/indian-express-tamil/media/media_files/2025/02/09/ryxmDDiVDeQ9jcMdsSy5.jpeg)
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் நடைப்பெற்று வரும் மலர் கண்காட்சியை லட்சக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர் இன்று மாலையுடன் மலர் கண்காட்சி நிறைவடையும் நிலையில், யார் முதல் பரிசை தட்டி செல்வார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
புதுச்சேரி அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் தாவரவியல் பூங்காவில் வேளாண் விழா 2025 மற்றும் 35-வது காய்கறி, கனி, மலர் கண்காட்சி நேற்று முன்தினம் துவங்கியது.
இக்கண்காட்சியில், வண்ண மலர்கள், காய்கறிகள் மற்றும் பழங்களின் வடிவமைப்புகள், கொய் மலர்கள், தொட்டி வளர்ப்பு மலர்ச் செடிகள், வீரிய காய்கறி ரகங்கள், வீரிய பழ ரகங்கள் ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி லாஸ்பேட்டையில், வேளாண் துறை தோட்டக்கலைப் பிரிவின் கீழ் இயங்கும் நாற்றங்கால் பிரிவில், பால்சம், காலண்டுலா, செலோசியா, கோலியஸ், காஸ்மோஸ், டாலியா, சாமந்தி, பிரெஞ்சு சாமந்தி, பெடுனியா, சால்வியா, போகன்வில்லா, ஸ்நாப்டிராகன், வெர்பினா, வின்கா, சின்னியா, டைதோனியா போன்ற 19 வகைகளில், 36,000 மலர் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரயில், டீ கப், சேவல், மலர்களில் இருந்து தேன் எடுக்கும் வண்டு, திராட்சைகளால் ஆன திருவள்ளுவர், காளைமாடுடன் வீரர், புஷ்பா திரைப்படத்தில் வரும் காட்சி போல் மாட்டு வண்டியில் செம்மரம் ஏற்றி செல்வது உள்ளிட்டவை பார்வையாளர்களை கவர்ந்தது.
நேற்று மாலை கண்காட்சி துவங்கியவுடன் ஏராளமான பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வந்து கண்காட்சியை பார்வையிட்டு போட்டோ மற்றும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். மேலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மலர் மற்றும் காய்கறி செடிகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
கடந்த 2 நாட்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மலர் கண்காட்சிக்கு வந்ததாக கூறப்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் வரும் நிகழ்ச்சிக்கு வாகனங்களை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவிக்கிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.