புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் காபி வித் கலெக்டர் என்ற நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்தார்.
Advertisment
புதன்கிழமை (ஆக.30) நடந்த காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் மிரட்டுநிலை அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு இனிப்பு, கார வகைகளை சாப்பிட்டு கொண்டே ஆட்சியருடன் உரையாடினர்.
அப்போது உங்களை ஐ.ஏ.எஸ் ஆக தூண்டியது என மாணவர்கள் கேட்டனர்.
இதற்கு, ஆட்சியர் மெர்சி ரம்யா, பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்றால் கலெக்டராக ஆக வேண்டும் என்று சிறுவயதில் மனதில் ஏற்பட்ட தாக்கமே என்னை ஐஏஎஸ் அதிகாரியாக ஆக்கியது என்று வேடிக்கையாக பதில் அளித்தார்.
மாவட்ட ஆட்சியரின் இந்த புதிய முயற்சி, பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
புதுக்கோட்டையில் சமீபத்தில் புத்தகத் திருவிழா நடந்தது.
இதன் ஒரு பகுதியாக, புத்தகத் திருவிழா பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து "புதுக்கோட்டை வாசிக்கிறது" என்ற தலைப்பில் நிகழ்ச்சியை நடத்தியது.
புதுக்கோட்டை அரசு ராணியார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் ஆட்சியர் மெர்சி ரம்யா, மாணவிகளோடு மாணவியாக தரையில் அமர்ந்து தான் எடுத்து வந்திருந்த புத்தகத்தை வாசித்தார். ஆட்சியரின் இந்தச் செயல் மாணவ, மாணவிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
2015 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி முடித்த மெர்சி ரம்யா, ஈரோடு, விழுப்புரம், குமரி மாவட்டங்களில் உதவி மற்றும் துணை ஆட்சியராகப் பணியாற்றி உள்ளார்.
தொடர்ந்து வணிகவரித் துறை இணை ஆணையராகப் பணியாற்றிய மெர்சி ரம்யா தற்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“