சென்னை கீழ்கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் அருண் பிரகாஷ். 23 வயதான இவர், எழும்பூர் கவின் அரசு கலைக் கல்லூரியில், 3ம் ஆண்டு பயின்று வருகிறார்.

இவருக்குச் சொந்த ஊர் மதுரை தெப்பக்குளம். பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை மதுரையிலேயே பயின்றார். மதுரை கல்லூரியில், அனிமேஷன் படிப்பைப் பயின்ற இவர் பின்பு சென்னைக்குக் குடிபெயர்ந்தார். சிறு வயது முதல், வரை கலையில் ஆர்வம் மிகுந்த இவருக்குக் கலைக்கல்லூரியில் சேரும் யோசனையை இவரின் ஆசிரியர் அளித்துள்ளார். அதன் பேரில் சென்னை கலைக் கல்லூரியில் சேர்ந்து, பெயிண்டிங் துறையில் பயின்று வருகிறார்.
வரை கலையில் இவரின் அளவுகடந்த ஆர்வம்:

முன்னதாக கூறியது போலவே, சிறு வயதில் இருந்து வரைவதில் மட்டுமே அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். பள்ளிப் பாட புத்தகங்களை வைத்துப் படித்ததை விட நோட்டுகளும் பென்சில்களையும் வைத்து வரைந்து கொண்டிருந்த நேரம் தான் அதிகம். அதே போல் சிறிய வயது முதலே அவரது நண்பர்களும் இவரின் ஆர்வத்தைக் கண்டு வியந்துள்ளனர். இருப்பினும் பெற்றோர்களிடம் திட்டு வாங்குவதில் இவருக்கு நிகர் இவரே. அனைத்து பெற்றோர்களை போலவும், இவரின் பெற்றோரும் படிப்பில் மட்டும் அதிகம் ஆர்வம் காட்டுமாறு வலியுறுத்தினர். ஆனாலும் இவரின் கவனம் பாடப் புத்தகத்தை விட வரை கலையிலேயே மிகுந்திருந்தது.
பள்ளியில், தனது +2 தேர்வு நேரத்திலும் கையில் பென்சிலை வைத்துக்கொண்டு வரைந்து கொண்டிருந்தார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா. இது பற்றி கேட்டதற்கு,
“நான் +2 வகுப்பில் பையாலஜி தேர்வு செய்தேன். அது கூட பையாலஜி படித்தால் அதில் நிறைய வரைய இருக்கும். அதனால் எனக்கு ஒரு திருப்தி இருக்கும்.” என்று கூறினார்.
அருண் பிரகாஷுக்கு கிடைத்த அங்கிகாரம்:

பின் வரும் நாட்களில் அருண் பிரகாஷ் வரைவதில் மேலும் தேர்ச்சி பெற்றார். அவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் அவரிடம் தங்களின் புகைப்படங்களைக் கொடுத்து வரைந்து தருமாறு கேட்டனர். அப்போது தொடங்கியவர் தான் இன்று வரை நிறுத்தாமல் வரைந்து கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் தன்னையும் மீறி தத்ரூபமாக வரையத் தொடங்கினார். இதனைக் கண்ட அவரின் தாய் வியப்பில் இதனையே ஒரு தொழிலாக தொடங்கலாமே என்று கூறியுள்ளார்.
பின் வரும் நாட்களில் சிறிய தொகையில் வரையத் தொடங்கியவருக்கு ஆர்டர்கள் குவிந்தன. பணத்திற்கேற்ற பணியாரம் போல இவரின் கைவண்ணத்திற்கு ஏற்ப கட்டணம் செலுத்துவதிலும் வாடிக்கையாளர்கள் தயங்குவதில்லை.
“பிரகாஷ்ஸ் பென்சில் ஸ்கெட்ச் ஆர்ட்” தொடக்கம் மற்றும் வேலைப்பாடு:

கையில் மேஜிக் வைத்திருக்கும் அருண் பிரகாஷ், ஒராண்டிற்கு முன்னர் துவங்கியது தான் “பிரகாஷ்ஸ் பென்சில் ஸ்கெட்ச் ஆர்ட்”. பார்ட் டைம் தொழிலாக இவர் இதனைச் செய்து வருகிறார். ஆரம்பக் காலத்தில் மாதத்திற்கு 2 அல்லது 3 ஆர்டர்கள் மட்டுமே வந்த நிலையில், தற்போது வாரத்திற்கு 4 அல்லது 5 ஆர்டர்கள் வரும் வரை உயர்ந்துள்ளார். இதன் மூலம் மாதம் 20 முதல் 30 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார்.
இந்தத் தொழில் துவங்கிய பலர், பெயிண்ட் மற்றும் பலவகையான வரைவு வேலைகளை செஉவார்கள். ஆனால் அருண் தனித்து நிற்பதற்குக் காரணம் அவர் வரையும் பென்சில் ஸ்கெட்ச் மட்டுமே. இன்னும் சிறிது காலத்தில் பெயிண்டிங் வரைவதிலும் இவருக்கு யோசனை இருந்து வருகிறது. இருப்பினும், பென்சில் ஸ்கெட்ச் தான் இவரின் ஸ்பெஷாலிட்டி.
இவர் வரையும் படங்கள் அனைத்தும் பார்க்கும்போது, “இது என்ன செராக்ஸா?” என்று யோசிக்கும் அளவிற்கு நம்மையே வியக்க வைக்கிறார்.
அருண் பிரகாஷின் ஆற்றலை நிரூபிக்கும் சில வேலைப்பாடுகள்:
அருண் பிராஷுக்கு இருக்கும் எதிர்கால திட்டம் குறித்து அவர் கூறியது:
“பெரும்பாலும் அழிந்து வரும் கலைகளில், முதலில் உள்ளது வரைகலை தான். நடனம் மற்றும் பாட்டுக் கலையெல்லாம் எப்படியாவது பிரபலமாக மக்கள் மனதில் நிற்கும். ஆனால் இந்த வரை கலையை மக்களிடம் கொண்டு சேர்ப்பது பெரும் சவால். எனவே இதனை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், மக்கள் மனதில் இது குறித்த விழிப்புணர்வைப் பதிவு செய்யவும், எதிர்காலத்தில் சில வரை படங்களை இலவசமாகவும், சிலவற்றைக் குறைந்த விலையில் வரைந்து தரவும் முடிவெடுத்துள்ளேன்.”
பொதுமக்கள் தாங்கள் விரும்பும் புகைப்படத்தை இவர் வரைந்து கொடுக்க, கூகிள் மற்றும் முகநூலில் பக்கம் வைத்துள்ளார். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இவரை அவ்வாறே தொடர்பு கொள்கின்றனர்.