Tomato Mint Chutney Recipe : ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த புதினாவை தினமும் நம் சமையலில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. அதிலும் இட்லி, தோசையுடன் இந்த சட்னியைச் சேர்த்து சாப்பிட்டால் நிச்சயம் மறுமுறை கேட்கத் தூண்டும். மேலும், பிரெட் சாண்ட்விட்ச்களோடு இந்த சட்னியைத் தடவி அதன்மேல் காய்கறிகளை வைத்து சாப்பிடலாம். புதினாவோடு தக்காளி சேர்த்து பழைமையான செய்முறையில் செய்யப்படும் இந்த தக்காளி புதினா சட்னி செய்வதும் மிக எளிது. ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் நிச்சயம் ஏமாறமாட்டீர்கள்.
Advertisment
தேவையான பொருள்கள்
புதினா - 2 கப்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு பற்கள் - 5
பச்சை மிளகாய் - 4 (காரத்திற்கு ஏற்ப மாற்றிகொள்ளலாம்)
கறிவேப்பிலை - சிறிதளவு
பெரிய வெங்காயம் - 1
பெரிய அளவு தக்காளி - 1
உப்பு - தேவையான அளவு
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
வெல்லம் - 1/2 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1/2 கப்
செய்முறை
ஓர் வாணலியில் எண்ணெய்யை சூடாக்கிப் பூண்டு பற்கள், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
வெட்டப்பட்ட வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இதனை ஓரிரு நிமிடங்கள் வதக்கியபின் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.
தக்காளி நன்கு வதங்கியபின், புதிதாகத் துருவிய தேங்காயைச் சேர்க்கவும். மேலும், அதனோடு புளி மற்றும் ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம். உங்களிடம் வெல்லம் இல்லை என்றால், ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், வெல்லம் சட்னியின் சுவையை அதிகரிக்கும்.
இந்தக் கலவையை ஓரிரு நிமிடங்கள் வதக்கியபின் புதினா இலைகளைச் சேர்க்கவும். இரண்டு நிமிடங்களில் இந்தக் கலவையை அடுப்பிலிருந்து இறக்கி, குளிர்விக்கவும்.
குளிர்ந்தபின், மிக்சியில் வதக்கிய கலவையோடு தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளவும். அரைக்கும் போது நிறையத் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
சுவையான தக்காளி புதினா சட்னி தயார். தாளிக்கவேண்டும் என்கிற அவசியமில்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"