திருச்சி மாவட்டம் துறையூர் வனப்பகுதியில் அமைந்துள்ளது புளியஞ்சோலை சுற்றுலா தலம். இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மலை முகடுகள், அடர்ந்த மரங்கள், காடுகள், சிற்றோடைகள் என காண்போர் மனதை மயக்கும் இடங்கள் ஏராளமாக இங்குள்ளன.
Advertisment
புளியஞ்சோலை சுற்றுலா தலத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வெகுவாக வந்திருப்பதையடுத்து அப்பகுதியில் உள்ள சிறு குறு கடைகளில் வியாபாராம் களைகட்டியுள்ளது. அதேநேரம் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வானிலை மாற்றங்கள் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
மேலும் அக்கினி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலின் தாக்கத்தை குறைக்கும் அளவில் மழை பெய்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். இதனால் புளியஞ்சோலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதிகளில் தொடர் மழை காரணமாக அங்குள்ள மிகப்பெரிய ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த தண்ணீர் அங்கிருந்து சிற்றோடையாக கொல்லிமலை அடிவாரமான புளியஞ்சோலை பகுதியில் உள்ள ஆற்றில் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடுகிறது.
செந்நிறத்தில் ஓடும் இந்த தண்ணீரின் அழகை பார்க்க அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு வருகிறார்கள். மேலும் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் துறையூர், பாலகிருஷ்ணம்பட்டி, தங்க நகர், வைரிசெட்டிபாளையம், சிறுநாவலூர், கோட்டப்பாளையம் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் குறுவை நெல் சாகுபடி மற்றும் நிலக்கடலை பயிர் சாகுபடி உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் விவசாய தொழிலாளர்கள் ஏராளமானோர் வாழ்வாதாரம் பெற்றுள்ளனர்.
இதற்கிடையே நாமக்கல் மாவட்ட வனத்துறை சார்பில் கொல்லிமலை மற்றும் அடிவாரம் புளியஞ்சோலை பகுதிக்கு சுற்றுலா வரும் பொதுமக்கள் கவனமாக செயல்பட பல்வேறு முன்னேற்பாடுகள் மற்றும் எச்சரிக்கை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமாய் கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பாக நீர் நிலைகளுக்கு அருகில் அபாய எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதே போல் பாறைகளிலும், எச்சரிக்கை, கற்கள் நிறைந்த பகுதி, பாறையின் மேல் ஏறி குதிக்க வேண்டாம் எனவும் பெயிண்டால் எழுதப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மது அருந்தியவர்கள் உள்ளே செல்ல அனுமதியில்லை உள்ளிட்ட எச்சரிக்கை வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது மழை அதிகரித்திருப்பதால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு இயல்பை விட தண்ணீர் வரத்து அதிகமாக ஓடும் என்பதால் கொல்லிமலை மற்றும் புளியஞ்சோலை நீர் வரத்து பகுதிகளில் பொதுமக்கள் சில நாட்களுக்கு வரவேண்டாம் என்றும் அப்படியே வரும் மக்கள் ஓடைகளில் குளித்து மகிழ்வது பேராபத்தை விளைவிக்கலாம் என்றும் எச்சரித்திருக்கின்றனர்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil