது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் ஒரு சிறப்பு நோக்கத்திற்காக சந்தாதாரர்களை பதிவு செய்வதற்கு ஒரு வாகனமாக செயல்படுகிறது.
இதில் எப்படி பதிவு செய்வது என்று விவசாயிகள் இடையே கேள்வி எழலாம். இதில் பதிவு செய்யும் முறை மிகவும் எளிது என்று தினேஷ் தியாகி கூறுகிறார். இந்த திட்டத்தில் சேர விரும்பும் எந்தவொரு விவசாயியும் தனது ஆதார் அட்டை மற்றும் வங்கி பாஸ்புக் அல்லது கணக்கு விவரங்களுடன் அருகிலுள்ள பொது சேவை மையங்களுக்கு செல்ல வேண்டும்.
பொது சேவை மையங்களை நிர்வகிக்கும் கிராம அளவிலான தொழில்முனைவோர்கள் அங்கே விவசாயிகளுடன் பேசி விவரங்களைக் கேட்டு ஆன்லைனில் பதிவு செய்து முடிப்பார்கள். இந்த அதிகாரப்பூர்வ பதிவுசெய்யும் முறை முடிந்ததும், பதிவு செய்யப்பட்டது குறித்து விவசாயிக்கு அறிவிக்கப்படும். இதையடுத்து, விவசாயிக்கு பிரதான் மந்திரி கிசான் மான் தன் யோஜனா ஓய்வூதிய அட்டையுடன் ஒரு ஓய்வூதிய கணக்கு எண் உருவாக்கப்படும். அவ்வளவுதான் நீங்கள் விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.