/indian-express-tamil/media/media_files/2025/06/25/benefits-of-oil-bath-2025-06-25-16-02-55.jpg)
வாரம் ஒரு முறை நம் பாரம்பரிய முறைப்படி குளியல் போடுங்க… வாதம், பித்தம் பிரச்னைகள் தீரும்; டாக்டர் நித்யா
நவீன வாழ்க்கைமுறை வேகத்தில் நாம் மறந்துபோன பழமையான மற்றும் ஆரோக்கியமான பழக்கங்களில் ஒன்றுதான் எண்ணெய் குளியல் (ஆயில் பாத்). சித்த மருத்துவத்தின் முக்கிய அங்கமாகத் திகழும் எண்ணெய் குளியல், நம் உடல் நலனுக்கு பெரிதும் உதவுகிறது. வாதம், பித்தம், கபம் ஆகிய 3 தோஷங்களையும் சமநிலைப்படுத்தி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க எண்ணெய் குளியல் எவ்வாறு உதவுகிறது என்று சித்த மருத்துவர் டாக்டர் நித்யா கூறுகிறார்.
நம் உடல் 96 தத்துவங்களின் அடிப்படையில் இயங்குகிறது என்றும், இந்தத் தத்துவங்களில் ஏற்படும் மாறுபாடுகள்தான் நோய்களுக்கு காரணம் என்றும் சித்த மருத்துவம் கூறுகிறது. வாதம், பித்தம், கபம் 3 தோஷங்களின் சமநிலை தவறும்போது உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்த 3 தோஷங்களையும் சமநிலைப்படுத்த, சித்த மருத்துவத்தில் பல்வேறு வகையான தைலங்கள் (மருத்துவ எண்ணெய்கள்) பரிந்துரைக்கப்படுகின்றன.
வாத தோஷம்: உடல் வலி, மூட்டு வலி, வறண்ட சருமம், தசை பிடிப்பு போன்ற வாத சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு வாத நாராயண தைலம், வாத கேசரி தைலம், சிற்றாமூட்டி தைலம் போன்ற எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். இந்த தைலங்களை உடலில் பூசி, சூரிய ஒளியில் நிற்பது வாதத்தைக் குறைக்க உதவும்.
பித்த தோஷம்: உடல் சூடு, அஜீரணம், கண்ணெரிச்சல், தலைமுடி உதிர்வு, மஞ்சள் காமாலை போன்ற பித்த சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு ஜம்பீர தைலம், குமரி தைலம், தசவேராதி தைலம் போன்றவை சிறந்த பலனைத் தரும். இந்த தைலங்களைப் பயன்படுத்தி எண்ணெய் குளியல் எடுப்பதன் மூலம் பித்தம் தணியும்.
கப தோஷம்: சளி, இருமல், சைனசைடிஸ், நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு கருநொச்சி தைலம், சுக்கு தைலம், துளசி தைலம் போன்ற எண்ணெய்கள் பயனுள்ளவை. எந்தக் காலநிலையாக இருந்தாலும், கபம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த தைலங்களைப் பயன்படுத்தலாம்.
எண்ணெய் குளியலை வெறும் எண்ணெயைத் தேய்த்துக் குளிப்பது என்று எளிதாக நினைத்துவிடக் கூடாது. இதற்கு சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்கிறார் டாக்டர் நித்யா.
உணவு: எண்ணெய் குளியல் எடுக்கும் நாளில் குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அசைவ உணவுகளையும் அன்று தவிர்ப்பது நல்லது. மிதமான உணவுகளான தயிர் சாதம், மோர் சாதம், அல்லது பூண்டு, தேங்காய்பால் சேர்த்த கஞ்சி போன்றவற்றை உட்கொள்ளலாம்.
பகல் உறக்கம்: எண்ணெய் குளியல் எடுத்த நாளில் பகல் உறக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அதிக நேரம் வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். சித்தர்கள் கூற்றுப்படி, எண்ணெய் குளியல் எடுக்கும் நாளில் தாம்பத்திய உறவைத் தவிர்க்க வேண்டும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றி வாரத்திற்கு ஒரு முறையாவது எண்ணெய் குளியல் எடுப்பது அவசியம். இது உடலின் வறட்சித் தன்மையைக் குறைத்து, மூட்டு வலி, வறண்ட சருமம் போன்ற பல பிரச்னைகளைத் தடுக்கும். மேலும், உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி, நோய்கள் அண்டாமல் ஆரோக்கியமான வாழ்வை வாழ உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.