புதுச்சேரியில் நடைபெற்று வரும் சர்வதேச காற்றாடி திருவிழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்று ராட்சத காற்றாடிகளை பறக்க விட்டது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரையில் சர்வதேச காற்றாடி திருவிழா நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறவுள்ள இத்திருவிழாவில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, வியட்நாம், பிரான்ஸ், ஜெர்மனி உட்பட பல நாடுகளில் இருந்து 40க்கும் மேற்பட்ட காற்றாடி ஆர்வலர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை. அதற்கு மேற்பட்டவர்கள் ரூ. 100 செலுத்தி பங்கேற்க வேண்டும்.
இதில் ஆறு அடி முதல் 19 அடி வரையிலான டிராகன், யானை, குதிரை, சுறா மீன், பாண்டா கரடி, ஆக்டோபஸ் உட்பட பல்வேறு உருவங்களில் காற்றாடிகள் வானில் வட்டமிட்டு பறந்தன.
இது அங்கிருந்த குழந்தைகளையும், பார்வையாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.
இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், 'இது போன்ற நிகழ்ச்சி சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் நடக்கிறது. புதுச்சேரியில் இந்த ஆண்டு, 'அக்வாரியம் ஸ்கை' என்ற பெயரில், இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதில், பலுான் மூலம் உருவாக்கப்பட்ட மீன் உள்ளிட்ட, வடிவிலான, 150 பட்டங்கள் வானத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன' என்றனர். இத்திருவிழா, நாளை 25ம் தேதி, வரை ஈடன் கடற்கரையில் நடக்கிறது. நிகழ்ச்சி மதியம் 2 மணி முதல், இரவு 7 மணி வரை நடக்கிறது.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“