பெண்கள் பணி செய்யும் துறையை பொறுத்து, ஒவ்வொரு துறைக்கும் ஏற்ப கர்ப்பிணிகளுக்கு, பராமரிப்பு நேரம், நேரத்தில் நெகிழ்வு தன்மை, சமமாக நடத்துவது போன்றவை குறித்த சட்டங்கள் தேவை.
ருச்சியேட்டா பாட்டியா
பல நூற்றாண்டுகளாக பெண்கள், இல்லத்தரசிகளாக மட்டுமே இருந்து வந்துள்ளனர். வீட்டில் இருந்து குழந்தைகளை பராமரித்து, வீட்டு வேலைகளை மட்டுமே செய்து வந்தனர். இதை படிக்கும் அனைத்து பெண்களுக்கும் நன்றி கூறிக்கொண்டு காலம் மாறிவிட்டது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். பல நூற்றாண்டுகளாக பல இரும்பு பெண்மணிகள் மற்றும் ஆண்களின் போராட்டத்தின் காரணமாக பெண்கள் இன்று இந்த நிலையை எட்டியுள்ளனர். இன்று உலகம் முழுவதிலும் பல மில்லியன் பெண்கள் பல்வேறு வேலைகளை செய்து வருகின்றனர். அதிகாரமிக்க பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றனர். இன்னும் பல்வேறு நிலைகளை எட்டுவதற்கு வெகுதொலைவு இருந்தாலும், தற்போது சரியான பாதையில்தான் பெண்கள் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
அலுவலகங்கள் மற்றும் அமைப்புசாரா பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் பெண்கள் கர்ப்ப காலத்தில் அப்பணிகளை தொடர முடியாதா? கர்ப்பிணிகள் தொழிற்சாலைகளில் பணிசெய்கிறார்கள், வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள், பயணம் செய்கிறார்கள், பெரிய, பெரிய திட்டங்களை கையாள்கிறார்கள், வீட்டு வேலை செய்கிறார்கள். பல்வேறு வேலைகளையும் செய்துகொண்டே ஆரோக்கியமான குழந்தைகளையும் பெற்றெடுக்கிறார்கள். அதற்காக மருத்துவ உதவிகள் தேவையில்லை என்று சொல்லவில்லை, அதற்குதான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தன்னையும் பராமரித்துக்கொண்டே கர்ப்ப காலத்தில் அலுவலக பணிகளையும் பெண்களால் செய்ய முடியும். பெண்கள் கர்ப்ப காலத்தில் பணிசெய்வது குறித்து விவாதத்திற்காக கூட நான் காரணங்களை கேட்டதில்லை. நியுசிலாந்து நாட்டின் பிரதம மந்திரி ஜசிண்டா அர்டர்ன், பதவியேற்பின்போது கர்ப்பமாக இருந்தார். அலுவலக பணிகளை துவங்கிய சில மாதங்களிலேலே குழந்தையையும் பெற்றெடுத்தார். கர்ப்ப காலத்தில் பெண்கள் நாட்டையே ஆள முடியுமெனில், வேறு எந்த பணிகளையும் செய்வது குறித்து சந்தேகப்பட தேவையில்லை.
இரட்டை குழந்தைகளை எதிபார்த்து ஆவலாக காத்திருக்கும் கர்ப்பிணியான நான் உறுதியாக கூறுகிறேன், கர்ப்ப காலத்தில் பணி என்பது அவ்வளவு கடினமான ஒன்று கிடையாது. உண்மையில் நான் வழக்கத்தைவிட அதிகமாகவே உழைக்கிறேன். உங்கள் வழக்கமான பணிகளில் சில மாற்றங்கள் வரும் என்பது உண்மைதான். மாதாந்திர மருத்துவ பரிசோதனை, ஸ்கேன்கள், நன்றாக சாப்பிடுவது, உடற்பயிற்சிகள் செய்வது, பாதுகாப்பான பயணங்கள், போதிய ஓய்வு ஆகியவை அவசியம் தேவைப்படும். ஆனால், இது பணிசெய்யும் கர்ப்பிணி அல்லாதவர்களுக்குமான தேவையாகவே நான் உணருகிறேன். ஒரு பெண்ணாக நமது பணிகளை சரியாக செய்யக்கூடிய பொறுப்பு உள்ளதை நான் நன்றாக உணர்கிறேன்.
கர்ப்பம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். தொடர்ந்து பணி செய்வதோ அல்லது பணிக்கு சிறிது இடைவேளை விட்டுக்கொள்வதோ அந்ததந்த தாய்மார்கள் முடிவு செய்யவேண்டியது. என்னைப்பொறுத்தவரை என் கர்ப்ப காலத்தின் அனைத்து நிலைகளிலும், என் அலுவலகப்பணிகள் மகிழ்ச்சிகரமாகவும், முழுமையானதாகவும், அமைந்ததாகவே உணர்ந்தேன். இந்த நிலை ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும். ஆனால், உண்மையிலேயே நீங்கள் உங்கள் பணியை நேசித்தீர்கள் என்றால், குழந்தை மட்டுமல்ல, வேறு எந்த விஷயமும் உங்கள் சிறப்பான பணியை தடை செய்ய முடியாது. இருந்தாலும், பணிக்கு செல்லும் கர்ப்பிணிகளுக்கு பணிகளை இலகுவாக்க வேண்டும். ஒவ்வொரு துறைக்கும் ஏற்ப கர்ப்பிணிகளுக்கு, பராமரிப்பு நேரம், நேரத்தில் நெகிழ்வு தன்மை, சமமாக நடத்துவது போன்றவை குறித்த சட்டங்கள் தேவை. 2017ம் ஆண்டு கர்ப்பிணி பெண்களுக்கான பேறுகால சம்பள விடுப்பை 12 வாரத்தில் இருந்து 26 வாரமாக அதிகரித்து இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்டது. உலகிலேயே பேறுகால விடுப்பளிக்கும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது.
இந்த சட்டம் குறைந்தது 10 பேர்கள் வேலை செய்யக்கூடிய சிறிய நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், ஒரு சதவீத பெண்கள் மட்டுமே இந்த சலுகையை பெற முடியும். எனவே இந்த சட்டம் மறைமுகமாக வசதியானவர்களுக்கு மட்டுமே உதவுகிறது. அதனால் இன்னும் அதிக்கப்படியான பெண்கள் பயன்பெறும் வகையில் நிறைய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். மகிழ்ச்சியான பெண்கள், மகிழ்ச்சியான தாய்மார்கள், மகிழ்ச்சியான குழந்தைகளையும், மகிழ்ச்சியான சமுதாயத்தையும் உருவாக்குகிறார்கள். கர்ப்ப காலத்தை துவங்கும் ஒவ்வொரு பெண்ணும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
தமிழில் : பிரியதர்சினி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.