Puducherry: புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கட்ராம். பி.டெக்., படித்த இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதற்காக பிலிப்பின்ஸ் நாட்டிற்கு சென்றிருந்தார். அங்கேயே தங்கி பணிபுரிந்தும் வந்தார். அப்போது பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த கிலேசி பெத் சிம்பானன் ஓபா, என்ற பெண்ணுடன் வெங்கட்ராமுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில், இருவரும் காதலிப்பதை தங்களது வீட்டாரிடம் தெரிவித்துள்ளனர். இதற்கு இரு விட்டார்களும் சம்மதமும் தெரிவித்தனர். இதனையடுத்து, பத்தாண்டு காதல் வாழ்க்கை திருமண வாழ்க்கையாக முடிவு செய்யப்பட்டு புதுச்சேரியைச் சேர்ந்த வெங்கட்ராமுக்கும் பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த கிலேசி பெத் சிம்பானன் ஓபா-வுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதன்படி, இன்று புதுச்சேரி முத்தியால்பேட்டை அருள்மிகு பொன்னு மாரியம்மன் ஆலயத்தில் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதில், மணப்பெண் தமிழ் முறைப்படி கூறை சேலை கட்டி, புரோகிதர் வைத்து மந்திரங்கள் ஓத சாஸ்திரம் சம்பரதாயத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இரு வீட்டார்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பிலிப்பின்ஸ் நாட்டிலிருந்து பெண்ணின் உறவினர்கள் திருமணத்தை காணும் வகையில் இணையதளம் மூலமாக நேரடி காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“