ஏ.சி. வெப்ப அளவை 26 செல்சியஸ் அல்லது அதற்கு அதிகமாக செட் செய்து மின் பயன்பாட்டை குறைக்க புதுச்சேரி அரசு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மின்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;
”மாநிலத்தில் கடந்த சில தினங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஏ.சி., பயன்பாடு மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
ஒரேநேரத்தில் அனைத்து மின் நுகர்வோரும் ஏ.சி., பயன்படுத்துவதால் மாநிலத்தின் மின் நுகர்வு உச்சத்தை எட்டுவதுடன், மின்சுமை அதிகரிப்பால், பல இடங்களில் மின்னழுத்த குறைபாடு ஏற்படுகிறது. மேலும், மின்பாதை இணைப்பு துண்டிக்கப்பட்டு மின்தடை ஏற்பட காரணமாகிறது.
மிகக் குறைந்த வெப்ப அளவில் (26 செல்சியசிற்கு கீழே) ஏ.சி., உபயோகிப்பதால் மின் நுகர்வோரின் கட்டணம் அதிகரிப்பதோடு, ஒட்டுமொத்த மின்தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
எனவே அதிக மின் நுகர்வை தவிர்க்க ஏ.சி., வெப்ப அளவை 26 செல்சியஸ் அல்லது அதற்கு அதிகமாக செட் செய்து மின்பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும்.
ஏ.சி.,யின் வெப்ப அளவை உயர்த்துவதன் மூலம் மின்சாரம் சேமிக்கப்படும்.
மேலும், பெரிய வணிக நிறுவனங்கள் தங்களின் ஏ.சி., பயன்பாட்டை மாலை 6:00 மணி முதல் இரவு 12:00 மணி வரை குறைக்க வேண்டும். வெப்பத்தின் தாக்கம் தனியும் வரையில் மேற்கண்டற்கு நடவடிக்கைகளை மின்துறையோடு ஒத்துழைக்க அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
செய்தியாளர்: பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“