/indian-express-tamil/media/media_files/2025/08/30/daruma-doll-on-trip-2025-08-30-10-50-17.jpg)
பிரதமர் மோடிக்கு போதி தர்மர் பொம்மை பரிசளிப்பு
இந்தியா-ஜப்பான் இடையேயான ஆழமான கலாசார உறவுகளை பிரதிபலிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜப்பானிய பாரம்பரிய 'போதி தர்மர்' பொம்மை பரிசளிக்கப்பட்டது. ஆக.29 அன்று, கிடாகட்சுராகி நகரில் உள்ள ஷோரின்சான் தருமா-ஜி கோயிலுக்கு மோடி வருகை தந்தபோது, அந்த கோயிலின் தலைமை அர்ச்சகர் ரெவ். செய்ஷி ஹிரோஸ் இந்த புனிதப் பரிசை அவருக்கு வழங்கினார். இது இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜதந்திர உறவுகளுக்கு ஒரு ஆழமான ஆன்மிக முக்கியத்துவத்தைச் சேர்த்துள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இந்தியாவில் பௌத்த மதம் தோன்றியதற்கும், அது ஜப்பானில் செழித்து வளர்ந்ததற்கும் இடையே உள்ள 1,500 ஆண்டுகளுக்கும் மேலான ஆன்மிகப் பாரம்பரியத்தின் சங்கமத்தை குறிக்கிறது. உலக ஆன்மிகத்தில் பௌத்தத்தின் பிறப்பிடமாக இந்தியா தொடர்ந்து கொண்டிருக்கும் தாக்கத்தை இந்த தருணம் அங்கீகரிக்கிறது.
தர்மர் பொம்மை என்றால் என்ன?
ஜப்பானின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட கலாசாரப் பொருட்களில் ஒன்று தர்மர் பொம்மை. அதன் தனித்துவமான வட்டமான, உள்ளே குழிவான வடிவம், சிவப்பு நிறம் ஆகியவற்றால் இது எளிதில் அடையாளம் காணப்படுகிறது. வீடுகள், அலுவலகங்கள், கோயில்கள் என நாடு முழுவதும் காணப்படும் இந்த பொம்மைகள், விடாமுயற்சி, நல்ல அதிர்ஷ்டம் மற்றும் இலக்குகளை அடைவதற்கான அசைக்க முடியாத தீர்மானத்தின் அடையாளமாக மாறியுள்ளன. '7 முறை விழு, 8 முறை எழு' என்ற பிரபல ஜப்பானிய பழமொழியை இந்த பொம்மை குறிக்கிறது. இது பின்னடைவுகளிலிருந்து மீண்டெழும் சக்தியைப் பிரதிபலிக்கிறது.
தர்மர் பொம்மையும் இந்தியத் தொடர்பும்
தமிழகத்தின் காஞ்சீபுரத்தில் இருந்து ஜப்பான் சென்ற துறவியான போதி தர்மரின் மரபை அடிப்படையாக கொண்ட தருமா பாரம்பரியம் ஜப்பானில் புகழ்பெற்று விளங்குகிறது. ஜப்பானில் போதி தர்மர், தருமா டைஷி என அழைக்கப்படும் நிலையில், அவரது மாதிரியாக வடிவமைக்கப்படும் தருமா பொம்மைகள் மங்களகரமான மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை வழங்கும் புனித பொருளாக அங்கு பார்க்கப்படுகிறது.
தர்மர் பொம்மையின் வரலாறு ஜப்பானில் அல்ல, பண்டைய இந்தியாவில் குறிப்பிடத்தக்க துறவியான போதிதர்மருடன் தொடங்குகிறது. "போதிதர்மர், ஒரு இந்திய அல்லது பாரசீக துறவி, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் சென் பௌத்தத்தை பரப்புவதில் முக்கியப் பங்காற்றினார்" என்று Tierra Zen என்ற இணையதளம் கூறுகிறது.
போதிதர்மரின் இந்தியா முதல் சீனா வரையிலான பயணம் மற்றும் ஜப்பானில் அவரது ஆன்மிக செல்வாக்கு ஆகியவை வரலாற்றின் மிக முக்கியமான கலாசாரப் பரிமாற்றங்களில் ஒன்றாகும். "சென் பௌத்தத்தின் நிறுவனர் என்பதால், போதிதர்மர் அல்லது தருமா, ஜப்பானில் மிகவும் பிரபலமான நபராகவும், கலைகளின் ஒரு முக்கிய அங்கமாகவும் உள்ளார்" என்று Tierra Zen மேலும் குறிப்பிடுகிறது.
சென் பௌத்தத்தின் மரபுப்படி, போதிதர்மர் சீனாவில் உள்ள ஷாலின் கோயிலில் ஒன்பது ஆண்டுகள் சுவரை நோக்கி தியானம் செய்தார். இந்த அசைக்க முடியாத மன உறுதி மற்றும் ஆன்மிக அர்ப்பணிப்பின் காரணமாக, அவரது கால்கள் செயலற்றுப் போயின. இந்த அசாதாரண நிகழ்வு, தருமா பொம்மையின் கை, கால்கள் இல்லாத வடிவத்திற்கு உத்வேகம் அளித்தது. இந்த பொம்மையின் அடிப்பகுதி வட்டமாகவும், கனமாகவும் இருப்பதால், அது கீழே தள்ளப்பட்டாலும் மீண்டும் நேராக நிற்கும். இது பின்னடைவுகளிலிருந்து மீண்டு எழும் கொள்கையை வெளிப்படுத்துகிறது.
நவீன ஜப்பானில் கலாசார முக்கியத்துவம்
இன்று, தர்மர் பொம்மைகள் அதன் மதத் தோற்றத்தைத் தாண்டி, ஜப்பானிய பிரபலமான கலாசாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறி விட்டன. அவை பல வண்ணங்களில் கிடைக்கின்றன, ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு குறிப்பிட்ட பொருள் உண்டு.
சிவப்பு: நல்ல அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பு
வெள்ளை: அன்பு மற்றும் நல்லிணக்கம்
தங்கம்: செல்வம் மற்றும் வெற்றி
பச்சை: ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதி
அரசியல்வாதிகள், வணிகத் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் சாமானிய மக்கள் என அனைவரும் முக்கியமான தருணங்களில் தர்மர் பொம்மைகளை நாடுகின்றனர். ஜப்பானிய சமூகத்தில் விடாமுயற்சி மற்றும் நம்பிக்கையின் உலகளாவிய சின்னமாக இவை மாறிவிட்டன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.