/indian-express-tamil/media/media_files/2025/01/08/7VP6mqvQFf5UuuvKtdTE.jpg)
சென்னையில் மாநகர பேருந்துகளில் தடையற்ற பயணத்தை எளிதாக்கும் விதமாக, ப்ரீபெய்ட் அடிப்படையிலான 'சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்ட்' திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிகள் செல்ல முடியும்.
"தமிழ்நாட்டில் பொதுப்போக்குவரத்தை அடுத்தகட்டத்திற்கு டிஜிட்டல் மயமாக்கி நவீனப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
இதன் முதல் கட்டமாக 50 ஆயிரம் பேருக்கு இந்த ஸ்மார்ட் கார்டுகளை இலவசமாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வழங்கும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடனும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் மட்டுமின்றி கோயம்பேடு, பிராட்வே, தாம்பரம் மற்றும் அம்பத்தூர் உள்ளிட்ட 20 பிரதான பேருந்து நிலையங்களில் இந்த ஸ்மார்ட் கார்டுகளை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம்.
பேருந்துகளில் பயணிக்கும் போது இந்த ஸ்மார்ட் கார்டை நடத்துநரிடம் கொடுக்கலாம் எனவும், இதற்காக நடத்துநர்களிடம் பிரத்தியேக டிக்கெட் இயந்திரங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் கார்டுகளை பேருந்து பணிமனைகள், ஆன்லைன் போர்ட்டல்கள், செயலிகள் வாயிலாக ரீசார்ஜ் செய்து கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவாக, பேருந்து நடத்துநர்கள் மூலம் இந்த கார்டுகளை ரீசார்ஜ் செய்யும் வசதியையும் அறிமுகம் செய்ய பரீசிலிப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இணைய வசதி பலவீனமாக இருக்கும் பகுதிகள், நெருக்கடியான பேருந்துகளில் இந்த சேவையை பயன்படுத்துவது சவாலாக இருக்கும் என போக்குவரத்து துறை வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். சென்னை முழுவதும் உள்ளடக்கும் விதமாக 3,929 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மாநகர பேருந்து சேவை இயக்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.